

'அரசர்களின் விளையாட்டு’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட சதுரங்கப் போட்டியில், இளவரசனாய் பதக்கங்களை வேட்டையாடி வருகிறார் கோவையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஆகாஷ். மூளை விளையாட்டு (மைண்ட் கேம்) என்றழைக்கப்படும் இப்போட்டியில், எதிராளியின் நகர்வை துல்லியமாகக் கணித்து, அவர்களை வீழ்த்தும் வல்லமை படைத்துள்ளான் இச்சிறுவன்.
கோவை கணபதியைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி யான எஸ்.கோவிந்தராஜ், ஜி.கமலேஷ்வரி தம்பதியின் மகன் ஜி.ஆகாஷ். கணபதியில் உள்ள எஸ்.இ.எஸ். மெட்ரிக். பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் ஆகாஷ், சதுரங்கத்தில் மாவட்ட, மாநிலப் போட்டிகளில் வென்று, பதக்கங்களைக் குவித்துள்ளான்.
தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் சென்னையில் கடந்த மே மாதம் நடத்திய, மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 249 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற ஆகாஷ், 9 சுற்று ஆட்டங்களில் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தான். இதேபோல, 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 9 சுற்றுகளில் விளையாடி 7.5 புள்ளிகள் பெற்று, 7-வது இடம் பிடித்தான்.
இந்த வெற்றியின் மூலம், ஜூலை மாதம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெறும் தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும், வரும் ஆகஸ்ட் மாதம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள தேசியப் போட்டியில் 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளான்.
2017-ல் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, தமிழ்நாடு சதுரங்கக் கழகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில், 7 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 9 சுற்றுகள் கொண்ட போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றான்.
இதேபோல, 6 வயதில் 1-ம் வகுப்பு படிக்கும்போது, கோவை மாவட்ட சதுரங்கக் கழகம் நடத்திய, மாவட்ட சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்றான்.
சதுரங்கப் போட்டிகளில் பதக்க வேட்டையாடி வரும் ஜி.ஆகாஷை சந்தித்தோம். “எனது அண்ணன் ஜி.கிஷோர்குமார், சதுரங்கம் விளையாடி வருகிறான். அவனைப் பார்த்து, எனக்கும் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. எனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் மறுப்பேதும் கூறாமல், பயிற்சியாளர் டி.தனசேகரனிடம் பயிற்சி பெற சேர்த்து விட்டனர்.
பயிற்சியாளரின் வழிகாட்டுதல்படி, சதுரங்க ஆட்டத்தை முழுமையாக கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், போட்டிகளில் எதிராளிகளை எதிர்கொள்வது எப்படி? அவர்களின் நகர்வுகளைக் கணிப்பது எப்படி? என்றெல்லாம் பல்வேறு யுக்திகளையும் கற்றுக் கொடுத்தார்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது, மாவட்ட சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்தேன். முதல் போட்டியிலேயே முதலிடம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்த உற்சாகம்தான் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறத் தூண்டியது.
சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும், வெளிநாட்டு வீரர்களுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்பதும் என்னுடைய ஆவல். எதிர்காலத்தில், ‘கிராண்ட் மாஸ்டர்’ விஸ்வநாதன் ஆனந்தைப்போல, சதுரங்கப் போட்டியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்றான் நம்பிக்கையுடன் ஜி.ஆகாஷ்.
கோவை மாவட்ட சதுரங்கக் கழக இணைச் செயலர் கே.ஆறுமுகம் கூறும்போது, “கோவையில் கடந்த 2018-ல் நண்பர்கள் சதுரங்கக் குழு நடத்திய, வெள்ளி விழா சதுரங்கப் போட்டியில், இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருடன் ஜி.ஆகாஷ் விளையாடி, போட்டியை சமன் செய்தான்.
திறமை மிகுந்த இந்த வீரர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்ற நிலையில், போட்டியை சமன் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். சதுரங்க வீரர்களின் ரேங்க்கில் ஆகாஷ் 1613 புள்ளிகள் பெற்றுள்ளான். எதிரில் ஆடுபவர்கள் வயதில் எவ்வளவு மூத்தவர்கள் என்றாலும், அவர்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு,
போட்டியில் வென்று, பார்ப்பவர்களை ஆச்சரியப் படுத்துகிறான். எதிராளிகளின் ஒவ்வொரு நகர்வையும் துல்லியமாகக் கணித்து விளையாடுவது ஆகாஷின் பலம். அவர்களின் பலகட்ட நகர்வுகளை, முன்கூட்டியே கணிப்பதுதான் இச்சிறுவனின் வெற்றிக்கு அடிப்படை. எதிர்காலத்தில் மிகச் சிறந்த சதுரங்க வீரராக வலம் வருவான் என்பதில் ஐயமில்லை.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இச்சிறுவனால், போதிய பொருளாதார வசதி இல்லாததால், மாநில, தேசியப் போட்டிகளில் கலந்துகொள்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும், விளையாட்டு ஆர்வலர்கள் பலரது உதவியால் போட்டிகளில் பங்கேற்கிறான்” என்றார்.
அண்ணனுடையான் படைக்கு அஞ்சான்... சிறுவன் ஆகாஷின் அண்ணன் ஜி.கிஷோர்குமார், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளான். எனினும், குடும்பச் சூழ்நிலை காரணமாக சதுரங்கப் போட்டியில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல், படிப்பை மட்டுமே தொடர்கிறான். எனினும், தம்பி ஆகாஷ், சதுரங்கம் விளையாட பெரிதும் உதவுகிறான். தம்பி சாதிப்பதற்கு காரணமாக இருந்த அண்ணனால், விளையாட்டை தொடர முடியாமல் போனது ஏமாற்றமே. தம்பிக்கு வழிவிட்டு, வீட்டில் அவன் சதுரங்கப் பயிற்சி பெற உறுதுணையாக இருக்கிறான் ஜி.கிஷோர்குமார் என்று பெருமிதம் கொள்கின்றனர் இவர்களது பெற்றோர். |