Published : 10 Jun 2019 12:43 PM
Last Updated : 10 Jun 2019 12:43 PM

கருணை மழை பொழியும் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி !

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்” என்று ராமாயணத்தில் குறிப்பிடுகிறார்  கம்பர்.

அதாவது, ராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்கிறார் அவர். சரி, ராம நாமம் நமக்கு என்னவெல்லாம்  தரும்? அதற்கும் பதில் கூறுகிறார் கம்பர். “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே, தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,  சென்மமும் மரணமும் இன்றித் தீருமே, இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால்” என்றெழுதி,  ராம நாமத்தைக் கூறுவதால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும், நன்மையும், செல்வமும் தேடி வரும் என்றும் தெளிவுபடுத்துகிறார் கம்பர்.

கோவை நகரின் மையப் பகுதியில், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானம். இக்கோயிலால் இப்பகுதியே ராம் நகர் என்று பெயர் பெற்றுள்ளது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள ராம் நகர் பகுதி விவசாய நிலமாக இருந்துள்ளது. அங்கு வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குமாஸ்தாக்கள் குடியிருப்பதற்காக, அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்லாடர் என்ற ஆங்கிலேயர் இடம் ஒதுக்கியுள்ளார்.

அப்பகுதி அக்ரஹாரம், ரங்கநாதபுரம், கரிவரதபுரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது.  கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு ஏற்ப, குடியிருப்புகளின் மையப் பகுதியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 85 சென்ட் நிலத்தை, கோவை பிராமணாள் புதுஅக்ரஹாரம் ஆலய நிர்வாகக் கமிட்டி வாங்கியுள்ளது. ஊத்துக்குளி ஜமீன்தாராக இருந்த முத்துகுமாரசாமி

காளிங்கராயர், தனது நிலத்தை கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2,795 ரூபாய்க்கு, ஆலய நிர்வாக கமிட்டிக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர், ஆன்மிகப் பெரியவர்கள் நல்லாசியுடன் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயில் கட்டும் பணி நடைபெற்றது. தொடர்ந்து,  பிராமணர் புது அக்ரஹாரம் என்ற இந்தப் பகுதி, ராம் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இக்கோயிலில் ஸ்ரீசீதா, லஷ்மணர் சமேத ஸ்ரீகோதண்டராமர் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

வேறெந்த கோயிலிலும்  இல்லாத வகையில், ஸ்ரீராமருக்கு எதிரில் பக்த ஆஞ்சநேயர் தனி சன்னதியில் கைகூப்பியபடி அருள் பாலிக்கிறார். இதுதவிர, விநாயகர் சன்னதி, ஸ்ரீராமருக்கு இடதுபுறம் நவக்கிரஹங்கள் சன்னதி, பின்புறம் வில்வ லிங்கேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

இந்தக் கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1933-ம் ஆண்டு  நடைபெற்ற நிலையில், தொடர்ந்து பல்வேறு விரிவாக்கப் பணிகள் படிப்படியாக நடைபெற்றுள்ளன.

இங்கு ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டத் திட்டமிடப்பட்டு, 2006 பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்றபோது, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோயில் வளாகத்தில் இருந்த வில்வ மரத்தின் கீழ் வில்வ லிங்கேஸ்வரர் சன்னதி அமைக்கப்பட்டது. மேலும், அரச மரத்தடியில் இருந்த விநாயகர், நாகர் சன்னதிகள் சீரமைக்கப்பட்டன.

ராமர் சன்னதி மேல் உள்ள விமானம், சுற்றுப்பிரகாரம் புதுப்பிக்கப்பட்டது. கோயில் நகைகள், சுவாமிகளின் ஆடைகளைப் பாதுகாக்கும் அறை, யாகசாலை, நிர்வாகக் குழு கூட்ட அரங்கம், மடப்பள்ளிகள், அலுவலகம், அர்ச்சனை சீட்டு விற்பனைக்கூடம், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஸ்ரீமத் அபினவ

வித்யாதீர்த்த பிரவசன மண்டபம் கட்டப்பட்டன. ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் 2008 பிப்ரவரி 18-ம் தேதி கோயிலின் 5-வது மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள  பாத்ம சம்ஹிதை கிரமப்படி நித்ய 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலையில் 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலையில் விஸ்வரூப பூஜை, அபிகமனம், இஜ்ஜை பூஜைகள் நடைபெறும்.

பகல் 11 மணியளவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மாலையில் சாயரட்சை, திருவாராதனம், சயன பூஜைகள் நடத்தப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும்.  அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று முறைப்படியும் இங்கு வழிபாடுகள் நடைபெறுவது சிறப்புக்குரியது.

ஒவ்வொரு மாதமும் ராமரின் புனர்பூச நட்சத்திரம், பெருமாளின் திருவோண நட்சத்திரம் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். திருவோண நட்சத்திரத்தன்று மகா சுதர்சன ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ஹயக்கீரிவர் ஹோமங்கள் நடைபெறும். பௌர்ணமி தினத்தன்று சத்யநாராயணா பூஜை நடத்தப்படுகிறது.

இதேபோல, சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்

படும். கொடியேற்றம், தினமும் இருவேளை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஹோமங்கள், சுவாமி புறப்பாடு, திருவீதி உலா என இவ்விழா களைகட்டும். ஸ்ரீராம நவமியன்று தீர்த்தவாரி நடைபெறும். இதேபோல, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். விசேஷ நாட்களில் கோவை மட்டுமின்றி, சுற்றுவட்டாரங்களில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இக்கோயிலில் சுவாமிக்கு வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், புளியோதரை ஆகியவை நைவேத்யமாக சமர்ப்பிக்கப்படுகின்றன. இக்கோயிலின் சிறப்பே தூய்மைதான். கோயில் வளாகம் முழுவதும் மிகத் தூய்மையாகவும், அமைதியாகவும் பராமரிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அழகிய நந்தவனமும் இங்குள்ளது. சுமார் 80 ஆண்டுகளாக

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை பஜனை கோஷ்டியின் ஆன்மிக பஜனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி தேவஸ்தான நிர்வாக குழுத் தலைவர் என்.வி.நாகசுப்பிரமணியம், செயலர் டி.எஸ்.மோகன்சங்கர், துணைத் தலைவர் என்.பார்த்தசாரதி, அறங்காவலர்கள் டாக்டர் சிஆர்பி.சந்திரன், பி.ஆர்.விட்டல், டி.பி.விஸ்வநாதன், கே.ஜெகன், டாக்டர் வி.வி.பார்த்தசாரதி, வி.கிருஷ்ணகுமார்  ஆகியோர் கொண்ட நிர்வாகக் குழு, இக்கோயிலை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x