

காமன்வெல்த் மாநாட்டின் மூலம் இலங்கை அரசு அள்ளிச்சென்றிருக்க வேண்டிய புகழையும் பெருமையையும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பறித்துச்சென்றுவிட்டார் என்பதே உண்மை.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் - அதாவது, 2009 மே மாதவாக்கில் இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு எதிர்கொண்டிருக்கிறது. அவற்றைச் சமாளிக்கவும் சர்வதேசத்திடம் நல்ல பெயர் எடுத்து கவனத்தை ஈர்க்கவும் 23-வது காமன்வெல்த் மாநாட்டை இலங்கை அரசு நடத்தியது. ஆனால், நடந்ததோ வேறு.
யாழ்ப்பாணப் பயணம்
மூன்று நாள் மாநாட்டின் மூலம் இலங்கை பெற்றிருக்க வேண்டிய புகழையும் பெருமையையும் தனது 3 மணி நேர யாழ்ப்பாணப் பயணத்தின் மூலம் பிரிட்டன் பிரதமர் கேமரூன் அள்ளிச்சென்றுவிட்டார்.
நவம்பர் 15-ம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்துசேர்ந்த கேமரூன், அன்று பிற்பகலில் யாழ்ப்பாணம் கிளம்பினார். யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர், இந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ராணுவத் தாக்குதலுக்கு உள்ளான உதயன் நாளிதழ் அலுவலகத்துக்கு வந்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் பேசி நிலைமைகளைப் புரிந்துகொண்டார். அதன்பிறகு, ராணுவத்திடம் தங்கள் நிலங்களைக் கடந்த 23 ஆண்டுகளாகப் பறிகொடுத்துவிட்டு, சபாபதிப் பிள்ளை நலன்புரி மையத்தில் தங்கியிருக்கும் ‘சொந்த நாட்டு அகதி’களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சர்வதேச விசாரணை
இந்த அதிரடிப் பயணத்துக்குப் பிறகு, அதிரடியாக அவர் ஒன்றைச் செய்தார். அடுத்த நாள் நவம்பர் 16-ம் தேதி கொழும்பில் உள்ள பண்டாரநாயகா சர்வதேச மண்டபத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கேமரூன், “போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசு 2014 மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறினார். “அவ்வாறு முடிக்கவில்லையெனில், ஐ.நா-வின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச விசாரணைக்கு இலங்கை உட்பட வேண்டும்” என்றார்.
“இலங்கையின் எதிர்காலம் பற்றி நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன். மனித உரிமை மீறல், கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் தவிர்த்துவிட முடியாது. இவை குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என்றும் கேமரூன் குறிப்பிட்டார்.
கொந்தளிப்பும் வரவேற்பும்...
கேமரூனின் இந்த அறிவிப்பு, சிங்கள அரசியல்வாதிகளிடம் பெரும் கொந்தளிப்பையும் தமிழின அரசியல்வாதிகளிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.
“இலங்கைக்குள்ளேயே வந்து இலங்கை அரசை எச்சரிக்க யார் இந்த கேமரூன்? இவரது ஆட்டத்துக்குக் காரணம், புலம்பெயர்ந்து இப்போது பிரிட்டனில் வசித்துவரும் தமிழர்கள்தான்’’ என்று கொந்தளித்தார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் குணதாஸ அமரசேகர.
“பிரிட்டன் பிரதமரின் யாழ்ப்பாணப் பயணம் குறித்தும் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்தும் மகிழ்ச்சி அடையவில்லை” என்று பி.பி.சி. செய்தியாளர்களிடம் கூறினார் இலங்கைப் பிரதமர் ஜெயரத்ன.
“பிரிட்டன் பிரதமர் கேமரூன் கூறியபடி சர்வதேச விசாரணையை நாங்கள் நடத்தப்போவதில்லை’’ என இலங்கையின் பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டார்.
