

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியினர், போட்டி போட்டு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
16-வது மக்களவை
15-வது மக்களவையின் பதவிக் காலம், வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, 16-வது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்க கூடும்.
முறைப்படி தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதேபோல், நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்திலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.
முக்கிய அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன. இதனால், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சுவர் பிடிப்பதில் போட்டி
இதன் ஒரு பகுதியாக, அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கியுள்ளன. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டி போட்டு சுவர்களில் இடம்பிடித்து வருகின்றனர். அரசு சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் சுவர்களில், உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றே விளம்பரம் செய்ய முடியும். ஆனால், இந்த விதிமுறைகளை பற்றிக் கவலைப்படாமல் அரசியல் கட்சியினர், தங்கள் கட்சி விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.
முதல்வருக்கு வாழ்த்து
அ.தி.மு.க.வை பொறுத்த வரை, அக்கட்சியின் பொதுச்செயலா ளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவை வாழ்த்தி, அ.தி.மு.க. வினர் மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதி வருகின்றனர். முதல்வரின் பிறந்த நாள் சுவர் விளம்பரத்தையே, மக்களவைத் தேர்தலுக்கான விளம்பரமாகவும் அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.
வேட்பாளரின் பெயரைக் குறிக்காமல் இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு விளம்பரம் செய்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க. விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.
தி.மு.க. விளம்பரம்
தி.மு.க.வைப் பொறுத்தவரை அக்கட்சியின் 10-வது மாநில மாநாடு வரும் பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுச் சுவர் விளம்பரங்களை தி.மு.க.வினர் மாவட்டம் முழுவதும் செய்துள்ளனர்.
மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்களோடு, உதயசூரியன் சின்னத்தையும் வரைந்து, வாக்காளர்களை கவரும் வகையில் சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இந்த விளம்பரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
விளம்பரம் முக்கியம்
அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர் களை கவர பல்வேறு யுக்திகளை கடைபிடித்தாலும் சுவர் விளம்பரங்கள்தான் முக்கியம். வாக்காளர்களை அதிகம் கவரக்கூடியவை சுவர் விளம்பரங்கள்தான். எனவேதான், இப்போதே சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கிவிட்டோம். தற்போது, முதல்வரின் பிறந்த நாள் விளம்பரங்கள் செய்துள்ளோம். பிப்ரவரி 24-ம் தேதிக்கு பிறகு இதையே தேர்தல் விளம்பரமாக மாற்றிவிடுவோம், என்றார்.
முதல்வர் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. திருச்சி மாநாட்டுக்கு பிறகு, தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவர் விளம்பரத்துக்கு கிடுக்கிப்பிடி
தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள், பொது சுவர்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான சுவர்களில் அனுமதியில்லாமல் விளம்பரங்கள் செய்வதால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதை கட்டு்ப்படுத்த 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்களை எழுத சம்பத்தப்பட்ட சுவர் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று எழுத வேண்டும். பொது சுவர்கள், அரசு கட்டிடங்களில் விளம்பரம் எழுத தடை விதிக்கப்பட்டது.
மீறி சுவர் விளம்பரங்கள் செய்வோ்ருக்கு 6 மாத சிறைத் தண்டனை், ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், பொது இடங்களில் எழுதப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் அனைத்தும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அழிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, விளம்பரங்கள் அழிக்க ஏற்பட்ட செலவு் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.