Published : 05 Jun 2019 12:07 PM
Last Updated : 05 Jun 2019 12:07 PM

எச்சரிக்கை பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது

இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்

பேரண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல். அதாவது, பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள், இவற்றையெல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி, கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன் குழுக்கள் ஆகியவை அனைத்தும் அடங்கியதுதான் பேரண்டம். இந்தப் பேரண்டத்தில் உள்ள ஒரு நுண்ணிய துகள்தான் இந்த உலகம்.

ஆனால், இந்த உலகைத் தவிர வேறெங்கும் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த உலகின் சூழல் அமைப்புதான் மனிதர்கள் உருவாக, வசிக்க முக்கியக் காரணி. இந்த சூழலை அழித்துவிட்டால், மனிதர்கள் எங்கே வசிப்பார்கள்? குறிப்பாகச் சொல்வதானால், பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை!

பல்லாயிரம் ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த பூமியின் சூழலை, கடந்த சில நூற்றாண்டுகளில் அழிக்கத் தொடங்கியுள்ளோம். சூழல் மாறுபாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.  நமக்கு கிடைத்த வரம்  இயற்கை. தூய காற்று, நீர், உணவு, உடை, உறைவிடத்துக்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்கள் என எல்லாவற்றையும் வழங்கும் இயற்கையை அழிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகிறோம்.

ஐம்பூதங்கள் என்று சுட்டிக்காட்டப்படும், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருகின்றன. ஆனால், 19-ம் நூற்றாண்டிலும், அதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, வளர்ச்சியின் விளைவுகள், ஐம்பூதங்களையும் தேடித்தேடி அழிக்கின்றன.

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாறுதல், வறட்சி, வெள்ளம், ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிரினங்களின் அழிவு என சோதனைகள் தொடர்கின்றன. வரும் சந்ததிக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்வோமா என்பதே கேள்விக்குறி

யாகிவிட்டது. இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) கடைப்பிடிக்கப்படுகிறது. சூழலைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியுடன், கோவையை மையமாகக் கொண்ட `ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருபவருமான காளிதாசனை சந்தித்தோம்.

ஸ்வீடனில் முதல் சுற்றுச்சூழல் மாநாடு!

"ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாடு தொடங்கப்பட்ட நாள் ஜூன் 5. இதில் இரு  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  ஜூன் 5-ம் தேதியை உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடுவது, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பான ஒரு திட்டத்தை வரையறுப்பது ஆகியவையே அந்த முடிவுகள்.

ஸ்வீடன் அதிபரைத் தவிர, அந்த மாநாட்டில் பங்கேற்ற ஒரே வெளிநாட்டுத் தலைவர், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திதான். அந்த மாநாடு நடைபெற்று 47 ஆண்டுகளாகிவிட்டது. அப்போதே, உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென அறிஞர்கள் வலியுறுத்தினர். காரணம், வளர்ச்சி என்ற பெயரிலான நமது செயல்பாடுகள் அனைத்துமே,  நம் சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சி என்பது, நீடித்த வளர்ச்சியாக இருக்க வேண்டுமென அதில் வலியுறுத்தினர்.

வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி ஆகிய  வரிகளுக்கிடையே உள்ள இடைவெளிதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. இந்த மாநாட்டுக்குப் பிறகு, உலக அளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு இயற்கையைப் பாதுகாக்க முக்கியத்துவம் தரத் தொடங்கின. பல நாடுகள் ஒருமுறை தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்தன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும்  இதன் தாக்கம் அதிகமானது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், இப்போது பல மடங்காகிவிட்டது. ஆரம்பத்தில், தண்ணீர், காற்று மாசு குறித்து அதிகம் பேசப்பட்டு, அதற்கான செயல்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

அச்சுறுத்தும் புவி வெப்பமயமாதல்!

தற்போது உலகம் அதிகம் பயப்படுவது புவி வெப்பமயமாதலைக் கண்டுதான்.  ‘தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் 100 ஆண்டுகளில், இந்த பூமி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்' என்றார்  ஸ்டீபன் ஹாக்கின்ஸ். மனித செயல்பாடுகள்தான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம். முதலில், பூமியின் வெப்பம் ஏன் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பூமியின் வளிமண்டலத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள் இருக்கின்றன. இந்த இயற்கையமைப்புதான், பூமியில் 3 கோடிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் தோன்றவும், வாழவும் காரணமாகின்றன. மனிதர்கள் தோன்றுவதற்கு முன் 5 முறை பூமி பேரிடர்களை  சந்தித்திருக்கிறது. எனினும், புறக் காரணிகள்தான் அதற்கு காரணம். ஆனால், தற்போது மனித செயல்பாடுகளால் எல்லா உயிர்களுக்கும் பேராபத்து நிகழும் சூழல் உருவாகியுள்ளது.

பசுமைக் குடில் வாயுக்கள்!