“வெள்ளைக்கார ஆதிக்க மனோபாவம் கொண்ட கேமரூனின் தாளத்துக்கு ஏற்ப இலங்கை ஆடாது’’ என்று ஆவேசமாகப் பேசினார், சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.
“எந்தக் காலத்திலும் கேமரூன் கோரிக்கையை ஏற்க மாட்டோம். அப்படி ஏற்பதற்கு நாங்கள் இளித்தவாயர்கள் அல்லர்’’ என்றார் இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா.
கால அவகாசம் தேவை
ஆக மொத்தத்தில், சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் எரிமலை போன்ற கொந்தளிப்பு ஏற்பட்டது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, காமன்வெல்த் மாநாட்டு நிறைவு நாளில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே, “இது 30 ஆண்டுகால பிரச்சினை. ஒரே நாள் இரவில் முடியக்கூடியதல்ல. முதலில் மக்கள் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆனால், ஒரு வாரத்தில் செய்து முடியுங்கள்; 3 மாதங்களில் செய்து முடியுங்கள் என்று கூறுவது அநீதியாகும். நாங்கள் செய்வோம். ஆனால், அதற்கு கால அவகாசம் தேவை” என்றார்.
சில யோசனைகள்
இந்த வாதப் பிரதிவாதங்களால் சில புதிய யோசனைகளும் இலங்கைக்குக் கிடைத்தன. காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா, “காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை மேற்கொள்ளலாம். அதுவும் சர்வதேச விசாரணை போன்றதுதான்” என்று யோசனை தெரிவித்தார். தென்னாப்பிரிக்க அதிபர் சுமோ, “எங்கள் நாட்டில் வெள்ளையர் ஆட்சி முடிவுக்கு வந்ததும் நாங்கள் அமைத்த உண்மையைக் கண்டறியும் ஆணையம்போல் இலங்கையும் அமைத்து விசாரணையை மேற்கொள்ளலாம். இது இரு தரப்பிலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக எங்கள் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளத் தயார்” என்றார்.
நினைத்தது நடக்கவில்லை
மொத்தத்தில், கேமரூனின் யாழ்ப்பாணப் பயணம், அவரது செய்தியாளர் கூட்டப் பேச்சு ஆகியன குறித்த விவாத மேடையாக 3 நாள் காமன்வெல்த் மாநாடு மாறியது. எதை எண்ணிக் கோடிக் கணக்கில் செலவழித்து இந்த மாநாட்டை இலங்கை நடத்தியதோ அது நடக்கவில்லை.
பிறந்தநாள்
காமன்வெல்த் மாநாட்டுக்கு அடுத்த நாள் தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த ராஜபக்சேவுக்கு எந்த அனுசரணையான சமிக்ஞைகளையும் காமன்வெல்த் தரவில்லை. மாறாக, கேமரூன் ரூபத்தில் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக மாறிற்று. இந்த 23-வது காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த தலைவர்களும் மிகக் குறைவே. மொத்தம் 53 நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் கொழும்பு மாநாட்டுக்கு 23 நாடுகளின் தலைவர்களே வந்திருந்தனர். 2007-ல் உகாண்டாவில் நடைபெற்ற மாநாட்டுக்குக்கூட 36 நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சொன்னபடி செய்தவர்
இலங்கை பற்றி கேமரூன் விவாதத்துக்குரிய கருத்துகளை முன்வைப்பதற்கு முன்பே, காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரியது. ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்த கேமரூன், “ இது இருதரப்பு பேச்சுவார்த்தை அல்ல, சர்வதேச மாநாடு. இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதற்குப் பதில், அதில் பங்கேற்று, பிரிட்டனின் எண்ணங்களை வெளிப்படுத்தலாம். அதுதான் சரியாக இருக்கும்” என்றார். சொன்னபடி கேமரூன் செய்துவிட்டார். சொன்னபடி இலங்கை செய்யுமா என்பதுதான் கேள்வி.
எப்படியிருந்தாலும் மார்ச் மாதம் இலங்கைக்குத் தலைவலி மாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.