

சென்னை மாநகர காவல் ஆணையராக திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக காவல் துறை முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தலை பாகுபாடு இல்லாமல் நடத்துவதற்காக காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். டிஜிபி ராமானுஜம் மாற்றப்பட்டு, தேர்தல் டிஜிபியாக அனுப் ஜெயிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி, சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட் டுள்ளார். ஆணையராக இருந்த ஜார்ஜ் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு திங்கள்கிழமை வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணிக்கு காவல் ஆணையராக திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த முன்னாள் ஆணையர் ஜார்ஜ், வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டார். அவரை 8 வது மாடியில் இருந்து கீழ்தளம் வரை வந்து ஆணையர் திரிபாதி வழியனுப்பினார்.
பின்னர் கூடுதல் ஆணையர் கள் கருணா சாகர், அபாஷ்குமார், நல்லசிவம், இணை ஆணையர்கள் வரதராஜன், சங்கர் ஆகியோருடன் திரிபாதி ஆலோசனை நடத்தினார். வழக்கமாக சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்கும் அதிகாரி, நிருபர்களுக்கு பேட்டி அளிப்பது வழக்கம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய ஆணையராக பொறுப்பேற்ற திரிபாதி பேட்டி அளிக்கவில்லை.