

திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சி காரணமாக சிறுமலை, கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விவசாயிகளுக்கு முக்கிய `பொதி தூக்கி' போக்குவரத்து வாகனமாக பயன்படும் குதிரைகளுக்கு `டெட்டனஸ்' நோய் பரவுவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர் மற்றும் கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாலை வசதியே இல்லாத மலைக்கிராமங்களில் குதிரைகளை முக்கிய `பொதி தூக்கி' போக்குவரத்து வாகனமாக விவசாயிகள் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயப் பணிகளுக்கு
சிறுமலையில் கடமான்குளம், சிறுமலைபுதூர், தொழுவக்காடு, பசலிக்காடு, காமக்கோடி மற்றும் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குதிரைகளை விவசாயிகள் வளர்க்கின்றனர். இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் எலுமிச்சை, வாழை, காய்கறிகள் மற்றும் மலைப் பயிர்களை பொதிகளாக சுமந்து சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல குதிரைகள் விவசாயிகளுக்கு நிரந்தரப் போக்குவரத்து வாகனமாக பயன்படுகின்றன. குதிரைகள் இல்லையென்றால் இந்த மலைக்கிராமங்களில் விவசாயமே நடைபெறாது.
கடந்த இரு ஆண்டுகளாக நிலவும் வறட்சியால் குதிரைகளுக்குத் தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், காட்டுப் பகுதியில் தீவனம் தேடி மேயும்போது, மண்ணில் இருந்து ஒரு வகை வைரஸ் மூலம் டெட்டனஸ் நோய் குதிரைகளுக்குப் பரவுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு சிறுமலையில் இந்த டெட்டனஸ் நோய் பரவி இரு குதிரைகள் இறந்தன. தமிழகத்தின் மற்ற பகுதியிலும் குதிரைகள் டெட்டனஸ் நோயால் இறந்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக பருவமழைகள் பொய்த்துவிட்டதால், மீண்டும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மீண்டும் குதிரைகளுக்கு டெட்டனஸ் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குதிரைகள் பயன்பாடு குறைந்து வருவதால் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் குதிரைகளைப் பராமரிக்க சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதில்லை.
அதனால், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், மலைவளப் பாதுகாப்பு அமைப்பு (ஹீரோ) நிறுவனர் சசிதரன் மற்றும் அந்த அமைப்பினர், விவசாயிகளுக்கு போக்குவரத்து வாகனமான குதிரைகளைக் காப்பாற்ற களம் இறங்கியுள்ளனர். திங்கள்கிழமை அவர்கள் குதிரைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, 300 குதிரைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமலை மலைவளப் பாதுகாப்பு அமைப்பு (ஹீரோ) நிறுவனர் சசிதரன் கூறியதாவது: சிறுமலையில் மலை விவசாயம் தோன்றிய காலம் முதல் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வறட்சி வரும்போது, குதிரைகளுக்கு டெட்டனஸ் நோய் வந்துவிடுகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குதிரைகளுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடுகிறோம் என்றார். இந்த அமைப்பு மூலம் சிறுமலை குதிரைகளைக் காப்பாற்றியாச்சு.... மற்ற பகுதி குதிரைகளைக் காப்பாற்றுவது யார்...?
கர்ப்பிணி பெண்களுக்கு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிப் பெண்களுக்கு 7, 8, 9 ஆகிய மாதங்களில் இந்நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. இந்நோய் வந்தால் அந்த உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். தமிழகத்தில் குதிரைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றின் முக்கியத்துவம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அதனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றார்.
மனிதர்களுக்கும் டெட்டனஸ் பரவும்
இதுகுறித்து கால்நடை மருத்துவத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: டெட்டனஸ் நோய் முதலில் குதிரையைத்தான் தாக்கும். இந்த நோய் பரப்பும் `கிளாஸ்திரியம் டெட்டனே' பாக்டீரியா கிருமியானது மண்ணில் அமர்ந்து காத்திருக்கும். மண்ணைக் கிளறி குதிரை சாப்பிட்டால் குதிரைகளின் காயத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும். பின்னர் உடலில் புகுந்து விஷத்தைக் கக்கும்.
அந்த விஷம் குதிரையின் உயிரையே கொன்றுவிடும். இந்த நோய் மனிதர்களுக்குப் பரவும். மண்ணில் விளையாடும் குழந்தைகள், பெரியவர்கள் உடல் காயங்களிலும் இந்த `கிளாஸ்திரியம் டெட்டனே' பாக்டீரியா புகுந்துவிட்டால் குதிரையைப்போல் கை, கால்களை அசைக்க முடியாது. வாயைத் திறக்க முடியாமல் மரக்கட்டை குதிரைபோல் ஆகிவிடுவார்கள்.