பராமரிப்பில்லாத பூங்காக்கள்!

பராமரிப்பில்லாத பூங்காக்கள்!
Updated on
2 min read

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்  தரப்பு மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு மையமாகத் திகழ்பவை பூங்காக்கள். பொதுவாகவே, பூங்காக்கள் என்றதும், அழகான, வாசனைமிக்க மலர்களுடன் கூடிய  செடிகள், நிழல் தரும் மரங்கள், பசுமையான சுற்றுச்சூழல், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் ஓடியாடி விளையாட விளையாட்டு உபகரணங்கள் போன்றவைதான் நம் நினைவுக்கு வரும்.

பூங்காக்களின் தேவையை உணர்ந்த அரசு,  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாநிலம்  முழுவதும் பொது ஒதுக்கீட்டு இடங்கள்,  பயன்படுத்தப்படாமல் உள்ள காலி இடங்களில்  பூங்காக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்கள் மட்டும் இருக்கும் சிறுவர் பூங்காவும் உண்டு.  விளையாட்டு உபகரணங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை வசதி,  ஓய்வெடுக்க இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய,  பெரிய பரப்பிலான பூங்காக்களும் உண்டு.

poonga-3jpgபி.ராஜ்குமார்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, முக்கிய நகரங்களில் ஒன்றான கோவை மாநகரில், பல்வேறு  பகுதிகளிலும் அதிக அளவில் பூங்காக்கள் உள்ளன. சிறுவர் பூங்காக்கள், நிறைய பேர் கூடும் பெரிய பூங்காக்கள், நேரு மைதானம் அருகேயுள்ள  வ.உ.சி. உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, மூத்த குடிமக்கள் நினைவுப் பூங்கா, அறிவியல் பூங்கா என பிரத்தியேகப் பூங்காக்களும் உள்ளன. மொத்தத்தில், கோவை மாநகராட்சி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன.

இதில் சிலவற்றைத் தவிர, பெரும்பாலான பூங்காக்கள் மாநகராட்சி மண்டல அலுவலக நிர்வாகங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், பூங்காக்களை பராமரிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள  ஒப்பந்த நிறுவனத்தினர்,  பூங்காக்களை உரிய முறையாக பராமரிப்பது கிடையாது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து கோவை ஆவாரம்பாளையத்தைச்  சேர்ந்த சமூக ஆர்வலர் பி.ராஜ்குமார் கூறும்போது, “மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகமும்,  தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தி னரும் முறையாகப்  பராமரிப்பது இல்லை. பூங்காக்களில் உள்ள செடி, கொடி, புல்வெளிகள், தளங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை தினமும் சுத்தம் செய்து, பராமரிப்பது கிடையாது.

பூங்கா வளாகத்தை சுத்தம் செய்வது, செடிகளை முறையாகப் பராமரிப்பது, களைச் செடிகளை அகற்றுவது, தண்ணீர் ஊற்றி பராமரிப்பது போன்ற பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை. மேலும், பூங்கா வளாகத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், தளவாடப் பொருட்களையும்  முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால் பூங்கா வளாகம், புதர்கள் மண்டிக் காட்சியளிக்கிறது.

விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால், பூங்காவுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துக் குள்ளாகின்றனர். கழிப்பிட வசதியுள்ள பூங்காக்களில் அந்தக் கழிப்பிடங்களை முறையாகப்  பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது.  2010-ல் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தபோது, மாநகரில் செம்மொழிப் பூங்காக்கள் திறக்கப்பட்டன. அப்போதைய திமுக ஆட்சியில் முறையாகப் பராமரிக்கப்பட்ட இந்த பூங்காக்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சரிவரப் பராமரிக்கப்படவில்லை.

இதனால்,  மாநகரில் பல இடங்களில் செம்மொழி பூங்காக்கள் பராமரிப்பின்றி, புதர்மண்டிக் காணப்படுகின்றன. மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள  மாநகராட்சிப் பூங்காக்களில் நடைபாதைக் கற்கள், விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. கோவை சிவானந்தா காலனி அருகே அமைக்கப்பட்ட அறிவியல் பூங்காவும்,  முறையாக பராமரிக்கப் படவில்லை.  வ.உ.சி. உயிரியல் பூங்கா அருகேயுள்ள மூத்த குடிமக்கள் பூங்காவும்  முறையாக பராமரிப்பில்லாமல் உள்ளது.

இதனால், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் அவதிகுள்ளாகின்றனர். மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமான பூங்காக்களைப் பராமரிப்பதில், மாநகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். பூங்காக்களை முறையாகப் பராமரிக்காத ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பூங்காக்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை...

இதுகுறித்து கோவை மாநகர உயரதிகாரிகள் கூறும்போது, “மாநகரில் உள்ள 400 பூங்காக்களில்,  ஏறத்தாழ 30 பூங்காக்கள் குடியிருப்பு சங்கங்கள்,  தனியார் அறக்கட்டளைகள், பொதுநலச் சங்கங்கள் சார்பில் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல, மண்டல அலுவலக நிர்வாகங்கள் மூலமும் ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு,  பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன.பூங்காக்கள் பராமரிப்பில் முழுக் கவனம் செலுத்துமாறு, அலுவலர்கள், பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேசமயம், பூங்கா பராமரிப்புக்கென பிரத்தியேக நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. பூங்காக்களை பராமரிக்க விரும்பும் தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகள் ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகலாம். மேலும்,  ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ்,  பூங்காக்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in