Last Updated : 08 Jun, 2019 12:40 PM

 

Published : 08 Jun 2019 12:40 PM
Last Updated : 08 Jun 2019 12:40 PM

ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்யும் ‘ஆத்மா’

உயிரிழப்பவர்களுக்கு உற்றார், உறவினர் துணை இருப்பின், அவர்களது இறுதி மரியாதை உரிய முறையில் நடைபெறும். அதேசமயம், அனைவராலும் கைவிடப்பட்டு, பெயர், முகவரி தெரியாமல் உயிரிழப்பவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. இவ்வாறு ஆதரவற்றவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் ‘ஆத்மா’ அறக்கட்டளை. நேரம், காலம் பாராமல் ஆண்டு முழுவதும் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துவரும் அந்த அறக்கட்டளை தொடங்கக் காரணமாக இருந்துள்ளது ஒரு முதியவரின் மரணம்.

“கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் உள்ள அரவான் மேடையில் வயதானவர்கள், பிச்சை எடுப்பவர்கள் படுத்து உறங்குவது வழக்கம். அந்த மேடைக்கு அருகேயுள்ள கோயிலில் 2002-ல் நான், எனது நண்பர்களுடன்  திருப்பணிகளை மேற்கொண்டு வந்தேன். ஒருநாள் பிற்பகலில் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், அரவான் மேடையில் உயிழந்துவிட்டார். தகவலறிந்து  வந்த போலீஸார், எங்களை உதவிக்கு அழைத்தனர்.

கோவை அரசு மருத்துவ மனைக்கு உடலை எடுத்துச் சென்றோம். இரண்டு நாட்கள் கடந்தும்,  உடலைப் பெற்றுச் செல்ல யாரும் முன்வரவில்லை. கைவிடப் பட்டவர்களின் இறுதிக்காலம் எவ்வளவு வேதனையானது என்பது அப்போதுதான் தெரிந்தது. போலீஸார் உதவியுடன் சிங்காநல்லூர் மயானத்துக்கு அவரது உடலை எடுத்துச் சென்று, நல்லடக்கம் செய்தோம். அதுதான் எங்களது முதல்  பணி” என்கிறார் ஆத்மா அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.கந்தவேல்.

நண்பர்கள் நந்தகோபால், மணிகண்டன், ராஜேந்திரன், ஈஸ்வரன் ஆகியோர் பக்கபலமாக இருந்து வருகின்றனர். சாலையோரம் உயிரிழக்கும், அடையாளம் தெரியாத நபர்கள், காப்பகங்களில் உயிரிழக்கும் முதியோர், எய்ட்ஸ், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களை இவர்கள் நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரே நாளில் 22 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

சடலங்களை அடக்கம் செய்ய குழி தோண்டும் செலவு, உடலை எடுத்துச்செல்ல ஆகும் செலவு, உடல் மீது போர்த்தப்படும் துணி, மாலை  உள்ளிட்டவைகளுக்கான செலவு என அனைத்து செலவையும் நண்பர்கள் ஐவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

உடலை நல்லடக்கம் செய்யும் மயானம் நல்லமுறையில் இருக்க வேண்டும் என்பதால், சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், நெசவாளர் காலனி மயானங்களை இவர்கள் பராமரித்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரம் தண்ணீர்  வசதி, மின் விளக்கு வசதி போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு கோவை மாநகராட்சியும் உதவி வருகிறது.

ஆதரவற்ற சடலங் களின் எண்ணிக்கை அதிகரிக்க, அரவணைக்காத உறவுகளே காரணம் என்கிறார் எஸ்.கந்தவேல். “15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆதரவற்ற சடலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கோவையில் ஆதரவின்றி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்காரர்கள்.

aathma-2jpgஎஸ்.கந்தவேல்

உணவு கிடைக்கும் இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள்  தங்கிவிடுகின்றனர். கவனித்துக்கொள்ள வசதி இருந்தும், நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளாமல், வெளியில் துரத்திவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.கடைசி காலத்தில் பாசம், கவனிப்பு கிடைக்காததால் விரக்தி அடையும் முதியோர்,  வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

யாரிடமும் கையேந்தி சாப்பிடக்கூடாது என்பதற்காக, சாப்பிடாமலே சாலையோரம் இறந்து கிடந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆதரவற்றவர்களைக் கண்டறிந் தால் முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர், எங்களை அழைக்கலாம். ஆதரவற்ற சடலங்களை மீட்பது முதல்,  அடக்கம் செய்வது வரை காவல் துறையின் பணி அளப்பரியது. அவர்களால்தான் எங்களால் பிறருக்கு உதவ முடிகிறது. எனவே, காவல் துறைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களிடம் உடலை எடுத்துச்செல்லும் வாகனம் மற்றும் ‘ப்ரீசர் பாக்ஸ்’ வசதி இல்லை. யாரேனும் உதவினால், ஆதரவற்ற உடல்களை மயானத்துக்கு எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x