

கடலின் அலைகள் ஒவ்வொரு முறையும் கரையை காதலுடன் முத்தமிட வரும்போது அதன் காதில் ஒரு கதையையும் கிசுகிசுத்துப் போகுமாம். சிப்பிகுளம் கடற்கரையிலும் ஒரு கதை இருக்கு. அது மாற்றுத் திறனாளி மரிய சிங்கத்தின் தன்னம்பிக்கை கதை.
தூத்துக்குடியிலிருந்து 27-வது கிலோ மீட்டரில் உள்ள மீனவ கிராம சிப்பிகுளம். இங்குள்ள மீன்பிடித் துறையில் போய் நின்று, ‘மரியசிங்கத்தைத் தெரியுமா?’ என்று கேட்டால், அங்குள்ள அத்தனை பேரும் திரும்பிப் பார்க்கிறார்கள். மாப்பிள்ளை மரிய சிங்கம் அவ்வளவு ஃபெமிலியர்.
போலியோ பாதிப்பு
சிறு வயதில் போலியாவால் முடக்கப் பட்ட மாற்றுத் திறனாளி மனிதர் மரிய சிங்கம். கால்கள் இரண்டும் சூம்பிப் போன தால் கைகளின் ஆதாரம் இல்லாமல் இவரால் சரியாக நிற்கக்கூட முடியாது. நடக்கும் போதும் கால்களுக்குத் துணை யாய் கைகளையும் முட்டுக் கொடுத்துக் கொள்கிறார். இதெல்லாமே தரையில் இருக்கும் வரைதான் கடலுக்குள் இறங்கி விட்டால் மரிய சிங்கம் நிஜ சிங்கம்!
“எல்லா மீனவருக்கும் போல எங்க ளுக்கும் இந்தக் கடல்தான் படியளக்கும் தெய்வம். எனக்கு 12 வயசிருக்கும் போதே எங்கப்பா மோட்சை லியோன் இறந்துட் டாங்க. அப்ப, கடலில் கவிழ்ந்த படகாட் டாம் நின்ன எங்க குடும்பத்த தளராம நின்னு தூக்கி நிறுத்துனது எங்கம்மா செலின்தான். அப்பா போனப்புறம், வீடு, வீடா போயி மீன் வித்தாங்க. எங்களுக்காக அவங்க பட்ட கஷ்டத்தைத் தாங்கிக்க முடியல; நாலாப்போட படிப்பை நிறுத்திட்டேன். ‘படிக்கவுமில்லாம என்னடா செய்யப் போறே?’ன்னு எல்லாரும் கேட் டாங்க. எல்லாத்தையும் கடல் மாதா பாத்துக்குவான்னுட்டு கடலுக்குள்ள இறங்கிட்டேன்.’’ என்று கடலுக்கு வந்த கதையைச் சொன்னது சிங்கம்.
ஆரம்பத்தில், மீன், நண்டு வலைகளை பின்னக் கத்துக் கொண்ட இவர், வீட்டி லேயே அவைகள பின்ன ஆரம்பித்தார். வீட்டுக்குள்ளயே இருந்ததால் அம்மாவிடம் சமையல் படித்தவர், அதையே தொழிலும் ஆக்கினார். நாள் கணக்கில் கடலில் தங்கி மீன்பிடிப்பவர்கள், படகிலேயே சமைப்பார்கள். அவர்க ளுக்குச் சமைத்துக் கொடுப்பதற்காக நான்கைந்து நாள்கள்கூட கடலுக்குள் இருக்கும் மரிய சிங்கம், “அப்பத்தான் எனக்குள்ள அந்த வைராக்கியம் வந்துச்சு’’ என்கிறார்
மேற்கொண்டு, அந்த வைராக்கியத்தை அவரே விவரித்தார். ’’கால் இப்படி இருக்கேன்னு நினைச்சு முடங்கிக் கிடக்காம நம்மளும் கடலுக்குப் போயி சொந்தமா மீன் பிடிக்கணும்னு நினைச்சேன். நானே ஒரு ’தெர்மோகோல்’ படகை செஞ்சுக்கிட்டு கடல்ல இறங்கினேன். சாயங்காலமா கடலுக்குள்ள போயி மிதப்பு வலைய போடுவேன். காலையில போயி மீனை வழிச்சு எடுத்துட்டு வந்துருவேன்.
‘தெர்மோகோல்’ படகுல நாலஞ்சு கடல் மைலுக்கு அப்பால போகமுடியல. அத னால, படகை ஏறக்கட்டிட்டு நாட்டுப் படகு மீனவங்களோட சேர்ந்து மீன்பிடிக்கப் போக ஆரம்பிச்சேன். இப்ப நாலு காசு கிடைக் குது. கடலுக்குப் போனாலும் வலை கட்டு றதையும் விடல. என்னால இப்ப மாசம் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியுது.
குறையே இல்லாத மனிதன் இல்லை
என்னோட உழைப்பையும் தன்னம்பிக் கையையும் பார்த்துத்தான் எனக்குப் பொண்ணு குடுத்தாங்க. எனக்கு கால்கள் இப்படி இருக்கத என் மனைவி மலர் பெரிய குறையா எடுத்துக்கல. இப்ப அவங் களும் என் குழந்தைகளும் எனக்கு ரொம்பவே ஒத்தாசை. இந்த உலகத்தில் குறை இல்லாத மனிதன்னு யாருமே இருக்க முடியாது. அதேசமயம், ஆண்ட வன் நம்மள இப்படிப் படைச்சிட்டானேன்னு சொல்லி அதையே நினைச்சு முடங்கிக்கிடந்தா முன்னேற முடியாது. என்னைப் போல எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு முயற்சி செய்யுங்க; கட்டாயம் முன்னுக்கு வந்துடலாம்’’ பொட்டில் அடித்தாற்போல் சொன்னார் மரிய சிங்கம்.