

நைஜீரியாவில் இருந்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் சென்னைக்கு கடந்த 22-ம் தேதி வந்தார். மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பாலமுருகனுக்கும் காய்ச்சல் இருந்ததால் அது எபோலா காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு எபோலா காய்ச்சல் இல்லை என்பதும், சாதாரண காய்ச்சல்தான் என்பதும் தெரியவந்தது. ஆனாலும், அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு (என்ஐவி) அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு வரும் வரை, அவரை தீவிரமாக கண்காணிக்க டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, அவரை தனி வார்டில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், “பாலமுருகனுக்கு இருந்த சாதாரண வைரஸ் காய்ச்சல் குணமாகிவிட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்.
புனேவில் இருந்து ரத்த பரிசோதனை முடிவு வரும்வரை, அவர் மருத்துவமனையில் இருப்பார். அதன்பின் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்” என்றனர்.