

பெண்களை பாலியல் துன்புறுத் தலில் இருந்து காப்பாற்ற நூதன முறையை கையாண்டுள்ளது பொதுப் பணித் துறை. பாலியல் புகார்கள் அதிகமுள்ள தெருக்களின் வாசல்களில் சுற்றுச் சுவர் கட்டி, வாயிற்கதவுகள் வைக்கப்படு கின்றன.
சென்னை இந்திரா நகரில் மத்திய கைலாஷ் சந்திப்புக்கும் டைடல் பார்க் சந்திப்புக்கும் இடையேயான பகுதியில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி, ஆசிய ஊடக கல்லூரி, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களும் ம.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், ரோஜா முத்தையா நூலகம் உள்ளிட்ட வளாகங்களும் உள்ளன. இங்கு வெளி மாநிலங்களிலிருந்து பல பெண்கள் வந்து பயில்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஆசிய ஊடக கல்லூரியில் பயிலும் ப்ரேக்ஷா கூறுகையில், “கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. பிரதான சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும்போது என்ன நேர்ந்தாலும் யாருக்கும் தெரியாது. சமீபத்தில் மனநிலை சரியில்லாத ஒருவர் எங்கள் வளாகத்தில் குதித்து எல்லோரையும் பயமுறுத்தி விட்டார்” என்றார்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களில் 37 செயின் பறிப்பு வழக்குகளும், 4 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன” என்றார்.
தரமணி நிறுவனப் பகுதி (Institutional Area) எனப்படும் இந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன.
நடந்து செல்லும் பெண்களை குறிப்பாக தமிழ் தெரியாத வெளி மாநிலத்து பெண்களை வாகனங்களில் வரும் ஆண்கள் தகாத முறையில் தீண்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டன.
அடர்ந்த மரங்கள் கொண்ட பகுதி என்பதால் தெரு விளக்குகளை கல்லால் அடித்து உடைத்து தவறான செயல்களுக்காக சமூக விரோதிகள் அந்த இடத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்தப் பிரச்சினையை தடுக்க நூதன முறையை கையில் எடுத்துள்ளது பொதுப் பணித் துறை. ராஜீவ் காந்தி பிரதான சாலையிலிருந்து பிரியும் உட்புறச் சாலைகளின் வாசல்களில் சுற்றுச்சுவர் கட்டி, வாசல் அமைத்து வருகிறது. முதல் கட்டமாக மூன்றாவது குறுக்கு தெருவில் ரூ.2 லட்சம் செலவில் வாசல் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறுகையில், “ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மூடிய வளாகங்களாக இருக்கும். பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க இந்த பகுதியையும் அதுபோல அமைக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கைவிடுத்தனர். வாசலில் ஒரு காப்பாளர் பணியமர்த்தப்படுவார்.
இதன் மூலம் உள்ளே வரும் நபர்களையும் வாகனங்களையும் கண்காணிக்க முடியும். மற்ற தெருக்களிலும் விரைவில் இது போன்ற வாசல் அமைக்கப்படும்” என்றார்.