Published : 05 Jun 2019 12:02 PM
Last Updated : 05 Jun 2019 12:02 PM

பெண் கல்வியே இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்தும் ! - சமூகப்பணியில் ‘திருக்குரான்’ ஆய்வாளர் அமீர் அல்தாஃப்

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அத்தனை பேரும் கல்வி கற்க வேண்டும். நன்கு படித்து, வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும். சொந்தக்காலில் நிற்க வேண்டும். இதற்காகத்தான் பாடுபட்டு வருகிறேன் என்கிறார் கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த அமீர் அல்தாஃப்(66). திருக்குரான் அறக்கட்டளை பொதுச் செயலர், எய்ம்ஸ் சமுதாயக் கல்லூரி பொதுச் செயலர், புதிய சமுதாயம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், அகில உலக திருக்குரான் ஆய்வாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. ஆனாலும், பெண் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தருவதாகக் கூறும் இவரை சந்தித்தோம்.

“பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமம். பெற்றோர் முகமது மைதீன்-பீவி பாத்திமா. கிராமத்தில் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, சென்னை நியூ கல்லூரியில் பி.காம். மற்றும் பச்சியப்பா கல்லூரியில் எம்.காம். படித்தேன். பின்னர் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பி.ஏ. பயின்றேன்.

1974-ல் கோவையில் உள்ள தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி) நூற்பாலையின் தலைமை அலுவலகத்தில் கணக்காளராகப் பணியில் சேர்ந்தேன்.  2011-ல் நிதி மேலாளராக ஓய்வுபெற்றேன்.

படிக்கிற காலத்தில் இருந்தே, இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென விருப்பம் அதிகம். 1983-ல் அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத் தொடங்கினேன்.

அதன் மூலம் சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்துவது, கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை எதிர்கொள்ள உதவுவது, 85 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது என பல  பணிகளில் ஈடுபட்டேன்.

இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கல்வி பயிலத் தொடங்கினர். அனைத்து முஸ்லிம் மாணவிகளையும் கல்வி கற்கச் செய்வதும், பன்முகச் சமூகத்தோடு ஒன்றிவாழும் வகையில் சமூக நல்லிணக்கப் பணிகளில் ஈடுபடுவதும்தான் ஐக்கிய ஜமாஅத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

2003-ல் திருக்குரான் அறக்கட்டளையைத் தொடங்கினேன். இஸ்லாமிய சமூகமும், மார்க்கமும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.  இதை மாற்றுவதற்காக, திருக்குரானை எளிய தமிழில் கொடுக்க முடிவு செய்து, புத்தகம் வெளியிட்டோம். ஆண்டுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறோம்.

சமுதாயக் கல்லூரி

அதே ஆண்டில், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து `எய்ம்ஸ் சமுதாயக் கல்லூரி’ தொடங்கினோம். தமிழகத்தில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் சமுதாயக் கல்லூரி இதுதான். 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் மற்றும் டிசைனிங் டெக்னாலஜி, ஆஃபீஸ் ஆட்டோமேஷன், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகிய மூன்று பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பயிலலாம். இக்கல்லூரியில் தற்போது 120 மாணவிகள் பயில்கின்றனர். இங்கு கல்வி முழுக்க இலவசம்தான். மாணவிகள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. கடந்த 15 ஆண்டுகளில் 1,500 பேர் பயின்றுள்ளனர்.  பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே இதை நடத்துகிறோம்.

இதற்கு முன்னதாக, 1996-ல் சுந்தராபுரம் அருகேயுள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் கம்ப்யூட்டர் மையம் தொடங்கினேன். இந்தியாவிலேயே ஒரு பள்ளிவாசலில் கம்ப்யூட்டர் மையம் தொடங்கியது அதுவே முதல்முறையாகும். அனைத்து சமூக மாணவ, மாணவிகள் 3 ஆயிரம் பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

பெட்டகமும், அத்தாட்சிகளும்...

கோவை முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளேன். `பெட்டகம்’ என்ற இந்த நூல் 2011-ல் வெளியானது. மிகச் சிறந்த வரலாற்று நூலுக்கான சீதக்காதி விருது 2012-ல் இந்த நூலுக்குக் கிடைத்தது.