பொதுவாக, சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை பூமி பெருமளவு திருப்பி அனுப்பிவிடுகிறது. பசுமைக் குடில் வாயுக்கள் குறிப்பிட்ட அளவு வெப்பத்தை தேக்கிவைக்கின்றன. கடந்த 100, 150 ஆண்டுகளில் மனித செயல்பாடுகளால் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்களின் அளவும், அவை தேக்கிவைக்கும் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், பூமி கிரகிக்கும் வெப்பமும், தேங்கும் வெப்பத்தின் அளவும் அதிகமாகியுள்ளது.

இதன் காரணமாக, வட, தென் துருவங்களில் உள்ள பனி அதிக அளவில் உருகத் தொடங்கிவிட்டது. இதனால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்து, பல தாழ்நிலைப் பகுதிகள் நீரில் மூழ்கத் தொடங்கிவிட்டன. ஏற்கெனவே, பல சுந்தரவனக் காடுகள் நீரில்  மூழ்கிவிட்டன. மேலும், இமயமலையில் உள்ள பனியும் வேகமாக உருகி வருகிறது.

அங்கு உருவாகும் நதிகளே, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இமயமலை பனி தொடர்ந்து உருகுவதுடன், மீண்டும் பனி தோன்றாதநிலையில், கங்கை உள்ளிட்ட நதிகளில் நீரோட்டம் குறைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. இது மக்களை நேரடியாகப் பாதிக்கும். அதேசமயம், பூமி சூடாவதால், கடலும் வெப்பமயமாகி, கடலின் நீரோட்டம் மாறி, பல விளைவுகளை உண்டாக்குகிறது.

100 ஆண்டுகளில் உயர்ந்த வெப்ப நிலை!

நடப்பாண்டில் பல நகரங்களின் வெப்பம் 50 டிகிரி செல்சியஸைக் கடந்துவிட்டது. கோடையில் வெப்பம் அதிகரிப்பதுடன், வெப்ப நாட்களும் அதிகரிக்கின்றன. மேலும், கடந்த 15 ஆண்டுகளில் பூமியைத் தாக்கும் புயல்களின் எண்ணிக்கையும், வீரியமும் அதிகரித்துவிட்டன. மறைமுகப் பாதிப்பாக, கடும் வறட்சி, அதிக மழை என பருவநிலையே மாறிவருகிறது. கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக சீராக இருந்த பூமியின் வெப்பநிலை, கடந்த 100 ஆண்டுகளில் பெரிதும் உயர்ந்துவிட்டது. இது உயிரினங்களின் வாழ்வியலையே மாற்றுகிறது. பல தாவரங்களும், உயிரினங்களும்  அழிந்துவிட்டன. உயிர்ச் சங்கிலி உடைந்து வருகிறது.

இதுதவிர, கடலின் உயிர்ச்சூழலும் மாறி வருகிறது. புயலின் வேகத்தை தடுக்கும் பவளப் பாறைகள் உள்ளிட்டவை அழிவதால், கடலில் இருந்து நிலத்தை நோக்கிப் பாயும் புயல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

எனவேதான், புவி கோளத்தின் உயிர்ச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. 2015-ல் புவி வெப்பமயமாதலைத் தடுக்க, பாரீஸ் நகரில் உலகளாவிய ஒப்பந்தம் கையெழுத்தானது. 2030-ம் ஆண்டில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் இருக்காது என இந்தியா கொள்கை முடிவாக அறிவித்தது. அதேசமயம், அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் அமெரிக்கா, பொருளாதாரக் காரணங்களுக்காக இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளிவந்துவிட்டது துரதிருஷ்டவசமானது.

வனத்தை, வயலை அழித்து வளர்ச்சி?

பொருளாதாரத்தைக்  காட்டிலும், பூமியின் வாழ்வுச் சூழல் முக்கியமானது என்ற அக்கறை அனைவருக்கும் அவசியம். எனவே, புவிக்கோளத்துக்கு எதிரான எல்லா செயல்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். வளர்ச்சிக்கு சாலைகள் விரிவாக்கம் அவசியம்தான். அதேசமயம், வயலையும், காட்டையும் அழித்து, சாலை அமைப்பது தேவைதானா என்று சிந்திக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் சாலை, ரயில் வசதிகளை மேம்படுத்தலாம்.

அதேபோலத்தான், ஹைட்ரோகார்பன் திட்டம். 10 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் வயலை அழித்துவிட்டுத்தான், எரிபொருளை எடுக்க வேண்டுமா? யாரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அதேசமயம், வளர்ச்சியால் ஏற்படும் அழிவு, வரும் தலைமுறைக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். இந்த பூமிக்கு பிரச்சினை இல்லாத திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

நமது நுகர்வுக் கலாச்சாரமும், சூழல் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். தேவையில்லாதவற்றை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமில்லாதவற்றைப் புறக்கணிக்க வேண்டும். நமது தேவைக்காக இயற்கை மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பது, நிலத்துக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் நல்லது என்பதை உணர வேண்டும்.

இந்த விஷயத்தில் அரசு மட்டுமே செயல்படாமல், தனி மனிதர்களும் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்தியாவில்  60 சதவீதம் மின்சாரம்,  நிலக்கரி மூலம் கிடைக்கிறது. ஆனால், நிலக்கரியால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கிறது. எனவே, அனல், அணு மின் நிலையம் என பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்குப் பதில், மாசு இல்லாத மின்சாரத்தை வழங்கும் சூரியஒளி, காற்றாலை போன்ற மாற்று மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.

