Published : 18 Jun 2019 12:18 PM
Last Updated : 18 Jun 2019 12:18 PM

கரிக்கையூர் பாறை ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை! - தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டம் கரிக்கையூரில் உள்ள பாறை ஓவியங்களைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், வனத் துறை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக நிர்வாகம் ஆகியவை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, தொல்லியல் ஆர்வலர்களிடையே வரவேற்பைப்  பெற்றுள்ளது.

‘இந்து தமிழ்’ நாளிதழின்  ‘கொங்கே முழங்கு’  பகுதியில் வெளியிடப்பட்ட செய்தியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி கரிக்கையூர், பொறிவறை, தெங்குமரஹாடா வனங்கப்பள்ளம், உதகை அருகே இடுஹட்டி, கொணவக்கரை மற்றும் வெள்ளரிக்கொம்பை, மசினகுடி அருகே சீகூர் ஆகிய பகுதிகளில்,  பல்வேறு காலகட்டங்களின் மனித வாழ்வியல் குறித்த வரலாற்று ஆதாரங்கள் பாறை ஓவியங்கள்  காணப்படுகின்றன.

கோத்தகிரியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரிக்கையூர். இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியான பொறிவறையில் உள்ளது, தென்னிந்தியாவில் மிகப் பெரிய பாறை ஓவியம். ஏறத்தாழ 53 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட பாறையில், 500-க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த பாறை ஓவியங்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, இடைக்கற்கால மனிதர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அழிவின் விளிம்பில்...

வரலாற்றுச் சான்றாக விளங்கும் இந்த பாறை ஓவியங்கள், மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அழிவின் விளிம்பில் உள்ளன. மேலும், சிலர் இந்த வரலாற்றுச் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் ஓவியங்களைச்  சீரழித்து, அவை வரையப்பட்டுள்ள பாறைகளில் கிறுக்கி வருகின்றனர்.

karikkai-3jpg

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் கண்ணன் கூறும்போது, “தென்னிந்தியாவின் மிகப் பெரிய மற்றும் இந்தியாவின் மிகப் பழமையான பாறை ஓவியம்,  கரிக்கையூர் ‘பொறிவரை’ பாறை ஓவியமாகும்.

கலை, வாழ்வியல், உணவு, வேட்டை, விலங்குகள், பறவைகள், சடங்குகள் முதலியவற்றை ஆதி மனிதர்கள் ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். மிருகத்தின் கொழுப்பு, குருதி, மரப்பிசின், சிறு நீர்,செம்மண், வெண்கற்கள் மூலம் இந்த ஓவியங்கள்,  கற்பாறைகளில் வரையப்பட்டுள்ளன. கோத்தகிரியில் மட்டும் நான்கு இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

இதில், கரிக்கையூரில் உள்ள பாறை ஓவியங்களில், மனிதர்களின் கிறுக்கல்களால் சுமார் 150 ஓவியங்கள் பாதிக்கப்பட்டு, அழியும் நிலையில் உள்ளன.  நன்கு படித்தவர்களே அங்கு சென்று, பாறை ஓவியங்களின் மதிப்பு  தெரியாமல், ஓவியங்களை சிதைத்து வருவது வேதனைக்குரியது.

ஓவியங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்காக, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றிலும் ஈடுபட்டோம்.

கரிக்கையூர் பாறை ஓவியங்களின் தொன்மை, அவற்றின் முக்கியத்துவம், தற்போதைய நிலை, பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘கொங்கே முழங்கு’ பகுதியில் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது.

அதன் பயனாக தற்போது இப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக, மாவட்ட நிர்வாகம், வனத் துறை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக நிர்வாகம் ஆகியவை அறிவித்துள்ளன. பாறை ஓவியங்கள் உள்ள பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது. இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். அப்பகுதியில்,  இதற்கான அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால், யார் வேண்டுமானாலும் இங்கு செல்ல முடியாது.

மேலும், இப்பகுதி தொல்லியல் துறையின்  கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டால்,  ஓவியங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும். விரைவில் தொல்லியல் துறை, இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என்று  எதிர்பார்க்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன் கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x