

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பழனியாண்டவர் கோயில் பின்னால் உள்ள குளம், நுகர் பொருள் வாணிபக் கழக வளாகத்தில் உள்ள குளம் உட்பட அனைத்து குளங்களையும் சீரமைத்து, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பழனி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்னால் ஒரு காலத்தில் அழகிய குளம் இருந்துள்ளது. அந்த குளத்தை வறட்டு குளம் என்று அழைக்கின்றனர். மழைக் காலங்களில், அக்குளத்தில் தேங்கும் நீர், அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மழை நீர் தேங்கிய காலம் மலையேறி, கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக, குளம் அருகே கட்டண கழிவறை கட்டப்பட்டுள்ளது. கழிவறையை பயன்படுத்த ஒரு நபருக்கு கட்டணம் ரூ.5 ஆகும். இக்கழிவறை சற்று வசதியாக இருப்பதால் பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதிலிருந்து வெறியேறும் கழிவுநீரை தேக்கி வைக்க, கழிவு நீர் தொட்டி உள்ளது. இருப்பினும், பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கழிவு நீர் தொட்டி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கழிநீர் தொட்டி நிரம்பி வழிகிறது.
இது குறித்து திருவண்ணாமலை மக்கள் கூறுகையில், ‘‘பழனியாண்டவர் கோயில் அருகே உள்ள கழிவறையை பௌர்ணமி நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், கார்த்திகை தீபத்தில் சுமார் 25 ஆயிரம் பேரும் பயன் படுத்துக்கின்றனர். பக்தர்களின் எண்ணிக்கைக் கேற்ப கழிவுநீர் தொட்டி பெரியதாக இல்லை.
மேலும், கழிவுநீர் தொட்டி நிரம்பியதும் சுத்தம் செய்வதில்லை. பல ஆண்டுகள் அப்படியே கிடக்கிறது. இதனால், கடந்தாண்டு கார்த்திகை தீபத்தன்று கழிவு நீர் தொட்டி நிரம்பி வழிந்து, குளத்திற்கே கழிவு நீர் சென்றுவிட்டது. குளத்தில் கழிவுநீர் தேங்குவதால் நிலத்தடி நீரின் சுவையும் மாறிவிட்டது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வளாகத்தில் ஒரு குளம் உள்ளது. வெளியாட்கள் நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குளம், மெல்ல மெல்ல அழிந்து வருகின்றது. அதாவது, குளத்தில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகிறது.
பழைய டயர் முதல் அனைத்து வகையான கழவுப் பொருட்களையும் கொட்டிப் பாழாக்கிவிட்டனர். ஓரிரு ஆண்டு களில் குளத்தின் சுவடே மாறிவிடும். அந்த அளவிற்கு அசுர வேகத்தில் தூர்ந்து கொண்டு வருகிறது. இதுபோன்ற நிலைமை இந்த இரு குளங்களுக்கு மட்டுமல்ல. கிரிவலப் பாதையில் உள்ள அனைத்துக் குளங்களிலும் இந்த அவலம் நீடிக்கிறது. வீடு களில் மழை நீரை சேகரிக்க, தமிழக அரசு வலியுறுத்துகிறது.
அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுகிறது. அதே போன்று, கிரிவலப் பாதையில் உள்ள பழனியாண்டவர் கோயில் அருகே உள்ள குளம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக வளாகத்திலுள்ள குளம் உட்பட அனைத்து குளங்களையும் சீரமைத்து மழை நீரை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.