

குத்தகைதாரர்கள் மீது பொதுமக்கள் புகார்
சித்தேரி பகுதியில் உள்ள கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கற்களை வெட்டி எடுக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக, ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் வாசகர் அசோகன் என்பவர் புகார் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறும்போது, ‘‘வேலூர் அடுத்த பெருமுகை, சித்தேரி, அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளத் துறையின் கீழ் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. பெரும்பாலான குவாரிகள் விதிகளை மீறியே செயல்படுகின்றன. கல் குவாரி குத்தகை எடுக்கும்போது குறிப் பிட்ட அளவு மட்டுமே கற்களை வெட்டி எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
குத்தகை உரிமம் எடுத்ததும் விதிகளை மீறியே கற்களை வெட்டி எடுக்கின்றனர். அதேபோல், அதிகளவில் வெடிவைத்து பாறை களை தகர்ப்பதால் குத்தகையில் குறிப்பிட்ட அளவீட்டை சேதப் படுத்துகின்றனர். இதன்மூலம் கூடுதலான இடங்களில் கற்களை வெட்டி எடுக்கின்றனர்.
இதை கனிமவளத் துறை அதிகாரிகள் யாரும் கண்காணிப் பதில்லை. விதிகளை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை. வேலூர் தொரப்பாடியில் இருந்து பென்னாத்தூர் செல்லும் சாலையில் சித்தேரி பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குவாரியும் 300 அடி அகலம் 100 அடி ஆழத்துக்கு உள்ளது. மிக ஆழமாக பள்ளம் தோண்டியதால், தேங்கியுள்ள மழை நீரில் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்ணீரை சுத்தப்படுத்தி விவ சாயிகளுக்கு வழங்கினால், ஆண்டு முழுவதும் விவசாயப் பணியை மேற்கொள்ளலாம்.
சித்தேரி பகுதியில் உள்ள ஜல்லிக் கற்கள் அரவை ஆலை களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மீதும், குடிநீரிலும் அதிகளவு தூசு படிகிறது. மேலும், காற்றில் பரவும் தூசுகளை சுவாசிப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு ஏற்படுகிறது.
கனிம வளத் துறை அதிகாரி களும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கல் குவாரி பகுதிகளில் முறையாக ஆய்வு நடத்துவதே இல்லை. இதனால், குவாரியை குத்தகைக்கு எடுப்பவர்கள் தொடர்ந்து விதிகளை மீறி செயல்படுகின்றனர்.
கல் குவாரிகளின் முறைகேடு குறித்து புகார் கொடுத்தாலும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, விதிகளை மீறி செயல்படும் குவாரிகளின் குத்தகைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீண்டும் ஏலத்தில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களிடம் அபராதம் வசூலித்து அரசுக் கணக்கில் சேர்க்க வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக, கனிம வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘எங்களுக்கு வரும் புகார்கள் மீது தனித்தனியாக ஆய்வு செய்கிறோம். விதிகளை மீறி குவாரிகளில் கற் களை வெட்டி எடுப்பவர்கள் மீது அபராதம் விதிக்கிறோம்.
அந்தத் தொகையை வசூலிக்கத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சித்தேரி பகுதியில் விதிகளை மீறி செயல் பட்டு வரும் கல் குவாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றனர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009