Published : 18 Jan 2014 07:45 PM
Last Updated : 18 Jan 2014 07:45 PM

செடி, குப்பைகளால் மாசடைந்துவரும் கொடைக்கானல் ஏரி

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் 151 ஆண்டு பழமையான ஏரியானது பராமரிப்பு இல்லாமல், துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

20 சுற்றுலா இடங்கள்

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சிறந்த சர்வதேச கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், தூண் பாறைகள், குணா குகைகள், மதிகெட்டான் சோலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, கொடை ஏரி படகுத் துறை உள்பட 20 சுற்றுலா இடங்கள் உள்ளன.

இவற்றில் கொடைக்கானல் ஏரி, அவற்றில் உள்ள படகு சவாரி குழந்தைகள் முதல் பெரியோர் வரையிலான சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது. செயற்கை ஏரியான இந்த கொடைக்கானல் ஏரியை கடந்த 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் விண்மீன் வடிவத்தில் அமைத்துள்ளனர். 151 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

கழிவுநீர், குப்பைகள் கலப்பு

கடந்த ஆண்டு இந்த ஏரி தண்ணீர் வற்றி பாழடைந்து காணப்பட்டது. இதையடுத்து, கொடைக்கானல் நகராட்சி கடந்த ஆண்டு தூர்வாரி பராமரித்தது. அதன்பின் இந்த ஏரியை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டுவிட்டது. ஏரி இன்னும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வராததால், கோடை விழாவுக்கு மட்டும் ஆண்டுதோறும் பராமரிக்கப்படுகிறது. அதனால், தற்போது செடி, கொடிகள் நிறைந்து கொடைக்கானல் ஏரி மீண்டும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. செடிகள் அதிகளவு வளர்வதற்கு ஏரியில் கலக்கும் கழிவுநீர், குப்பைகளே முக்கிய காரணம்.

அவசர கோலம்

கடந்த ஆண்டு நகராட்சி ஏரியை முழுமையாக தூர்வாராமல் அவசர கோலத்தில் மேலோட்டமாக செடிகளை அறுத்துவிட்டு அரையும்குறையுமாக பெயரளவுக்கு தூர்வாரியது. அதனால், தற்போது ஏரியில் ஆகாயத்தாமரைச் செடிகளைப்போல, புற்கள் படகுத் துறையை மறைக்கும் அளவுக்கு படர்ந்து செழித்து வளர்ந்துள்ளன.

இந்த செடிகளின் ஆக்கிரமிப்பால் கொடைக்கானல் ஏரியில் ஊற்று தண்ணீர் சுரப்பது நின்றுபோய், ஏரி தண்ணீர் வற்றி வருகிறது. கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் படகு சவாரி செய்யவரும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் வாசிகள் கூறியது:

கடந்த 151 ஆண்டுகளாக கொடைக்கானல் ஏரி முக்கிய சுற்றுலா அடையாளமாக விளங்குகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் தற்போதுதான் கொடைக்கானல் ஏரி தண்ணீர் மாசு அடைந்து அதிகளவு துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அதனால், நகராட்சி மற்றும் சுற்றுலா துறை இணைந்து ஏரியைப் பராமரித்து அதன் பொலிவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சித் தலைவர் (பொ) எட்வர்டு கூறியது:

இன்னும் பத்து நாளில் ஏரியைப் பராமரிக்கும் பணி தொடங்கிவிடும். ஏரி இன்னும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வராததால் முழுமையாக அவற்றைப் பராமரிக்க முடியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x