Published : 06 Jun 2019 01:30 PM
Last Updated : 06 Jun 2019 01:30 PM

மகிமையை இழக்கிறதா மஞ்சள் நகரம்?

’மஞ்சள் நகரம்’ என்ற அடைமொழிக்கு ஏற்ப, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வர்த்தகமாக, மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. மஞ்சள் வணிகத்தில் நூறாண்டு பழமைவாய்ந்த ஈரோடு நகருக்கு, கர்நாடக மாநிலம் மைசூரு, தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, கரூர், தருமபுரி, வேலூர், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் விளையும் மஞ்சள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடக்கும் மஞ்சள் சந்தை, தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.

தொடர்ச்சியான விலை சரிவால், மஞ்சள் சந்தையில் வரத்து ஒருபுறம் குறைந்தும், இருப்பு அதிகரித்தும் இருக்கிறது. இதனால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் விளைச்சலை பணமாக்க முடியாமல், கிடங்குகளில் இருப்பு  வைத்து, கட்டுப்படியாகும் விலை கிடைக்குமா என்ற கவலையில் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்ட கிடங்குகளில் ரூ 250 கோடி மதிப்புள்ள 5 லட்சம் மூட்டை மஞ்சள்  இருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடரும் வீழ்ச்சி...

ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த 2012-ல்  55 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 80 கிலோ) விற்பனைக்கு வந்த நிலையில், 2013-ல் அது 10 முதல் 13 லட்சம் மூட்டையாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் மூட்டைக்கு குறைவாகவே மஞ்சள் விற்பனைக்கு வரும் என்கின்றனர் மஞ்சள் வணிகர்கள்.

கடந்த காலங்களில் மஞ்சளின் விலை பரமபதம்போல ஏறி, இறங்கியிருக்கிறது. கடந்த 2007-ல்  மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,700 முதல் ரூ.2,000 வரையே இருந்தது. அதன் பின் ரூ4,000-ஆக உயர்ந்தது. மஞ்சள் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் விளைச்சல் குறைந்த காலத்தில், ஈரோடு மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டது.

இதனால்,  கடந்த 2010 டிசம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.18 ஆயிரத்துக்கு விற்றது. அடுத்த இரு ஆண்டுகளில்,  அதாவது 2012-ல்  அதிக வரத்து காரணமாக குவிண்டால் ரூ.3,000-ஆக விலை சரிந்தது. தற்போது குவிண்டாலுக்கு ரூ. 5,000 முதல் அதிகபட்சமாக ரூ.7,500 வரை  விலை போகிறது.

அதிகரிக்கும் உற்பத்திச் செலவு!

இதர பயிர்களைப்போல அல்லாமல், மஞ்சள் பயிருக்கு 9 மாதங்கள் வரை தண்ணீர்  தேவைப்படுகிறது. பருவமழை குறைவு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதும், மஞ்சள் உற்பத்தி தற்போது குறைந்ததற்கு காரணமாகக் கூறுகின்றனர் விவசாயிகள். சராசரியாக மஞ்சள் உற்பத்திக்கு  ஓர் ஏக்கருக்கு ரூ.1.80 லட்சம் செலவாகிறது. இந்த நிலையில், குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம்  கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதேசமயம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால், குவிண்டாலுக்கு ரூ.4,000 விலை கிடைத்தாலே போதுமானதாக உள்ளது.

இதுகுறித்து காலிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்புச் செயலர் ஆர்.செல்வகுமார் கூறும்போது, “திருச்செங்கோடு, ஆத்தூர், சேலம், நாமகிரிப்பேட்டை, மதுரை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் மஞ்சள் சந்தை நடத்தப்படுகிறது. இந்த சந்தைகளுடன் ஒப்பிடுகையில், ஈரோடு சந்தையில் மஞ்சளுக்கு குறைவான விலையே கிடைக்கிறது.

ஈரோடு சந்தையில் மஞ்சளைத் தரம் பிரித்து விற்பனை செய்யாததே இதற்கு முக்கியக் காரணம். உதாரணமாக, திருச்செங்கோடு சந்தையில் 66.5- கிலோ  கொண்ட மூட்டையில், கல், மண், துசி, குரணை (ஒட்டுக்கிழங்கு) போன்றவற்றைப் பிரித்து, தரமான மஞ்சளை, சரியான எடையில் விவசாயிகள் வழங்கின்றனர். இதனால், விலை கூடுதலாகக் கிடைக்கிறது.  ஈரோட்டில் அதுபோன்ற நடைமுறை இல்லை.

