

திருவண்ணாமலையில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கை மற்றும் கால்களை இழந்தவர்கள், நாக்கில் அலகு குத்தியவர்கள், முள் படுக்கையில் படுத்தவர்கள் என்று பல வடிவங்களில் பிச்சை எடுப்பவர்களை கிரிவலத்தின் போது பார்க்கலாம். மறுநாள் காலை இவர்கள் யாரையும் பார்க்க முடியாது. இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தது. பௌர்ணமியன்று, பிச்சை எடுப்பவர்களைத் தேடி பிடித்து, ஒரு இடத்தில் அடைத்துவைத்து, மறுநாள் காலை விடுவித்தது.
காவல்துறை நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அப்பாவி சாதுக்கள், பௌர்ணமியன்று மலை மற்றும் காடுகளில் தஞ்சமடைந்தனர். இதற்குத் தீர்வு காண ஆன்மிகவாதிகள் வலியுறுத்தினர். ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை முயற்சியால் கிரிவலப் பாதையில் 2008-ல் தங்கியிருந்த 340 சாதுக்களுக்கு காவல்துறை சார்பில் அடையாள அட்டையும், 2010-ல் 260 சாதுக்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்ட அட்டையும் வழங்கப்பட்டது. அதன் பிறகு அடையாள அட்டை மற்றும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. புதிதாக வந்துள்ள சாதுக்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை கூட வழங்கவில்லை.
மருத்துவ காப்பீடு
சாதுக்கள் கூறுகையில், அடையாள அட்டை இருந்தால் சாதுக்கள் போர்வையில் தங்கியிருக்கும் குற்றவாளிகளை அடையாளம் காணலாம். எங்களுக்கு மிக முக்கியமான தேவை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை. நாங்களும் நாட்டின் குடி மகன்கள்தான். மனிதாபிமான உள்ளத்தோடு மருத்துவ காப்பீடு திட்டத்தில் எங்களை போன்ற அனைவரையும் சேர்க்க வேண்டும்.
எங்களுக்கு இருப்பிடம் இல்லாத தால் முதியோர் உதவி தொகை வழங்கப்படவில்லை. எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி, அந்த இடத்தை இருப்பிடமாக கருதி முதியோர் உதவி தொகையை வழங்க அதிகாரிகள் முன் வரவேண்டும். வயதான காலத்தில் மருத்துவச் செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் மடங்களில் உணவு வழங்குவதால் சாப்பாட்டிற்கு பிரச்சினை இல்லை. நிருதி லிங்கம் பகுதியில், பாதுகாப்பு கிடையாது. பக்தர்கள் மூலமாக கிடைக்கும் பணத்தை ரவுடிக் கும்பல் பறிக்கிறது. தர மறுத்தால் அடித்து, உதைத்து பிடுங்கிச் செல்கின்றனர். தூங்கி கொண்டிருக்கும்போது, பைகளை திருடிவிடுகின்றனர். பணத்துடன், காவல்துறை வழங்கிய அடையாள அட்டை, மருத்துவ காப்பீடுத் திட்ட அட்டையை பல சாதுக்கள் தொலைத்துள்ளனர் என்றனர்.
சாதுக்கள் நலவாரியம்
ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை நிறுவனர் மோகன் கூறியதாவது-
‘‘அரசு நலத்திட்ட உதவிகள் சாதுக்களையும் சென்றடைய வேண்டும். இதற்கு, இந்து சாதுக்கள் நலவாரியம் தொடங்க வேண்டும். அப்போதுதான், சாதுக்கள் அனைவருக்கும் முழு அங்கீகாரம் கிடைக்கும். கிரிவலப் பாதையில் சாதுக்கள் தங்க, 2 முதல் 5 ஏக்கர் வரை இடம் ஒதுக்கி தருமாறு ஆட்சி யரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த இடத்தில் கட்டிடம் எழுப்பி சாதுக் களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர முடியும். காவி உடை அணிந்து பிச்சை எடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். ஓரே இடத்தில் இருந்தால் மருத்துவக் காப்பீடு, முதியோர் உதவி தொகை, வாக்குரிமை கிடைத்துவிடும். சாதுக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வருவாய்த் துறையினர் வழங்க மறுக்கின்றனர்.
‘ரேஷன் கார்டு வேண்டும்’ என்று தட்டி கழித்து வருகின்றனர். மரத்தடி மற்றும் வீதியில் வசிப்பவர்களுக்குத் தர முடியாது என்கின்றனர். வட மாநிலங்களில் சாதுக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் முயற்சி தொடரும். சாதுக்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அவசியம் தேவை. பல சாதுக்கள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர். காவல்துறையின் அடையாள அட்டைகளை புதுப்பித்து, தொடர்ந்து வழங்க வேண்டும். புதியவர்கள் வருகை அதிகரித்துள்ளது. அனைவரும் காவி உடையில் இருப்பதால், உண்மை யான சாதுக்கள் யார் என்று தெரியவில்லை. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும், சாதுக்கள் வேஷம் போட்டு தங்கிவிடுகின்றனர். அடை யாள அட்டை வழங்கினால், மர்ம நபர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.
உயிரிழந்த சாதுக்களை அடக்கம் செய்து வருகின்றோம். 5 ஆண்டுகளில் 500 சாதுக்களை எம லிங்கம் அருகே அடக்கம் செய்துள்ளோம். முறைப்படி சிவபுராணம் பாடி, சங்கல்பம் செய்து சாதுக்களை அடக்கம் செய்து வருகின்றோம். இந்தப் பணியில் 20 பேர் ஈடுபட்டுள்ளோம். ஒருவரை அடக்கம் செய்ய ரூ.700 முதல் ரூ.1000 வரை செலவாகிறது. இதற்கு காவல் துறையினர் மற்றும் சிலர் தாமாக முன்வந்து நிதி தருகின்றனர்’’ என்றார்.
கோட்டாட்சியர் முத்துகுமாரசாமி கூறுகையில், ‘‘வாக்காளர் அடையாள அட்டை வழங்க இருப்பிட முகவரி தேவை. அதனால்தான் வழங்க வில்லை. சாதுக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, முதியோர் உதவி தொகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.