

இந்தியக் குடியரசின் 14-வது குடியரசுத் தலைவராகப் பதவி வகிக்கும் தகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு இருக்கிறதா இல்லையா என்பது வெறும் கல்வித்தகுதி தொடர்பான கேள்வியே அல்ல. எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பொது வாழ்வில் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளை அவருடைய ஆதரவாளர்கள் பட்டியலிடக்கூடும்; 2007-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரதிபா பாட்டீல் முன்மொழியப்பட்டபோது, அவருடைய குடும்பத்தார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததால், தர்மசங்கடத்தில் ஆழ்ந்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடைய தகுதிகளை இப்படித்தான் பட்டியலிட்டனர்.
நான் சார்ந்திருந்த செய்தித்தாள், பிரதிபா பாட்டீல் கடந்து வந்த பாதைகளில் இருந்த ஊழல்களைப் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டது. சர்க்கரைத் தொழில், கூட்டுறவு வங்கிகள், தனியார் கல்வி நிறுவன நிர்வாகம் தொடர்பானவை அந்தக் கட்டுரைகள். இந்த எதிர்ப்பிரச்சாரத்தை நிறுத்துவதற்காக ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூடை நிறைய மாம்பழங்களுடன் என் வீட்டுக்கு வந்தார். “உங்களுடைய நிருபர்கள் தரும் தகவல்கள் எல்லாம் சரியானவை” என்றார் அவர். “அப்படியானால் நாங்கள் ஏன் அதை நிறுத்த வேண்டும்?” என்று கேட்டேன். “நல்லதோ, கெட்டதோ வரும் ஜூலை 25 வந்தால் அவர் குடியரசுத் தலைவராகிவிடுவார். கடந்த காலத்தைக் கிளறி, குடியரசுத் தலைவராக வரப்போகிறவர் மீது சேற்றை வாரி வீசுவதால் என்ன நன்மை?” என்று பதிலுக்குக் கேட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பிரதிபாவைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை இருந்தது. அவரை நான் உட்பட பல கட்டுரையாளர்கள் கடுமையாக எதிர்த்தோம்.
பிரதிபாவை விட கோவிந்துக்கு நேரடி அரசியல் அனுபவம் குறைவாக இருக்கலாம், கல்வித் தகுதியில் அவரை விட மேல். கோவிந்தும் அவருடைய குடும்பத்தினரும் நேர்மையானவர்கள். அவருடைய சுய விவரணைகளில் பல அம்சங்கள் குறைவாக இருப்பதால் அவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தக் கூடாது என்று கூறக்கூடாது. மிகச் சிறந்த அறிவுஜீவியான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும், சமயக் கல்வி தவிர முறையான கல்வி அதிகம் பெற்றிராத ஜெயில் சிங்கும் குடியரசுத் தலைவர்களாக இருந்துள்ளனர். டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரணாப் முகர்ஜி, ஆர்.வெங்கட்ராமன், நீலம் சஞ்சீவ ரெட்டி, சங்கர் தயாள் சர்மா ஆகியோர் அரசியல் ஜாம்பவான்கள். வி.வி.கிரி வலுவான அரசியல் பின்புலம் அற்றவர். மிகவும் மதிக்கப்பட வேண்டிய முஸ்லிம் அரசியல்வாதி டாக்டர் ஜாகீர் உசைன், முழுதாக மறக்கப்பட வேண்டிய பக்ருதீன் அலி அகமதுவும் பதவி வகித்துள்ளனர். வெளியுறவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கே.ஆர்.நாராயணன், அறிவியல் துறையில் பணியாற்றிய டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறந்த பணிக்கலாச்சாரத்தில் உருவானவர்கள்.
இதுவரை இப்பதவியை வகித்தவர்கள் அனை வரும் பதவியின் மாண்பை காப்பாற்றியுள்ளனர். இருவர் மட்டும் விதிவிலக்கு. நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரச் சட்டங்களில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டார் அகமது. சிறிது காலத்துக்கு, ராஜீவ் காந்திக்கு எதிராக சதித்திட்டம் வகுக்கும் இடமாக ராஷ்டிரபதி பவன் மாற அனுமதித்தார் ஜெயில் சிங்.
