Published : 16 Mar 2017 09:12 AM
Last Updated : 16 Mar 2017 09:12 AM

கவிதை: முயற்சியை விட்டுக்கொடுக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை!

முதல் இரண்டு முறை நான் முறையாகப் பயின்றிருக்கவில்லை ஆங்கிலத்தை.

ஆனாலும் முயற்சி செய்தேன். முயற்சியைக் கைவிட விருப்பமில்லை எனக்கு.

ஒவ்வொரு ஆண்டும் ஜேஎன்யூவுக்குச் செல்வதற்காகப் பல உடல் உழைப்பு வேலைகளைச் செய்தேன்.

எறும்பைப் போல் பணம் சேமித்தேன் பணம் கேட்டுப் பிறரிடம் கெஞ்சினேன்.

முதல் இரண்டு முறை தமிழகத்திலிருந்து புறப்பட்டேன்

அடுத்த இரண்டு முறை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து. ரயில் பயணத்தில் ஒருபோதும் நான் உணவருந்தவில்லை.

‘இந்த முறை உனக்குக் கிடைத்துவிடும்’ என்று ஒவ்வொரு ஆண்டும் உற்சாகப்படுத்துவார்கள் நானும் முயற்சி செய்தேன்.

ஏனெனில், விட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை எப்போதும் நினைத்துக்கொள்வேன் ‘கடும் உழைப்பு ஒருபோதும் தோற்பதில்லை’ என்று.

ஒவ்வொரு ஆண்டும் நேரு சிலையின் கீழ் அமரும்போதெல்லாம் அவரிடம் கேட்பேன்:

“நேருஜி, காங்கிரஸுக்கு வாக்களிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எனக்குக் கல்வி தர ஏன் நீங்கள் விரும்பவில்லை?”

கடைசி நேர்காணலில் 11 நிமிடங்கள் பேசிய பின்னர் ஒரு பெண் சொன்னார் நான் எளிய ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று.

இந்த ஆண்டு நேர்காணலில் எட்டு நிமிடங்கள் பேசினேன் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தேன் மூன்று பேராசிரியர்கள் சொன்னார்கள்:

“நன்றாகப் பேசினாய்” என்று. அரசு கலைக் கல்லூரியிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்தவன் நான் ஒருவன்தான் என்று இப்போது உணர்ந்துகொண்டேன்.

சேலம் மாவட்டத்திலிருந்து ஜேஎன்யூவுக்காகத் தேர்வுசெய்யப்பட்டதும் நான் ஒருவன்தான்.

நவீன இந்திய வரலாறு பிரிவில் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டதும் நான் மட்டும்தான்.

எனது மேற்பார்வையாளர் பி.ஈஸ்வர் பொனெலாவுக்கு மிக்க நன்றி. என்னுள் ஓர் ஆய்வு மாணவனைக் கண்டுபிடித்தது அவர்தான்.

எனது ஆய்வு தொடர்பான முன்மொழிவை எழுத என்னை அவர் ஊக்குவித்தார். அதை நான் 38 முறை எழுதினேன்.

இந்த வரலாற்றுத் தருணத்துக்காகப் பலருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

அதனால்தான் ‘எ ஜங்கெட் டு ஜேஎன்யூ’ எனும் புத்தகத்தை நான் எழுதப்போகிறேன்.

மிக்க நன்றி பிரவீண் தோந்தி. ஜேஎன்யூவில் என் முதல் படம் இதுதான். மகிழ்ச்சி!

- முத்துகிருஷ்ணன், (26 ஜூலை 2016-ல் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் இட்ட பதிவு)

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x