Last Updated : 01 Apr, 2017 12:04 PM

 

Published : 01 Apr 2017 12:04 PM
Last Updated : 01 Apr 2017 12:04 PM

பதினெட்டுக்குள்ளே 6: திறந்தவெளியில் மலம் கழித்தலும், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடும்!

திறந்தவெளியில் மலம் கழித்தலுக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டுக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கத்தால் இந்தியாவில் குழந்தைகள் உயரம் குறைந்தவர்களாக மாறுவது அதிகரித்துள்ளது .

எப்படி சாத்தியம்?

ஒரு கிராம் மனிதக் கழிவில் ஒரு லட்சம் கோடி வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உள்ளன. அதாவது நாட்டில் 3.5 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழலில் கோடி கோடியாக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் கலக்கின்றன. இதுதான் நோய்கள் பரவுவதற்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவுக்கான, குழந்தைகள் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கான முக்கிய காரணியாக உள்ளது.

ஒரு கிராமத்தில் ஒரே ஒரு நபர் திறந்தவெளியில் மலம் கழித்தால்கூட அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் நிறைய வீடுகளில் குழந்தைகள் மலம் கழிப்பதை கழிப்பறையில் சுத்தம் செய்யாமல் வெளியே போடுவது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். விலங்குகளின் மலத்தில்கூட வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உள்ளன எனவே, உணவு அல்லது தண்ணீர் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதி பேர் (45.7%) திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள் என்று 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

நாட்டின் சுமார் 6.4% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்படுவது மோசமான சுகாதாரத்தினால்தான் (டபிள்யு.எஸ்.பி.(WSP) 2010; உலக வங்கி 2006).

கழிவு மேலாண்மையில் ஸ்வீடன் நாட்டில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது... ஸ்வீடன் நாட்டில் கழிவு என்பது பூஜ்ஜியம் என்றே கூறலாம் என சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞான மைய புள்ளிவிவரம் கூறுகின்றது.

சுத்தமான குடிநீர்

தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் 70% பேருக்கு கிடைக்கிறது (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு). தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பங்கு மக்கள் (24%) சுத்தம் செய்யப்படாத குழாய் நீரைப் பயன்படுத்துகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் அல்லது கொதிக்கவைக்கப்பட்ட அல்லது குளோரின் கலக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும். திறந்த, பாதுகாக்கப்படாதக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள நீர் ப்ளீச்சிங் பவுடர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்.

பாதுகாப்பற்ற குடிநீர், மோசமான சுகாதார நடைமுறைகள் மற்றும் சுகாதார வசதி பற்றாக்குறை இவையனைத்தும் வயிற்றுப்போக்கு நோய்களால் 88% உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன .

கைகழுவுவதின் அவசியம்

சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். நிறைய சமயங்களில் நோய்க்கிருமிகளை உடலுக்குள் கொண்டு செல்பவையாக கைகள் இருக்கின்றன. அழுக்கடைந்த கைகளில் ஒரு கோடி வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு நோய் உண்டாகக் காரணமாக உள்ளன, இவை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மரணத்துக்கும் காரணமாக அமைகின்றன.

வெறும் தண்ணீர் போட்டு கைகளைக் கழுவுவது போதாது. சோப்பு போட்டு கழுவுவதால் மட்டுமே கைகளில் படிந்திருக்கும் பெரும்பாலான கிருமிகளைக் கொண்டிருக்கும் அழுக்கும் கரையும் நீக்கப்படுகின்றன. பொதுவாக எல்லா சோப்புகளுமே கைகளிலிருந்து கிருமிகளைக் களைவதற்கு உகந்தவைதான். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்பும் ஆன்டி பாக்டீரியல் சோப்பு போலவே திறன்வாய்ந்ததுதான்.

சோப்பு போட்டு கைகழுவுவதால் 40% வயிற்றுப்போக்கு நோய்கள், 30% குழந்தைகளின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் நிமோனியா (கர்டீஸ்ரூகேர்கிராஸ் 2003) உள்ளிட்ட சுவாச நோய்களைத் தடுக்கின்றன.

வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான சுவாசத் தொற்று(யுனிசெப், 2014) நோயைத் தடுப்பதற்கான மிகவும் திறன்வாய்ந்த முறை சோப்பு போட்டுக் கைகழுவுதல்தான்.

சோப்பு போட்டுக் கைகழுவுவது, டைபாய்ட், புழுத்தொற்று, மஞ்சள் காமாலை, தோல் மற்றும் கண் தொற்றுகளையும் தடுக்கிறது. பிறந்தது முதல் சோப்பு போட்டுக் கை கழுவும் பழக்கத்தால் குழந்தைப்பேறு ஊழியர்களும், தாய்மார்களும் கைக்குழந்தைகள் இறப்பை 41% வரைக் குறைக்கலாம்.

இந்தியாவில் வெறும் 53% மட்டுமே கழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்கின்றனர், 38% மட்டுமே சாப்பிடுவதற்கு முன்பாக கைகழுவுகின்றனர் (இந்திய பொது சுகாதார அமைப்பு 2008).

இது குறித்து மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்.

''சுத்தம் சுகாதாரம் இல்லாததால் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 56 பில்லியன் டாலர்களை இழக்கிறது. உலகத்தில் சுகாதாரம் இன்மையால் ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 2 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். 3-ல் 1 பங்கு இறப்பு இந்தியாவில் நிகழ சுத்தம், சுகாதாரம் இன்மையே காரணம்.

சுத்தம் சுகாதாரம் இருந்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6% உயர்த்தமுடியும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புறங்களில் 32.7% பேருக்கு மட்டுமே சாக்கடையை வெளியேற்றும் வசதி உள்ளது. 38.2% மட்டுமே கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் 7% மட்டுமே மலத்தைக் குழி தோண்டி மூடுகின்றனர்.

50 மில்லியன் கழிவுகள் மூடப்படாமல் உள்ளன. 13 மில்லியன் கழிவுகளில் 9 மில்லியன் கழிவுகள் நேரடியாக சாக்கடையில் கலக்கின்றன. வீணான, தேவையற்ற நீர் கிருமியுடன் கலந்துவிடுகிறது. அதைப் பிரித்தெடுக்க முடிவதில்லை. 70% மலக்கழிவு தவிர ஸ்லட்ஜ் எனப்படும் மற்ற கழிவுகள் பிரித்தெடுக்க முடிவதில்லை.

பொதுவாக தூய்மையான நீர் பயன்படுத்தாமல் இருப்பதால் வயிற்றுப்போக்கு, டயரியா, அமீபியாசிஸ், ஹெப்பாடைடிஸ் ஏ, போலியோ ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு 1000 குழந்தைகள் இறக்கின்றனர். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிலரால் சாப்பிட முடியாது. மேலும் சிறுகுடல், பெருங்குடலில் புண் வரும் வாய்ப்புள்ளது. இன்னும் சிலர் சாப்பிட்டால் உணவு ரத்தத்தில் கலக்காது. இதனால் எடை எந்த அளவிலும் கூடாது. உயரம் உள்ளிட்ட வளர்ச்சியும் ஏற்படாது.

இதைத் தவிர்க்க கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஓடும் தண்ணீரில் (ரன்னிங் வாட்டர்) 30 நொடிகளாவது கைகளைக் கழுவ வேண்டும். சுத்தம், சுகாதாரத்துக்கு நீடித்த போக்குக்கு வழிவிட வேண்டும். ஆனால் இங்கே அரசு சார்பில் வெற்று அறிவிப்புகளே வெளியிடப்படுகின்றன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் 90% துப்புரவு பணியாளர்கள் நோய்களுடன் மரணமடைவதாக சொல்கிறது.

சாப்பிடும் முன், சிறுநீர் கழித்தபின், மலம் கழித்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம். இல்லையென்றால் டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, காலரா ஏற்படும் அபாயம் உள்ளது. குடல்புழு நோய் வருவது கூட தூய்மையான குடிநீர் பயன்படுத்தாததால்தான்.

