

குன்னூரில் பெரும்பாலான இடங்களில் திடீர் ‘ஷெட்’கள் முளைத்துள்ளன. அத்துமீறி நடக்கும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சி காணாமல் உள்ள குன்னூரில் ஆக்கிரமிப்பு பிரச்சினை நகர வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப நிலம், சாலை வசதி இல்லாததால், இருக்கின்ற இடத்தில் வசதியான வீடுகளை கட்டிக் கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். இதன் விளைவாக, தங்கள் வீடுகளை ஒட்டியுள்ள நகராட்சி, வருவாய்த் துறை உட்பட அரசு துறையினரின் பராமரிப்பில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டிக் கொள்கின்றனர்.
திடீர் ஷெட்கள்
தற்போது குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு வண்ணாரப்பேட்டை, மாடல் ஹவுஸ் பகுதிகளில் திடீர் ‘ஷெட்’கள் முளைத்துள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால் மக்கள் குறுகலான நடைபாதையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாடல் ஹவுஸ் பகுதியில் நகராட்சி சார்பில் மைதானம் அமைக்கப்படுவதாக கூறப்பட்டு, பின்னர் பூங்காவாக அமைக்க உறுதியளிக்கப்பட்ட நிலத்தில், புதிது புதிதாக ஷெட்க்கள் முளைக்க துவங்கியுள்ளன. இந்த ஷெட்க்கள் அகற்றப்படாவிட்டால், இவை கட்டடமாக உருமாறி, பூங்கா அமைக்க நிலம் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படலாம்.
வண்ணாரபேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்களுக்கு சில கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் ‘பட்டா’ கோரியும் வருகின்றனராம்.
நூலக நிலம் ஆக்கிரமிப்பு
வண்ணாரப்பேட்டை பகுதியில் காலியாக உள்ள நகராட்சி நிலத்தில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் நூலகம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திடீரென நிலத்தை சிலர் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்கிறார் அப்பகுதி கவுன்சிலர் சுரேஷ்.
அகற்றப்படும்
இது குறித்து நகரமைப்புத் திட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, இது குறித்து புகார்கள் வந்துள்ளன. இடம் ஆய்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். குன்னூரில் அத்துமீறி நடக்கும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் இனியும் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காமல் அதிரடி நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே ஆக்கிரமிப்பு நிலங்களில் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியும்.