

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஹெலன்’ புயல் வட ஆந்திர கரையை வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்லது மாலையில் மசூலிப்பட்டினம் அருகே கடக்கிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழையும் ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
’ஹெலன்’ புயல் புதன்கிழமை மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னையிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 470 கி.மீ. தூரத்தில் இருந்தது. இது மேலும் நகர்ந்து தற்போது மசூலிப்பட்டினத்திலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 230 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் மழையோ பெய்யக்கூடும்.