நினைவில் வைக்கக்கூடியவர்கள் யார், மறக்கப்படக் கூடியவர்கள் யார் என்று அவர்கள் செய்த செயல்களைக் கொண்டு உரசிப் பார்க்கும்போதுதான் பதவி வகித்தவர்களுக்கிடையிலான வேறுபாடு தெரியவரும். இதற்காக 1950-கள், 1960-கள் காலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சியை உடைத்து அதன் மூத்த தளகர்த்தர்களை இந்திரா காந்தி செல்வாக்கிழக்க வைத்த காலத்தில் வி.வி.கிரி முழு பதவிக்காலத்தையும் வகித்தார். நெருக்கடி நிலை நினைவுகூரப்படும்போதெல்லாம் பக்ருதீன் அலி அகமதுவும் நினைக்கப்படுவார்.
நினைவில் உள்ளவர்களில் முதலிடம் வகிப்பவர் அப்துல் கலாம். பிஹாரில் உரிய நேரத்தில் தலையிட்டார், சில நீதிபதி நியமனங்கள் தொடர்பாக உரிய பதிவுகளைச் செய்தார். ஆர்.வெங்கட்ராமனும் சங்கர் தயாள் சர்மாவும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரத்திலும் அரசியல் நிலைத்தன்மை கெடாமல் பாதுகாத்தனர். ராதாகிருஷ்ணன் பதவிக்குப் பெருமை சேர்த்ததைப்போல, கே.ஆர். நாராயணனும் நடந்துகொண்டார்.
நம்முடைய குடியரசுத் தலைவர்கள் அவர்களுக்கிருந்த நற்பண்புகள் திறமைக்காக நினைவுகூரப்படுவது வரலாற்றைப் புரட்டினால் புரியும். பதவிக்குரிய ஆளுமை கலாம், வெங்கட்ராமன், நாராயணன் போன்றோருக்கு இயல்பாக இருந்தது. வி.வி. கிரி, அகமது, பிரதிபா பாட்டீலுக்கு இல்லை.
போதிய ஆதரவு இருந்தால் ஒருவரால் எந்தப் பதவிக்கும் வர முடியும் என்பதே ஜனநாயகம். அந்தப் பதவிக்குரிய கண்ணியம், தெளிவு, நடத்தை இருந்தால் மிகச் சிறந்த ஆளுமையாக உருவாகலாம். நம்முடைய அரசியல் சட்டப்படி மாநில ஆளுநரைவிட குடியரசுத் தலைவர் பதவி தானாகச் செயல்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்கள் மத்திய அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப அரசியல் விளையாட்டுகளை அரங்கேற்றலாம், உண்மையான அதிகாரத்தைக்கூடச் செலுத்த முடியும். குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் சட்டத்தின் காப்பாளர், குடியரசின் மாண்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பாளர். கோவிந்த் எப்படி இருப்பார் என்று இப்போதே ஊகிப்பது சரியல்ல.
பின்குறிப்பு: ஜெயில் சிங்கைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லிவிட்டு அவருடைய நகைச்சுவை உணர்வு பற்றிக் குறிப்பிடாமல் விடுவது சரியாகாது. 1987 பிப்ரவரியில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் இந்தியா வந்தார். ஜெயில் சிங்கையும் சந்தித்தார்.
“எங்கள் நாட்டிலும் பிரதமர் (ஜுனேஜா) என்ற பதவியில் ஒருவர் இருக்கிறார், அவர் உங்களைப் போல அதிகாரம் ஏதுமில்லாத அலங்கார பொம்மை” என்று ஜெயில் சிங்கைப் பார்த்து கேலி பொங்கக் கூறினார் ஜியா உல் ஹக். உடனே ஜெயில் சிங், “என்னுடைய பதவிக்காலம் எப்போது முடிவடையும் என்று (ஜனநாயகம் காரணமாக) நிச்சயமாக எனக்குத் தெரியும், உங்களுக்குத்தான் அது நிச்சயமில்லை” என்று பதிலுக்கு சூடாகக் கொடுத்தார்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி