Published : 10 May 2017 09:37 AM
Last Updated : 10 May 2017 09:37 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: தமிழகக் கல்வித் தரத்தின் வீழ்ச்சியை மறைக்க முடியாது!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ‘கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்’ என்று கடுமையாகச் சாடுகிறார் பேராசிரியர் கல்விமணி. அப்படிச் சொல்லக் காரணம் என்ன என்ற கேள்வியாடு அவருடன் உரையாடினேன். இனி அவரது பேட்டி.

நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களா?

நீட் தேர்வு தேவையா, இல்லையா என்ற அடிப்படையில் நான் இந்தப் பிரச்சினையை அணுகவில்லை. எப்படியோ, நீட் தேர்வு வந்துவிட்டது, அதை எப்படி அணுகுவது என்று பார்க்க வேண்டும். நீட் தேர்வு வருவதற்குமுன்பு மட்டும் நமது மருத்துவக்கல்லூரிகளில் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இடம் கிடைத்ததா? கடந்த 2014-15ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்ற புள்ளிவிவரம் இது. மொத்த இடங்கள் 2975. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்தது வெறுமனே 4.5% இடங்களே. எஞ்சிய 95.43% அதாவது 2,839 இடங்களைப் பிடித்தது தனியார் பள்ளி மாணவர்கள்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுடன் பேசினீர்களா, என்ன சொன்னார்கள்?

50 சதவிகித கேள்விகள் எளிதாக இருந்தன, எஞ்சிய 50 சதவிகிதம் கடுமையாக இருந்தன என்கிறார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு விளங்காமல் இருக்கலாம், ஆனால் கல்வி அதிகாரிகளுக்குத் தெரியும். அடிப்படையில் மேல்நிலைக்கல்வி என்பது, பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டுமே சேர்ந்ததுதான். ஆனால், நாம் பனிரெண்டாம் வகுப்புப் பாடத்தை 2 வருடமாக நடத்திவிட்டு, மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதன் விளைவை இன்று சந்திக்கிறோம்.

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வித்தரம் மோசம் என்று கூறப்படுவது பற்றி...

பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளை பள்ளிகளில் சேர்ப்பதா கல்லூரிகளில் சேர்ப்பதா என்று தமிழகத்தில் பெரிய விவாதம் நடந்தது. பள்ளி ஆசிரியராக இருந்து அமைச்சரானவரான அன்றைய கல்வியமைச்சர் அரங்கநாயகம், ஆசிரியர்களுக்குச் சம்பளம் குறைவாக கொடுப்பதற்காக அதை பள்ளியில் இணைத்துவிட்டார். இன்று அனுபவிக்கிறோம். ஆந்திராவில் புத்திசாலித்

தனமாக இந்த இரண்டாண்டுப் படிப்பைத் தனியாகப் பிரித்து ஜூனியர் காலேஜ் என்று தொடங்கினார்கள். அங்கே இரண்டாண்டும் பொதுத்தேர்வு நடத்துகிறார்கள். அதன் விளைவாகத்தான் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும் ஆந்திர மாணவர்கள் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தனியார்ப் பள்ளிகளின் தேர்ச்சிக்குக் காரணம் காப்பியடிப்பதுதான் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், தாளாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள்தான். அவர்களுக்கும் இன்றைய அதிகாரிகளுக்கும் இடையே ஓர் இணக்கமான தொடர்புண்டு. பொதுத்தேர்வு கண்காணிப்பாளர்களாக அவர்கள் சுட்டிக்காட்டும் நபரே அனுப்பிவைக்கப்படுவார். காப்பியடித்து 100% தேர்ச்சி பெறுவதுடன், மாநில அளவில் ரேங்க் எடுக்கவும் இது உதவுகிறது. எனவே, ‘காப்பியடிக்கும் கலாச்சாரத்தைஒழிப்போம், கல்வித்தரத்தை உயர்த்துவோம்’ என்றொரு இயக்கத்தை 1998ல் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தினோம். அப்போது சிஇஓவாக இருந்த இன்றைய பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரது கெடுபிடியால், மாவட்டத்தின் ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதமும் 30% குறைந்துவிட்டது.

அரசுப் பள்ளிகளின் நிலைபற்றி...

அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுவது என்பது, ஏழை எளிய மக்களின் படிப்பிற்கு சமாதி கட்டுவதற்குச் சமம். எனவே, தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிற கல்விக்கொள்கைகளை விட்டொழித்து அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x