இதையடுத்து, `அத்தாட்சிகள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். 4 வால்யூம்கள், 2,800 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் வரும் ஜூலை மாதம் வெளிவருகிறது. திருக்குரான் கலைக்களஞ்சியமான இந்தப் புத்தகத்தில், திருமறையில் சொல்லப்பட்டுள்ள அறிவியல், விஞ்ஞானம், ஆன்மிகம், விண்ணியல், தத்துவம், இஸ்லாமிய வரலாறு என அனைத்து  விஷயங்கள், 15,000 வண்ணப் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக நான்  திருக்குரான் தொடர்பாக  ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். சவுதி அரேபியா, அபுதாபி, சார்ஜா, ஜோர்டான், மலேசியா, மாலி, இலங்கை, இஸ்தான்புல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்துள்ளேன். இதற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘அல்ஜசீரா சேனல்’ உலகில் உள்ள சிறந்த திருக்குரான் ஆய்வாளர்கள் 1,000 பேர் கொண்ட பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளனர்.

30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட நூல்...

அடுத்த 30 வால்யூமில், 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆங்கிலப் புத்தகத்தை, `திருக்குரானின்  மொழியியல் அற்புதங்கள்’ என்ற பெயரில் வெளியிட உள்ளேன். திருக்குரான் மனிதர்களால் எழுதப்பட்டது அல்ல. இறைவனின் வேதம்தான் அது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் ஆய்வுகளின் தொகுப்புதான் இந்த நூல். சவுதி அரசு வழங்கும் `கிங் பைசல் விருது’ என்பது நோபல் விருதுக்கு இணையானது. இந்த ஆய்வுத் தொகுப்பை

சமர்ப்பித்து, இந்த விருதைப் பெற வேண்டுமென்பதே எனது லட்சியம். 2021-ம் ஆண்டுக்குள் இந்த நூல் வெளியிடப்பட்டுவிடும்.

ஏழைகளுக்கு வீடு...

கோவை சுகுணாபுரம் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் முஸ்லிம்கள் மட்டும் 1,500-க்கும் மேல் இருப்பார்கள். இங்கு சாலை, தண்ணீர், கழிப்பறை, மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது வீடுகளை இழந்தவர்கள்

தான் அதிகம் வசிக்கின்றனர். ஆஸ்பெட்டாஸ் கூரையில் வசிக்கும் அவர்களைப் பார்த்தபோது, மனம் மிகவும் கனத்துப்போனது. எனவே, அவர்களுக்கு உதவத் திட்டமிட்டேன்.

உலகெங்கும் உள்ள நண்பர்கள், இங்கிருந்து வேலைக்குச் சென்ற இளைஞர்கள் உதவியுடன், 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, 61 பேருக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளோம்.  வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. வீடுகள் கட்டத் தொடங்கியவுடன் அந்தப் பகுதிக்கு சாலை, குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் வரத் தொடங்கிவிட்டன. அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து வருகிறது. `புதிய சமுதாயம் அறக்கட்டளை’ என்ற அமைப்பு மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

நான் ஐக்கிய ஜமாஅத்  அமைப்பில் இருந்தபோது, 470 பேருக்கு வங்கி கல்விக்  கடனுதவி பெற்றுத் தந்துள்ளேன். மொத்தம் ரூ.7 கோடி கடனுதவி பெற்றுத்தந்ததால், பலரும் டாக்டர்கள், இன்ஜினீயர்களுக்குப் படித்து பட்டம் பெற்று, சிறந்த நிலையை அடைந்துள்ளனர்.

இதேபோல, புதிய சமுதாயம் பதிப்பகம் சார்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனைவி ஜுனைதா பீவி, மகன் அஷ்ரப், மகள் நூரியா ஆகியோரின் ஒத்துழைப்பே, நான் சமூகப் பணிகளில் முழுமையாக ஈடுபட உறுதுணையாக உள்ளது.

சமூக சிந்தனையாளர் விருது, கேரள நலச் சங்க விருது, அமெரிக்காவில் உள்ள குளோபல் எஜுகேஷனல் பயிலகம் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் என பல விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம்விட,  சமூக நல்லிணக்கத் தூதர், சமூகப் பணியாளர் என்று குறிப்பிடுவதையே பெரிதாகக் கருதுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x