Last Updated : 20 Feb, 2014 04:39 PM

 

Published : 20 Feb 2014 04:39 PM
Last Updated : 20 Feb 2014 04:39 PM

வாடும் பயிர்களைக் காக்க போராடும் விருதுநகர் மாவட்ட விவசாயிகள்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக சராசரி மழைப் பொழிவு குறைந்துள்ளதால் சாகுபடி செய்த பயிர்களை உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டங்களில் விருதுநகரும் ஒன்று. ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய சராசரி மழைப்பொழிவு கடந்த இரு ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 26.40 மி.மீ., பிப்ரவரியில் 19.50 மி.மீ., மார்ச்சில் 30.50மி.மீ., ஏப்ரலில் 74.10 மி.மீ., மே மாதத்தில் 59.70.மி.மீ., ஜூனில் 21.50 மி.மீ., ஜூலையில் 26.80 மி.மீ., ஆகஸ்டில் 53.80 மி.மீ., செப்டம்பரில் 67.60 மி.மீ., அக்டோபரில் 193.90 மி.மீ., நவம்பரில் 168.40 மி.மீ., டிசம்பரில் 69.50 மி.மீ. என ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழைப்பொழிவு 811.70 மில்லிமீட்டராகும்.

ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் 956.40 மி.மீ., 2007-ல் 872.60 மி.மீ., 2008-ல் 1,095.70 மி.மீ., 2009-ல் 629.30 மி.மீ., 2010-ல் 940.35 மி.மீ., 2011-ல் 876.10 மி.மீ., 2012ல் 564.16 மில்லிமீட்டரும் மழை பதிவானது. கடந்த 2013 ஜனவரியில் 1.33 மி.மீ., பிப்ரவரியில் 37.84 மி.மீ., மார்ச்சில் 50.39 மி.மீ., ஏப்ரலில் 16.12 மி.மீ., மே மாதத்தில் 31.19 மி.மீ., ஜூனில் 15.94 மி.மீ., ஜூலையில் 5.62 மி.மீ., ஆகஸ்டில் 123.23 மி.மீ., செப்டம்பரில் 38.87 மி.மீ., அக்டோபரில் 134.63 மி.மீ., நவம்பரில் 99.35 மி.மீ., டிசம்பரில் 70.10.மி.மீ. என 624.61 மில்லிமீட்டர் மழை மட்டுமே பதிவாகியிருந்தது.

சராசரியை விடக் குறைவு

மேலும், கடந்த 2012-ம் ஆண்டில் சராசரியைவிட 247மி.மீ குறைவாகவும், 2013ல் சராசரியைவிட 187 மி.மீ. குறைவாகவும் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மழை பொழியாததால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். பருவமழை பொய்த்ததால் அணைகளில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. பருவமழை பொய்த்ததால் மாவட்டத்திலுள்ள 999 கண்மாய்களும் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. பருவமழையை நம்பி பயிர் சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகள் பருவமழை பொய்த்ததால் தண்ணீருக்காகத் தவித்து வருகின்றனர்.

பெரும் நெருக்கடி

குறிப்பாக, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை காலத்தில் பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காததால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 16,017 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருச்சுழி, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் மட்டுமே நெல் அறுவடை முடிந்துள்ளது. ராஜபாளையம், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் வாடி வதங்கி வருகின்றன.

பாக்டீரியா தெளிக்கலாம்

இதுகுறித்து மாவட்ட வேளாண் அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

நீரின்றி வாடும் பயிர்களைக் காக்க விவசாயிகள் மெத்தலோ பாக்டீரியாவைத் தெளித்து பயிர்களைக் காக்கலாம். ஒரு ஏக்கருக்கு 200 மில்லி மெத்தலோ பாக்டீரியாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான்கள்மூலம் பயிரின் மேல்பகுதியில் தெளிக்க வேண்டும். ஒரு முறை தெளித்தால் சுமார் 15 நாள்களை வரை நெல் பயிர் வாடாமல் பாதுகாக்க முடியும்.

இந்த மெத்தலோ பாக்டீரியா மதுரையிலுள்ள வேளாண்மைக் கல்லூரியில் கிடைக்கிறது. தேவைப்படும் விவசாயிகள் நேரடியாகச் சென்று வாங்கிக்கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள வேளாண் அலுவலர்களைத் தொடர்புகொண்டால் அவர்கள் மூலம் மெத்தலோ பாக்டீரியா வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வெம்பக்கோட்டை பகுதிகளிலுள்ள சுமார் 750 ஏக்கர் நெல் பயிர்களுக்கு தற்போது மெத்தலோ பாக்டீரியா தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 300 லிட்டருக்கு தாங்கள் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x