

தங்கநகை வியாபாரக் கடை, பட்டறை ஆகியவற்றில் சேகர மாகும் மண்ணிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில் நாளுக்கு நாள் நலிவடையத் துவங்கியுள்ளது. எனினும், மாற்றுத் தொழில் இல்லாததால், இத்தொழிலில் ஈடுபடுவோர் குறைந்த வருவாயில் கஷ்ட ஜீவனம் நடத்தும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தவிர, பிற தொழிலாளர் போல் வாரியத்தில் இணைத்து உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இத்தொழிலில் ஈடுபடுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம் ஆபரணமாக இருந்தாலும் பணம், மண்ணோடு மண்ணாக இருந்தாலும் பணம் என்ற நிலை உள்ளது. தங்க நகை தயார் செய்யும் பட்டறை, நகை வியாபாரக் கடை ஆகியவற்றில் சேகரமாகும் மண் குறிப்பிட்ட விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அந்த மணல் 'தங்க மண்’ என அழைக்கப்படுகிறது. தங்க மண்ணை விலைக்கு வாங்குவோர், அதில் உள்ள சிறிய அளவிலான தங்கத்தைப் பிரித்து விற்பனை செய்கின்றனர்.
இதுபோன்ற தொழில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சேந்தமங்கலம், பச்சுடையாம்பட்டி, தாளாம்பாடி, ஜேடர்பாளையம் ஆகிய இடங்களில் தங்க மண் சுத்தம் செய்து, தங்கம் பிரித்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இத்தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலைவாய்ப்பு பெற்று ஜீவனம் நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அதைச் சார்ந்த இத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. வேறு தொழில் தெரியாததால் இத்தொழிலை மேற்கொண்டு வருவதாக, இத்தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சேந்தமங்கலத்தில் மண்ணில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் செய்யும் சுப்பிரமணி கூறியது:
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்து தங்க மண் விலைக்கு வாங்கி வரப்படுகிறது. தங்கநகை கடை, பட்டறை ஆகியவற்றில் சேகரிக்கப்படும் மண் குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை விற்பனை செய்யப்படும். அந்த மண்ணை விலைக்கு வாங்கி வந்து களத்தில் இட்டு நன்கு உலர்த்தப்படும். பின், மிஷினில் போட்டு அரைக்கப்படும்.
பின், அந்த மண் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். தொழிலாளர் சரிவான பலகையில் மண்ணை கொட்டி தண்ணீர் ஊற்றி அலசுவர். அவற்றில் கடைசியாக சேகரமாகும் மண் குடம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் பிடித்து வைக்கப்படும். அவற்றை தங்க நகை செய்வோர் வாங்கிச் செல்வர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகைக்கடை, தங்கநகை தயார் செய்யும் பட்டறையில் சேகரமாகும் மண் நேரடியாக விற்பனை செய்யப்பட்டது.
தங்க விலை உயர்வு காரணமாக சேகரமாகும் மண்ணை கடை உரிமையாளர், தங்க நகை பட்டறைகளுக்கு வழங்கி அவற்றை உருக்கி அதில் உள்ள தங்கத்தை எடுத்த பின்னரே விற்பனை செய்கின்றனர். அவற்றில் தங்கம் இருந்தால் எங்களுக்கு லாபம். முன்புபோல் இத்தொழிலில் லாபம் எதுவும் இல்லை. வேறு தொழில் தெரியாததால் இதில் ஈடுபடுகிறோம். இல்லையெனில் நஷ்டம் தான். தங்கத்தை பிரித்தெடுக்கிறோம் என்பது பெயரளவிற்கு தான். எங்களிடம் குண்டுமணி அளவு கூட தங்கம் இல்லை.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். மாநிலம் முழுவதும் ஏராளமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற னர். எங்களை பிற தொழிலாளர் போல், வாரியத்தில் இணைத்து அரசு உதவி வழங்கினால் பயனாக இருக்கும், எனக் கூறினார்.