மஞ்சள் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயப்படி,  ஏக்கருக்கு ரூ.71 ஆயிரம் வரைதான் கடன் கிடைக்கிறது. ஆனால், ஏக்கருக்கு ரூ.1.80 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் வெட்டும் கூலி, சலிப்பதற்கான கூலி, போக்குவரத்துச் செலவு என அனைத்தும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக உள்ளது.  இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை”  என்றார்.

மஞ்சள் வணிகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வரும், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலர் வி.கே.ராஜமாணிக்கம் கூறும்போது, “ஈரோடு மஞ்சள் சந்தையைப் பொறுத்தவரை, வரத்து அதிகமாகவும், விற்பனை குறைவாகவும்  இருக்கிறது.

80 சதவீதம் பழைய மஞ்சள்!

விற்பனைக்கு வரும் மஞ்சளில் 80 சதவீதம் மஞ்சள் பழைய இருப்பாகவும், 20 சதவீதம் புது மஞ்சளாகவும் உள்ளது. ஐந்து ஆண்டு பழமையான மஞ்சள் என்பதால், அவை தரத்தின் அடிப்படையில் குவிண்டால் ரூ.5,000 என்ற அளவிலேயே விற்பனையாகிறது.

மஞ்சள் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரோடு, தற்போது இதர மாநிலங்களின் வரத்து, விலையைச் சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதர மாநில மஞ்சளுடன் ஒப்பிடுகையில், ஈரோடு மஞ்சள் தரத்தில் தனித்தன்மை கொண்டதாகும்.

இந்த ஆண்டு பருவமழையைப் பொறுத்தே,  மஞ்சள் விளைச்சல் குறித்த அளவு முடிவாகும். `மஞ்சள் நகரம்’ என்ற அடைமொழியை  ஈரோடு மாவட்டம் தக்கவைக்க வேண்டுமானால், மஞ்சள் பயிரிடும் பரப்பு குறையக் கூடாது. நெல்லுக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்வதுபோல, மஞ்சளுக்கும் கட்டுப்படியாகக் கூடிய  குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்தால், விவசாயிகள் தொடர்ந்து மஞ்சள் பயிரிடுவார்கள்.மற்ற மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து இருந்தாலும், ஈரோட்டு மஞ்சளுக்கான தனித்தன்மையின் மூலம் சந்தை காப்பாற்றப்படும்.

தரத்தை நிர்ணயிக்கும் `குர்குமின்’

மஞ்சளில் உள்ள `குர்குமின்’ என்ற வேதிப்பொருளைக் கொண்டே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மண்வளம், விதை ஆகியவையே குர்குமின் அளவை நிர்ணயம் செய்கின்றன. எனவே, மஞ்சள் பயிரிட ஏற்ற மண் வளம், தரமான மஞ்சள் விதை ஆகியவற்றை விவசாயிகளுக்கு அரசு வழங்குவதன் மூலம், தரமான மஞ்சள் விளைச்சலை அதிகரிக்கலாம்.

இது தொடர்பாக அரசு ஆய்வுகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இந்திய மஞ்சள் சந்தையில் 50 சதவீத பங்கு வகித்த ஈரோடு மஞ்சள் சந்தை மீண்டும் உயிர்த்தெழுவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையாய் உள்ளன” என்றார்.

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு...

மஞ்சள் வகைகளில்  இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில வைகான் மஞ்சள், ஒடிசா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், அதன் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், காங்கயம், அன்னூர், தொண்டாமுத்தூர் போன்ற  பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு `ஈரோடு மஞ்சள்’ என்ற பெயர் பொருந்தும். ஈரோடு விதை மஞ்சளை  பிற பகுதியினர் வாங்கிச்சென்று விதைத்தாலும்,  அது ஈரோடு மஞ்சளாக கருத முடியாது. ஏனெனில், மண்ணை அடிப்படையாகக்  கொண்டுதான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதுடன், மற்ற மஞ்சளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதியின்போது நல்ல விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அம்மன் கோயில் குங்குமம் தயாரிக்க ஈரோடு மஞ்சள்!

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் குங்குமம் தயாரிப்பதற்காக, ஆண்டுதோறும் ஈரோட்டில் இருந்து மஞ்சள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன்கோயில் மற்றும் திருவேற்காடு கருமாரியம்மன்கோயில் ஆகிய 4 கோயில்களில் குங்குமம் தயாரிக்கப்பட்டு,  மாநிலத்தில் உள்ள பிற கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கூட்டுறவு மஞ்சள் விற்பனை நிலையத்தில் இருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சராசரியாக 3  டன் மஞ்சள் ஆண்டுதோறும் அனுப்பிவைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x