

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 34,871 தொடக்கப் பள்ளிகளில் 32.2 லட்சம் மாணவர்களும், 9,969 நடுநிலைப் பள்ளிகளில் 22.7 லட்சம் மாணவர்களும், 5,167 உயர்நிலைப் பள்ளிகளில் 18.7 லட்சம் மாணவர்களும், 5,660 மேல்நிலைப் பள்ளிகளில் 61.3 லட்சம் மாணவர்களும் பயின்று வருகின்றனர். மொத்தம் 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் பள்ளி முடிந்தவுடன் தனியாக டியூசன் நடத்தி வருகின்றனர். இதுபோன்று தனியாக டியூசன் நடத்தும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் சிலர் தங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி தான் நடத்தும் டியூசனில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, கள்ளக்குறிச்சியில் தந்தையை இழந்து, கூலி வேலை செய்து வரும் தாயின் சிறு வருமானத்தில் படித்து வந்த மாணவி ஒருவரை பள்ளி ஆசிரியர் டியூசனில் சேரக் கோரி தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் மாணவி மனமுடைந்து பள்ளி மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சில ஆசிரியர்களால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்தத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி ஆங்காங்கே ஒரு சில ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனி வகுப்புகள் நடத்துவதாகவும், தனி வகுப்புகளுக்கு வராத மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் கடுமையாக நடந்துகொள்வதாகவும் அரசின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களின் இத்தகைய நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். விழுப்புரம் மாவட்டத்தில் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனி வகுப்புகளை ஆசிரியர்கள் எடுத்ததன் விளைவாக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக துறையின் கவனத்துக்குத் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்துத் தனி வகுப்புகள் நடத்துதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
துறையின் அறிவுரைகளை மீறிச் செயல்படும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையினை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி, அதில் அவர்களின் கையொப்பம் பெற்று கோப்பில் வைக்கவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.