வீடுகளிலும் தேவையின்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக ஆற்றலைப் பெற வேண்டும். பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இது வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவைக் குறைக்க உதவும்.

மரக்கன்று நடுதல் வெறும் சடங்கா?

தொழில் புரட்சிக்கு முன் காற்றில் இருந்த கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 240 பிபிஎம். தற்போது இது 400 பிபிஎம்-ஆக அதிகரித்துள்ளது. எனவே, கட்டாயம் இதைக் குறைக்க வேண்டும். இதற்கு மரங்கள் வளர்ப்பு  பெரிதும் உதவும். வெறும் சடங்குக்காக மரக்கன்றுகளை நடாமல்,  மரம் வளர்ப்பை ஓர் இயக்கமாக மாற்ற வேண்டும். லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவைப்பதைக் காட்டிலும், குறிப்பிட்ட அளவு மரங்களை தொடர்ந்து வளர்ப்பதே பலனைக் கொடுக்கும். அதாவது, எண்ணிக்கை அடிப்படையில் மரக்கன்றுகளை நடாமல், எத்தனை மரக்கன்றுகள் வளர்ந்து, மரமாகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல, மண்ணுக்கேற்ற மரங்களை நட வேண்டும். டெல்லியில் புகை சூழ்ந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை மறந்துவிடக் கூடாது. புகை மிகுந்த நகரமாக மாறியுள்ளது நம் தலைநகரம், இந்த நிலை, நமது நகருக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

சுற்றுச்சூழல் தினம் என்பது கொண்டாடுவதற்கு மட்டும் அல்ல. இந்த பூமியைக் காப்பாற்றுவதற்கான செயல்களைத் தொடரும்  உறுதிமொழி ஏற்கும் நாள்தான் உலக சுற்றுச்சூழல் தினம்" என்றார் உறுதியுடன் காளிதாசன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர் கூட்டம்...

"தற்போது பூமி பேராபத்தில் இருந்தாலும், அதைப் பாதுகாக்க இளைய தலைமுறை உண்டு என்ற நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தாமாக முன்வந்து, பூமியையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முயல்கிறார்கள்" என்று கூறிய காளிதாசனிடம்,  "சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஓசை என்ன செய்கிறது?" என்று கேட்டோம்.

"சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தனி இயக்கம் மட்டும் முன்னெடுக்க முடியாது. நூற்றுக்கணக்கான அமைப்புகளும், லட்சக்கணக்கான மக்களும் முன்வர வேண்டும். எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை, இதுகுறித்த சிந்தனையை மக்களிடம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல, அரசையும் செயல்பட வைக்க முயற்சிக்கிறோம். மேலும், சூழல் பாதுகாப்புக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன், இதைச் செய்யும் அமைப்புகளுடன் கைகோர்த்து நிற்கிறோம். இது, சூழல் ஆர்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.நீலகிரி அதிக மரங்கள் உள்ள மாவட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். முன்பெல்லாம் சமவெளிப் பயன்பாட்டுக்காக,

நீலகிரி மலையிலிருந்து மரங்கள் கீழே கொண்டு வரப்படும். கடந்த 10 ஆண்டுகளில்,  நீலகிரி மாவட்டப் பயன்பாட்டுக்காக, சமவெளிப் பகுதிகளில் இருந்து லாரிகளில் சீமைக்கருவேல மரங்களை கொண்டுசெல்வதைப் பார்க்க முடிகிறது. அதாவது, மலைப் பகுதியில்  மரங்கள் வெட்டுவது குறைந்துவிட்டது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

இந்த மாற்றம்தான் நம்பிக்கையைத் தருகிறது. இதுபோல, ஊர் கூடித் தேர் இழுத்தால்தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்.

அதற்கு உத்வேகம் தரும் நாளாக ஜூன் 5-ம் தேதியைக் கருதுகிறோம். தற்போதுள்ள பல்வேறு விஷயங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா என்பது மக்களுக்குத் தேவையான ஒன்றுதான். அதேசமயம், இயற்கையை  அழித்து, சுற்றுலா செல்ல வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

இயற்கையுடன் இணைந்து சுற்றுலா மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு விஷயத்தில், அரசு, அரசியல், நாடு என அத்தனை பேதங்களையும் கடந்து, மனித குலத்தின் மீதான அக்கறையுடன் சிந்திக்க வேண்டும். நம் தலைமுறைக்கும் இந்த புதிய சிந்தனையைக் கொடுத்து, அக்கறையுடன் செயல்படச் செய்ய வேண்டும்.

எல்லோருக்கும்  இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை இருக்கிறது. அதேசமயம், இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முடிந்தவரை, ரசாயனம் இல்லாத வாழ்க்கைக்கு மாற வேண்டும். இருக்கும் இடத்தில் மரம் வளர்க்க வேண்டும். அதேபோல, மரம்  வளர்ப்பவர்களுக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுவே, சுற்றுச்சூழல் தினத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது" என்றார் காளிதாசன்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x