Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

திருவண்ணாமலை: வெற்றி நடைபோடும் சிறிய ரக மின்மாற்றி
விவசாய மின் இணைப்பில் புதிய புரட்சி

மின்வெட்டு என்ற சொல்... தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. விவசாயம், சிறு தொழில்கள், நெசவு தொழில்கள் அடியோடு முடங்கியது. மின்சார வாரியம் நடத்திய ஆய்வில், மின்சாரம் கொண்டும் செல்லும் பாதையில் ஏற்படும் மின் இழப்பு, பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டது.

இதுதவிர, மின்மாற்றிகளுக்கு இடையே உள்ள இடைவெளி, தரமற்ற மின் வயர்கள், மின் மோட்டார்கள், மின் சாதனங்கள் ஆகியவை ஒருபுறம் என்றாலும், ‘கொக்கி’ போட்டு திருடும் முறையும் பற்றாக்குறைக்கு அதிக பங்கு வகிக்கிறது.

சிறிய ரக மின்மாற்றி

அதன்படி, விவசாய மின் இணைப்புக்கு 16 கே.வி.(ரூ.71,159) மற்றும் 25 கே.வி.(ரூ.91,734) என்று சிறிய ரக மின்மாற்றிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. காப்பரில் காயில்கள் உள்ளதால், அடிக்கடி பழுதாவது தவிர்க்கப்படும். 5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் இணைப்புகளை 16 கே.வி.,யில் அதிகபட்சம் 3-ம், 25 கே.வி.யில் அதிகபட்சம் 4 இணைப்பும் கொடுக்கலாம். ஏற்கெனவே, பயன்பாட்டில் உள்ள மின் கம்பத்தில் எளிதாகப் பொருத்தலாம். பராமரிக்கும் முறையும் எளிது.

தி.மலையில் அறிமுகம்

சிறிய ரக மின்மாற்றிகளை பயன்படுத்தும் திட்டம், தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக அறிமுகம் செய்து கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், கொட்டையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொண்டமானூர் பீடர் இணைப்பில் உள்ள கொட்டையூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், தொண்டமானூர் ஆகிய 4 கிராமங்களில் சோதனை முயற்சி வெற்றி அடைந்துள்ளது. 130 சிறிய ரக மின்மாற்றிகளை பொறுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இதுவரை, 56 சிறிய ரக மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளது.

மீட்டர் பொருத்துவது ஏன்

மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மின் இழப்பை கண்டறியும் முயற்சி நடைபெறுகிறது. இதற்காக, கொட்டையூர் துணை மின் நிலையத்தில் இருந்து தொண்டமானூர் பீடருக்கு செல்லும் மின் பாதையில் மீட்டர் பொருத்தியுள்ளோம். அதேபோன்று, ஒவ்வொரு சிறிய ரக மின்மாற்றியிலும் மீட்டர் பொருத்தி வருகின்றோம். 130 சிறிய ரக மின்மாற்றிகள் பொருத்தப்பட்ட பிறகு, மின் இழப்பு விவரம் தெரியவரும். நாங்கள் நடத்தி வரும் மின் கணக்கீடு ஆய்வில், மின் இழப்பு ஏற்பட வாய்ப்பு முற்றிலும் குறைவு என்று கருதுகிறோம். மின் அளவீட்டை கணக்கிடத்தான் என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். பொங்கலுக்கு பிறகு, மீதமுள்ள இடங்களில் மின்மாற்றிகள் பொருத்தப்படும்’’ என்றனர்.

மின் மோட்டாருக்கு பாதிப்பில்லை

விவசாயிகள் கூறுகையில், ‘‘சிறிய ரக மின்மாற்றியால் பலன் உள்ளது. குறைந்த மின் அழுத்தம் மற்றும் உயர் மின் அழுத்தம் ஏற்படுவதில்லை. ஓரே சீராக மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. சிறிய ரக மின்மாற்றியை நாங்கள் வரவேற்கின்றோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x