Last Updated : 29 Jan, 2014 09:08 PM

 

Published : 29 Jan 2014 09:08 PM
Last Updated : 29 Jan 2014 09:08 PM

`சிண்டிகேட்’ அமைத்து விலை குறைத்த வியாபாரிகள்: கடும் நஷ்டத்தில் வாழை விவசாயிகள்

களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி வட்டாரத்தில் நேந்திரன் வாழைத்தார் அறுவடை விரைவில் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ. 40 என்று இருந்த விலை, தற்போது ரூ. 20 என குறைந்து உள்ளது. வியாபாரிகள் `சிண்டி கேட்’ அமைத்து விலை குறைத்துள் ளதால், வாழை விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லுக்கு அடுத்ததாக பணப்பயிரான வாழை பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, பணகுடி முதல் திருக்குறுங்குடி, மாவடி, டோனாவூர், களக்காடு, பத்மநேரி, புலவன்குடியிருப்பு, சேரன்மகாதேவி வரையான 10,000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்களில், அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளத்தில் அதிகம் விரும்பப்படும் நேந்திரன் ரக வாழைகளே பயிரிடப்படுகின்றன. பலத்த மழை, சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கை பேரிடர்களைத் தாண்டி, 11 மாதங்களில் இந்த ரக வாழைகள் அறுவடைக்கு தயாராகும்.

கேரளத்துக்கு பயணம்

கேரள வியாபாரிகள் களக் காடு, அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளுக்கு வந்து தோட்டங்களையும், அவற்றில் விளைந்துள்ள காய்களின் தரத்தையும் பார்த்து, நேரடியாக விலை நிர்ணயம் செய்து வாழைத் தார்களை, மொத்தமாக வாங்கிச் செல்வர்.

அவ்வாறு கேரளத்துக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் கொண்டு செல்லப் படும் நேந்திரன் வாழைத்தார்களில் இருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் வகைகள், அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்று மதியாகின்றன.

கேரளச் சந்தையை நம்பி, களக்காடு, சிதம்பராபுரம், பத்தை, மஞ்சுவிளை பகுதியில் மட்டும், 500 ஏக்கருக்கு மேல் நேந்திரன் வாழைகள் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகின்றன. மழை பொய்த்தாலும், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் தண்ணீரை இரைத்து, விவசாயிகள் பயிர்களை காப்பாற்றுகிறார்கள்.

விலை வீழ்ச்சி

களக்காடு பகுதியில் அடுத்த மாத இறுதியில் இருந்து வாழை த்தார் அறுவடைத் தொடங்க உள்ளது. சேரன்மகாதேவி, பத்தமடை, வீரவநல்லூர் போன்ற அம்பாச முத்திரம் வட்டாரப் பகுதிகளில் தாமிரவருணி பாசனத்தில் பயிரிட ப்பட்டுள்ள நேந்திரன் வாழைத்தார் அறுவடைப்பணி தற்போது நடை பெற்று வருகிறது.

ஆனால், விவசாயிகள் எதிர் பார்த்தபடி வாழைத்தார்க ளுக்கு விலை கிடைக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது, கேரள வியாபாரிகள், சிண்டிகேட் அமைத்து, கிலோ ரூ. 20 என்று பாதியாக விலையைக் குறைத்து, கொள்முதல் செய்கின்றனர்.

`ராஜவாழை’க்கு சோதனை

திருக்குறுங்குடி பகுதி வாழை விவசாயியும், மாநில விவசாய சங்க இணைச் செயலருமான பி. பெரும்படையார் கூறியதாவது:

நேந்திரன் ரகத்தில் 1,000 வாழைக்கன்றுகளை பயிரிட்டால் அதில், 980 வாழைகள் வரை தார்கள் அறுவடை செய்யப்படும். இதனால், இந்த வகை வாழைகளை `ராஜவாழை’ என்று விவசாயிகள் அழைக்கிறார்கள்.

டி.ஏ.பி.உரம், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது. ஒரு வாழைக்கு உரத்துக்காக மட்டும் ரூ.100, காற்றில் மரம் சாய்ந்துவிடாமல் இருக்க, சவுக்கு கம்பு வாங்கி நடுவது உள்ளிட்ட மற்ற செலவுக்காக, ரூ.100 வீதம், ஒரு வாழைக்கு ரூ. 200 வரை, சாகுபடி செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், முதலுக்கு மோசம் என்ற வகையில், தற்போது விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.

கழிவும் அதிகம்

1,000 வாழைத்தார்கள் வெட்டப்பட்டால், 100 காய்களில் 5 கழிவு என்று வியாபாரிகளால் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் கணக்கில் ஆயிரம் வாழைகள் பயிரிட்டுள்ள தோட்டத்தில், 50 வாழைகளின் தார்களை கழிவாக கொடுக்க வேண்டியிருக்கிறது. விலை வீழ்ச்சியால் லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை என்ற நிலை இருக்கிறது.

களக்காடு வட்டாரத்தில் வாழைத்தார்கள் அறுவடை தொடங்கும்போது விலை எவ்வாறு இருக்குமோ? என்று வாழை விவசாயிகள் குழப்பத்திலும், கலக்கத்திலும் உள்ளனர்.

ஒப்பந்த முறை

பல மாவட்டங்களில், வாழை விவசாயிகள் உற்பத்தியை சந்தை ப்படுத்த வசதியாக, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சார்பில், பெரிய விற்பனையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்களை அழைத்து வந்து விவசாயிகளுடன், வியாபாரிகள் நேரடி விற்பனைக்கு ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

அது போல் நேந்திரன் வாழைக் கும் வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுத்தால், இடைத்தரகர்கள் தொல்லை மற்றும் கேரளத்து வியாபாரிகளை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x