Published : 13 Feb 2017 04:42 PM
Last Updated : 13 Feb 2017 04:42 PM

பொன்னியின் செல்வன்: நாவலும், நாடக வடிவமும்

சிங்கப்பூரில் 2017 ஏப்ரல் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி விழாவின் ஒருபகுதியாக கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாடகம் முதல் முறையாக சர்வதேச அரங்கில், சிங்கப்பூர் Esplanade- இல் நடைபெற உள்ளது.

2014, 2015ஆம் ஆண்டுகளில் இந்தியாவில், தமிழகத்தில் 33 முறைகளுக்கு மேல் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தை நிகழ்த்திய S.S.இண்டர்நேஷனல் லைவ் இப்போது சிங்கப்பூரில் Arte Compass நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வனை அரங்கேற்ற உள்ளனர். தி இந்து (தமிழ்) இணையதளம் இந்நிகழ்ச்சியின் ஆன்லைன் பார்ட்னராக உள்ளது.

தமிழ் நாடக உலகில் தனக்கென ஒரு தனித்தன்மையுடன், உலகமெங்கும் பயணித்து புதிய நாடக வடிவை பறைசாற்றிக் கொண்டிருக்கும் Magic Lantern குழுவினர் பொன்னியின் செல்வன் நாவலை மிக அற்புதமான நாடக வடிவமாக வழங்கி கல்கியின் ரசிகர்களை மட்டுமல்லாமல், நாடக ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர். இந்த Magic Lantern இன் திறமையான கலைஞர்களுடன், சிங்கப்பூரில் உள்ள திறமையான கலைஞர்களும் நாடகத்தில் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து பொன்னியின் செல்வன் நாடக இயக்குனர் Magic Lantern பிரவீன் “தமிழ் மொழி மீது பற்றும், நேசமும் கொண்ட சிங்கப்பூர் கலைஞர்களையும் இந்த நாடகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். எனவே இதற்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி 2017 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சிங்கப்பூர் உமறுபுலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்தத் தேர்வில் சிங்கப்பூரின் சிறந்த கலைஞர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பொன்னியின் செல்வன் நாடகத்தில் பங்கேற்று தங்கள் திறனைக் காண்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓர் உணர்வு என்ற அடிப்படையில் நாடகம் என்பதைத் தாண்டி பொன்னியின் செல்வன் தொடர்பான ஒரு நடிப்பு பயிற்சி பட்டறை, நாடக வரலாறு குறித்த கண்ணோட்டம் என சில முயற்சிகளை உமறுபுலவர் தமிழ் மொழி நிலையம் மற்றும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் இணைந்து பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நடத்த உள்ளோம் என்கிறார் S.S.இண்டர்நேஷனல் லைவ் இயக்குனர் இளங்கோகுமணன்.

சிங்கப்பூருக்கு பொன்னியின் செல்வனை அழைத்து வர வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்கியது எங்களது விருப்பம். இன்று, தமிழ் ஆர்வம் கொண்ட பல அறிஞர்கள், கலைஞர்கள் உறுதுணையுடன், தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளான். வளர்தமிழ் இயக்கம், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் என இன்னும் பல புரவலர்கள் பொன்னியின் செல்வனை சிறப்பாக ஆதரிக்கிறார்கள். தமிழ் நாடக ரசிகர்கள் மட்டுமல்ல. அனைவருமே ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத் துணை வரிகளையும் ஏற்பாடு செய்யவிருக்கின்றோம். சிங்கப்பூர், பொன்னியின் செல்வனை இருகரம் நீட்டி வரவேற்கும் என நிச்சயமாய் நம்புகின்றோம் என்கிறார் Arte Compass அகிலா ஐயங்கார் அவர்கள்.

கதைச் சுருக்கம்:

960களில் தஞ்சையை, மன்னன் சுந்தர சோழன் ஆண்டு வந்த போது, அவரின் மகன்கள், ஆதித்ய கரிகாலன் காஞ்சியிலும், அருள் மொழிவர்மன் இலங்கையிலும், மகள் குந்தவை பழையாறையிலும் இருந்து வந்த காலம் அது.

வீர நாராயண ஏரிக்கரை, ஆடி பதினெட்டு கொண்டாட்டங்களில் மூழ்கி கிடந்த போது, ஆதித்ய கரிகாலன் அனுப்பிய இரண்டு செய்திகளுடன் நகரம் நுழைகிறான் வீர இளைஞன் வந்தியத்தேவன். அவன் கொண்டுவந்த இரண்டு செய்திகளில் ஒன்று மன்னன் சுந்தர சோழனுக்கு, மற்றொன்று இளவரசி குந்தவைக்கு. இந்தப் பயணத்தின் போதுதான் சூட்சமமான. நுண்ணறிவு கொண்ட வீர வைஷ்ணவர் ஆழ்வார்க்கடியான் நம்பியைச் சந்திக்கிறான் வந்தியத்தேவன்.

கம்பீரமும், பிரம்மாண்டமும் நிரம்பிய அரண்மனைக்குள் சூதும், வஞ்சகமும் கூடவே நிரம்பியிருக்கிறது. பெரிய பழவேட்டரையர் தனது அளப்பறிய வீரத்துடன், சற்று சூதும் சேர்த்து மண்ணின் மகனான கரிகாலனுக்கு பதில், உறவுக்காரனான மதுராந்தக சோழனுக்கு முடிசூட்ட ரகசியமாய்த் திட்டமிடுகிறார்.

மற்றொரு புறம் அழகும், ஆபத்தும் ஒருங்கே நிரம்பிய நந்தினி, தங்கள் அரசன் வீரபாண்டியனைக் கொன்றதற்காக சோழ சாம்ராஜ்யத்தை வேரறுக்கக் காத்திருக்கும் ரவிதாஸன் தலைமையிலான ஆபத்துதவிகளுடன் சேர்ந்து கரிகாலனை வீழ்த்தத் திட்டம் தீட்டுகின்றாள்.

வந்தியத்தேவன் வழிப்பயணம் ஆபத்து நிறைந்தது என்றால் கூடவே அழகும் நிரம்பியது. அந்த பயணத்தில்தான் இளவரசி குந்தவையைச் சந்திக்கிறான். அவனிடம் மனதை பறிகொடுத்த குந்தவை கூடவே ஒரு கடமையும் கொடுக்கிறாள். குந்தவையின் சகோதரன் அருள்மொழிவர்மனை இலங்கையிலிருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் பொறுப்பை வந்தியதேவன் திறம்பட முடிகின்றான்.

கடம்பூர் மாளிகைக்குத் திரும்பிய கரிகாலன் கால ஒட்டத்தில் தனது பழைய காதலி இப்போது தன் பாட்டனின் மனைவியாகியிருப்பதை அறிகிறான்.

ஒரு புறம் பழைய காதல் துயரம், மறுபுறம் சூழும் சதி. என்னவாயிற்று ஆதித்ய கரிகாலனுக்கு? இலங்கையிலிருந்து நாடு திரும்பிய அருள்மொழிவர்மன் - 'பொன்னியின் செல்வன் மேற்கொண்ட அரசியல் முடிவு என்ன?

பல கேள்விகளுக்கு விடையளித்து, காலம் கடந்த காவியமாய் திகழ்கிறது 'பொன்னியின் செல்வன்’ நாவலும், நாடக வடிவமும்.