

ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களை இனி ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கண்காணித்து உரிமம் கொடுக்கத் தேவையில்லை. இந்த வேலைகளை இனி கம்ப்யூட்டர்களே செய்ய உள்ளது. இதற்கான தொழில்நுட்ப முன்னோட்டப் பணிகள் தற்போது, சென்னை அண்ணாநகரில் நடந்து வருகிறது. மேலும், 14 ஆர்டிஓ அலுவலகங்களில் இந்த தொழில் நுட்பத்தை செயல்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். மற்ற நகரங்களைக் காட்டிலும், சென்னையில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் அதிகமானோர் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். உரிமம் தருவதில் பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், இடைத்தரகர் மூலம் சிலர் உரிமங்களை பெற்று விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. அரைகுறைவாக வானங்களை ஓட்டிக் காட்டி உரிமம் பெற்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, முறைகேடுகளைத் தடுக்கவும், ஓட்டுநர் உரிமங்களை உடனடியாக வழங்கவும் கேரளம், குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் ஒரு சில ஆர்டிஓ அலுவலகங்களில் புதிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் இருக்கும் டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் அதிநவீன சென்சார் கருவிகள் பொருத்தப்படும். இவை, ஆர்டிஓ அலுவலக கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர், டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் பதிவு செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யும். விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கும். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கலாமா? வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே முடிவு செய்து அறிவிக்கும்.
இந்த புதிய தொழில்நுட்பம் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. விபத்துகளுக்கு ஓட்டுநரின் கவனக்குறைவுதான் அதிக காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையாக பயிற்சி பெறாமல், அரைகுறை பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கின்றன.
உரிமம் வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்கவும், மக்களுக்கு விரைவாக சேவை வழங்கவும் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டால் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் கொடுப்பதை கம்ப்யூட்டர்தான் உறுதி செய்யும். தற்போது முதல்கட்டமாக அண்ணாநகரில் சோதனை ஓட்ட முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மேலும் 14 ஆர்டிஓ அலுவலகங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆர்டிஓ அலுவலகத்தில் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரூ.1 கோடி செலவாகும். அரசு ஆணை வந்தவுடன், விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.