Published : 22 Sep 2016 11:03 AM
Last Updated : 22 Sep 2016 11:03 AM

நம்மைச் சுற்றி: பணம் எனும் எமன்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், தனியார் மருத்துவமனைக்குப் பணம் கட்ட முடியாமல், வயிற்றில் இறந்த சிசுவைச் சுமந்து அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் ஓர் இளம் பெண். 22 வயதேயான சரஸ்வதியின் வயிற்றில் இருந்த எட்டு மாத சிசு இறந்து ஐந்து நாட்கள் ஆனது ‘ஸ்கேன்’ மூலம் தெரியவந்தது. ஆனால், அதை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க தனியார் மருத்துவமனை கேட்ட பணம், அவரது கணவர் குலாப் தாஸிடம் இல்லை.

அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்துக்கும் அவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. வெவ்வேறு மருத்துவமனைகளில் முயன்று, மீண்டும் அதே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். பணம் கட்டினால்தான் அறுவை சிகிச்சை என்று மருத்துவமனை கெடுபிடி காட்ட, இறுதியில் தொற்று உடலில் பரவி, சரஸ்வதி மரணமடைந்தார். மனிதாபிமானமற்ற இந்தச் செயல் தொடர்பாக விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

கைகொடுக்கும் இணையம்

ஆவணப்பட இயக்குநர் ஜார்னா ஜவேரி இயக்கிய ‘சார்லி அண்ட் தி கொகா கோலா கம்பெனி’ எனும் ஆவணப்படம், மக்கள் பார்வைக்குத் தகுதியில்லாதது என்று கூறி, அனுமதி மறுத்திருக்கிறது திரைப்படத் தணிக்கை வாரியம். தவறான தகவல்கள் மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டது. குளிர்பானத் தயாரிப்புக்காக, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி பகுதியில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதாகவும், குளிர்பானத் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப் பொருட்களால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் உண்டு. அவற்றின் அடிப்படையில் இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். 150 நிமிடங்கள் கொண்ட இப்படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு அதை எப்படியேனும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் முதல் பாதியை ‘யூட்யூ’பில் பதிவேற்றம் செய்திருக்கிறார் ஜவேரி.

வேற்றுக் ‘கிரக’வாசிகள்

தகவல் அறியும் உரிமையை (ஆர்.டி.ஐ.) பயன்படுத்தி, குசும்பான கேள்விகள் கேட்பவர்களும் உண்டு. மும்பையைச் சேர்ந்த அஜய் குமார் அப்படிப்பட்டவர். ‘வேற்றுக்கிரகவாசிகள் நுழைந்துவிட்டால், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் துணையில்லாமல் அவர்களை (அவற்றை?) எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறதா?’ என்றொரு வித்தியாசமான கேள்வியை உள்துறை அமைச்சகத்துக்குத் தட்டிவிட்டார்.

வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய ‘மென் இன் பிளாக்’ திரைப்படத்தில் நடித்தவர் வில் ஸ்மித் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு ‘இந்தக் கேள்வி ரொம்ப அறிவியல்பூர்வமானது. இதுபோன்ற கேள்விகள் நமது அதிகாரிகளின் நேரத்தை வீணடிக்கின்றன’ என்று ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார். விடுவார்களா ட்விட்டர்வாசிகள். “இந்த விஷயம் வில் ஸ்மித்துக்குத் தெரியுமா?” என்றெல்லாம் கேட்டு கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x