Published : 06 Jun 2019 13:42 pm

Updated : 06 Jun 2019 13:42 pm

 

Published : 06 Jun 2019 01:42 PM
Last Updated : 06 Jun 2019 01:42 PM

கொங்கு மண்டலத்தை வளமாக்கும் பி.ஏ.பி. திட்டம்!

வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான்... என்று ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் மகத்துவத்தை விளக்கியிருப்பார் அவ்வைபிராட்டி. தென் கொங்குச் சீமையில் ஆற்றங்கரைத் தென்னையும், பசுமையான நெல்வயல்களும், அவற்றில் மேய்ந்து கொண்டிருக்கும் வாத்துக் கூட்டங்களும், கரும்புத் தோட்டங்களும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் பயன்களே!

தற்போது பொன்விளையும் பூமியாய் மாறியிருக்கும் பொள்ளாச்சி தாலுகாவில், ஆனைமலை கரவெளி பகுதியைத் தவிர்த்து, பொள்ளாச்சி, உடுமலையின் ஒரு பகுதி, பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகள், ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் நீரின்றி வறண்டு, வானம் பார்த்த பூமியாய்க் காட்சியளித்தவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


மாரி பொழிந்து, வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள உரலில் தேங்கும் மழைநீரின் அளவைக் கொண்டு, ஓர் உழவு மழைக்கு சோளமும், கம்பும், இரண்டு உழவு மழைக்கு சாமையும், ராகியும் விளைவிக்கலாம் என்று, அப்போதே நீர் மேலாண்மை அறிந்திருந்தனர் நம் முன்னோர்கள்.

மழை பெய்து, பூமி குளிர்ந்து, வறண்ட நிலத்தில் தண்ணீர் பாய்ந்து ஈரமான பின்பே, முன்னேர் நிலத்தைக் கீறிச் செல்ல, பின்னேர் நிலத்தை கிழிக்க, கம்பு, சோளம், சாமை, ராகி என சிறு தானியங்கள் விதைக்கப் பட்டன. சோளச்சோறும், ராகிக்களியும், கம்பஞ் சோறும், கட்டித் தயிரும் சாப்பிட்ட மக்களுக்கு, நெல்லுச் சோறு என்பது நெடுங்கனவாகவே இருந்தது.

நேருவின் தொலைநோக்குப் பார்வை...

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களால், தமிழகத்தில் தென் கொங்குச் சீமையில் அணைகள் எழுந்தன. மழையால் அந்த அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்தன. அந்த நீரால் தரிசு நிலங்களில் பயிர்கள் செழித்தன. பஞ்சத்தில் இருந்த வேளாண் குடிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

இதனால் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்தது.இந்தப் பகுதி மக்களின் மனதில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றித் தந்த காமராஜரின் புகழ் இப்போது வரை உயர்ந்து நிற்கிறது.பொதுவாக பெரியவர்கள், நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள்.

ஆனால், பழமையை மறந்ததால் நாம் இழந்த பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் எவ்வளவோ உள்ளன. ஓர் அமைப்போ, திட்டமோ, அது உருவான வரலாறு, கடந்து வந்த சிக்கல்கள், அதன் இன்றைய நிலை ஆகியவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே, அவற்றைப் பராமரித்து, பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல முடியும். அதனால்தான், கொங்குச் சீமையை செழிக்க வைத்துக்கொண்டிருக்கும் பிஏபி திட்டம் உருவான வரலாற்றை இந்தக் கட்டுரையின் மூலம் விளக்க முற்படுகிறோம்.

மதராஸ் மாகாணத்தில் பஞ்சம்!

மதராஸ் மாகாணத்தில் 1870-களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். உணவுப் பற்றாக்குறையைப் போக்க, 1910-ல் மேட்டூருக்கு அருகே பாலமலைக்கும், வனவாசி மலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்ட ஆங்கிலேயப் பொறியாளர்கள் திட்டமிட்டனர். அந்த திட்டத்தில் அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததால், அத்திட்டத்தைக் கைவிட்டது பிரிட்டஷ் அரசு.

இந்த நிலையில், மதராஸ் மாகாணத்தில் வேறு வேளாண் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த 1920-களில் ஆங்கிலேய அரசு மீண்டும் திட்டமிட்டது. பிஏபி திட்டமும், மேட்டூர் அணையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதை இச்சமயத்தில் அறிந்துகொள்ள வேண்டும்.

பிஏபி திட்டம் 60 ஆண்டுகளுக்கு முன் உருவான திட்டம் கிடையாது. அதற்கான விதை 97 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டு விட்டது. அதன் வரலாற்றைப் பார்க்கலாம். 1921-ல் மதராஸ் மாகாண அரசில், பொதுப்பணித் துறையில் தலை சிறந்தப் பொறியாளராக விளங்கியவர் ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார்.

 கொங்குச் சீமையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், மேற்குநோக்கிப் பாயும் சாலக்குடி ஆற்றை, கிழக்கு நோக்கித் திருப்பிவிட்டு, அன்றைய கோயம்புத்தூர் ஜில்லாவின் தெற்குப் பகுதிகளுக்கு பாசன வசதி அளிக்கத் திட்டமிட்டார் அவர். இது தொடர்பான திட்டத்தையும் தயாரித்து, அன்றைய மதராஸ் மாகாண தலைமைப் பொறியாளரிடம் சமர்ப்பித்தார் ஆரோக்கியசாமி.

மேட்டூர் அணை...

ஓர் ஆற்றின் போக்கை திசை திருப்பி அணை கட்டுவதைக் காட்டிலும், ஓடும் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது எளிது என்றெண்ணிய ஆங்கிலேய அரசு, சாலக்குடி ஆற்றை கிழக்கு நோக்கித் திருப்பி, அணை கட்டும் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. மாறாக, காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை மீண்டும் முன்னெடுத்தது. இதற்காக மேட்டூர் சாம்பள்ளியில் அணை கட்ட முடிவு செய்து, ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.

திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 1924-ல் இங்கிலாந்து அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. 1925-ல் மேட்டூர் அணை கட்டும் பணியில் மதராஸ் மாகாணப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பல்வேறு சிரமத்துக்குப் பின்னர் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு, டெல்டா பாசனத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அதேசமயம், ஆங்கிலேயப் பொறியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட, சாலக்குடி ஆற்றை கிழக்கு நோக்கித் திருப்பி அணைகட்டும் திட்டத்தை 1957-ல் தமிழகப் பொறியாளர்கள் உயிர்ப்பித்தனர்.

மாநிலத்துக்குள் நதிகளை இணைத்து நீர்மேலாண்மையில் தன்னிறைவை எட்ட முயலும் ஆந்திர அரசின் செயலுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுத் தெரிவிக்கும் இன்றைய தலைமுறையினர், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு-கேரளா மாநிலங்களுக்கு இடையே பல ஆறுகளை இணைத்து உருவாக்கப்பட்ட, பல்நோக்குத் திட்டமான பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம். ஆசியாவின் பொறியியல் அதிசயம் என்று புகழப்படும் பிஏபி திட்டம் குறித்த முழுமையான தகவல்களை `இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பிஏபி பயணம் தொடரும்...பிஏபி திட்டம்கொங்கு மண்டல வளம்நீர் மேலாண்மை திட்டம்பிஏபி திட்டம் மதராஸ் பஞ்சம்வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் பரம்பிகுளம் ஆழியாறு திட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x