

வறட்சியை சமாளிக்கும் வகையில், விளாத்திகுளம் பகுதியில் முந்திரி சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு மானிய உதவியுடன் 10 ஹெக்டேரில், 5 விவசாயிகள் முந்திரி பயிரிட்டுள்ளனர்.
வறட்சியில் விளாத்திகுளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாக விளாத்திகுளம் வட்டம் உள்ளது. வடகிழக்கு பருவமழையை நம்பியே இப்பகுதி விவசாயம் உள்ளது. பெரும்பாலும் மானாவாரி சாகுபடிதான் நடைபெறுகிறது.
கடந்த இரண்டு ஆண்டாக வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்த ஆண்டும் பருவமழை பொய்த்துப் போனது. ஆண்டு தோறும் பருவமழை குறைந்து வருவதால் விவசாயப் பரப்பும் சுருங்கி வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் இப்பகுதி விவசாயம் கேள்விக்குறியாகும்.
முந்திரி சாகுபடி அறிமுகம்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விளாத்திகுளம் பகுதியில் முதல் முறையாக முந்திரி சாகுபடியை தோட்டக்கலைத்துறை அறிமுகம் செய்துள்ளது. சூரங்குடியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 ஹெக்டேரில், முந்திரி கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
குறைந்த நீர்
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பழனி வேலாயுதம் கூறியதாவது:
முந்திரியைப் பொறுத்தவரை குறைந்த தண்ணீர் தேவையும், வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. இதனால், இப்பகுதியில் முந்திரியை அறிமுகம் செய்துள்ளோம். கிழக்கு கடற்கரையை ஒட்டிய சூரங்குடியில் செம்மண் பரப்பில் முந்திரி கன்றுகள் முதல் முறையாக நடவு செய்யப்பட்டுள்ளன. 5 விவசாயிகளை தேர்வு செய்து, தலா 2 ஹெக்டேரில் வி.ஆர்.ஐ. 3 என்ற ரக முந்திரி கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ரூ. 20,000 மானியம்
முந்திரி விவசாயிகளுக்கு முதலாண்டில் மானியமாக ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கன்றுகள், இடுபொருட்கள், உரம் வழங்கப்படுகின்றன. பயிரை பாதுகாக்க 2 மற்றும் 3-ம் ஆண்டுகளிலும் மானிய உதவிகள் வழங்கப்படும். 3 ஆண்டுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
அதிக லாபம்
முந்திரி பயிர்கள் 3 முதல் 4 ஆண்டுகளில் பலன் கொடுக்கும். முதல் ஆண்டில் ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 3 கிலோ கிடைக்கும். இது படிப்படியாக உயர்ந்து 7 கிலோ வரை கிடைக்கும். ஒரு கிலோ முந்திரி ரூ. 400 முதல் 500 வரை விலை போகிறது. முந்திரி நீண்ட காலம் பலன் தரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றார் அவர்.
விவசாயி நம்பிக்கை
சூரன்குடியை சேர்ந்த விவசாயி செ.முனி யாண்டி கூறுகையில், “2 ஹெக்டேரில் முந்திரி நடவு செய்துள்ளேன். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜகுமார், விளாத்திகுளம் உதவி இயக்குநர் ஆவுடையப்பன் ஆகியோர் முந்திரி சாகுபடி ஆலோசனைகளை வழங்கினர். நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் அவர்.