நண்பர் ஒருவர் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் நாய்கள் என்று டாக்டர் சொல்வதாக ஒரு விளம்பரத்தை மையப்படுத்தி ஆதங்கப்பட்டார். ஆனால், டாக்டர்களே தேவையற்ற சமயங்களில் 60% கிருமி கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? குழந்தைகள் உரிமை காப்பதில் டாக்டர்களுக்கும் பங்கு உள்ளது.

தண்ணீர் இல்லை என்பதற்கு அரசும் ஒரு காரணம். முறையாக எல்லோருக்கும் தூய்மையான நீர் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் கடமை. திறந்த வெளி இல்லாமல் கழிப்பறை கட்டித் தருவதும் அரசின் கடமை. ஆனால் அதற்கான வாய்ப்பு வசதிகளை செய்யாமல் இருக்கும்போது திறந்த வெளியில் மலம் கழிக்காதே என்று மட்டும் சொல்வது சரியாகாது.

கழிவுப்பொருட்களை வெளியேற்றும் பணி கடினமானது, அபாயகரமானது, சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

2014-ம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை இந்தியாவில் இத்தகைய கழிவகற்றும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்களது ஓய்வு பெறும் வயதுக்கு முன்னதாகவே கடும் நோய்கள் ஏற்பட்டு உயிரிழந்துவிடுகின்றனர் என்பதே உண்மை என சொல்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாக கழிவுகளின் உற்பத்தி 8 முதல் 10 மடங்கு அதிகரித்துள்ளது. மாறாக, கழிவகற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 60% குறைந்துள்ளது'' என்றார் டாக்டர் புகழேந்தி

வாட்டர் எய்ட் அமைப்பு தண்ணீர் தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வு நடத்தி வெளியிட்ட முடிவுகள்:

* உலகளவில் கிராமங்களில் வசிப்பவர்களில் சுத்தமான குடிநீர் இல்லாதவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

* இந்திய கிராமங்களில் சுமார் 6.3 கோடி பேர் சுத்தமான குடிநீர் வசதியின்றி இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அதாவது இந்திய மக்கள் தொகையில் 7 % பேருக்குச் சுத்தமான குடிநீர் வசதி இல்லை.

* உலக அளவில் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் மொத்த மக்கள் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

* சுத்தமான குடிநீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தால் கிராமங்களில் வாழும் பெண்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

* குறிப்பாக குடிநீர் எடுக்கச் செல்லும் பெண் குழந்தைகளின் கல்வி பாதிப்புள்ளாகியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையின் படி 2050ல் உலகில் 40 சதவிகிதம் பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவிப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

* உலகளவில் ஆண்டுக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் தண்ணீர் பிரச்சினைகளால் உயிரிழக்கின்றனர்.

* உலகில் தினமும் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் இறக்கின்றனர்.

* சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் ஊட்டச்சத்தின்மை குறைபாடு வியாதிகள் 50 % மேல் அதிகரித்திருக்கிறது.

* ஆண்டுதோறும் 40,000 டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன.

ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) இயக்கம் இந்தியா முழுவதும் உள்ள வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள் ஆகிய அனைத்திலும் கழிப்பறைகள் கட்டி, 2019க்குள் இந்தியாவில் எங்குமே திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கமே இல்லாமல் செய்வதை இலக்காக கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்காக 12,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

மோடி அரசு தற்போது ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்த 20 சிறிய நகரங்களில் கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. ஸ்மார்ட் நகரம் குறித்து திட்டமிடுபவர்கள் கழிவு மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது குற்றச்சாட்டாகவே எழுந்துள்ளது.

குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கச் செய்வது சாதாரணமான நிகழ்வல்ல. அதை நோக்கிப் பயணிப்பதன் மூலம் படிப்படியாக திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கலாம், குறைக்கலாம். அதன் மூலம் சுத்தமான, ஆரோக்கியமான எதிர்காலத்தை குழந்தைகளுக்கு கொடுப்போம்.

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் என்னென்ன? என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பகிரலாம்.

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >பதினெட்டுக்குள்ளே 5: குழந்தைகளுக்கான தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x