Last Updated : 15 Jun, 2019 03:03 PM

 

Published : 15 Jun 2019 03:03 PM
Last Updated : 15 Jun 2019 03:03 PM

தமிழையும்  இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதே திமுகவின் லட்சியம்! - திருச்சி சிவா எம்பி பேட்டி

இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் புரட்சியால் ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. தொடர்ந்து இந்தியை எதிர்த்து வந்தாலும் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் அந்தக் கட்சியிடம் பழைய வேகம் இல்லை என்று சொல்லப்படும் நிலையில், இப்போது இந்தித் திணிப்புக்கு எதிராக என்ன செய்யப் போகிறது திமுக? மாணவர் பருவத்திலேயே மிசாவுக்கு எதிராகப் போராடி சிறை சென்றவரான திருச்சி சிவா எம்பியிடம் பேசலாம்.

புதிய கல்விக்கொள்கை வரைவுதானே வெளியாகி இருக்கிறது... இதைவைத்து இந்தித் திணிப்பு என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

அதில் மும்மொழித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கூடவே, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மாநில மொழியைப் படிக்கலாம் என்று சொன்னவர்கள், இந்தி பேசாத மாநிலங்களுக்கு அப்படியொரு வாய்ப்பைக் கொடுக்கவில்லை. அந்தந்த மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக இந்தியைத்தான் படிக்க வேண்டும் என்றார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். அவர்கள் சொல்லியிருப்பது சமாதான வார்த்தை தானே ஒழிய, வரைவை இப்போதே திருத்திவிட்டதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல.

1965-ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் அணி திரண்டது. ஆனால் இப்போது, எங்கள் அப்பாவைத் தான் இந்தி படிக்கவிடாமல் தடுத்துவிட்டீர்கள், எங்களையாவது படிக்க விடுங்கள் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே?

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாட்சி தத்துவம் நடைமுறையில் உள்ள ஒரு நாடு. பல்வேறு மொழி, கலாச்சாரம், மதம், இனங்களைக்கொண்ட ஒரு துணைக்கண்டம். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், நாட்டின் இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர்களைவிட மொழியால் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது. மொழி வழியாக வடக்கத்தவர்களின் ஆதிக்கம் ஊடுருவுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியை திராவிட இயக்கத்தினர் படிக்கவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுவது அபாண்டமான குற்றச்சாட்டு. தென்னிந்தியா முழுமைக்கும் இந்தியை கற்றுத்தருகிற தட்சண இந்தி பிரச்சார சபா சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுதான் செயல்படுகிறது. இப்போதும் கூட ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அங்கே இந்தி படிக்கிறார்கள். இந்தித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, இந்தி படிப்பதையல்ல.

திமுக எம்பி, எம்எல்ஏக்களின் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் இந்தி படிக்கிறார்கள். ஆனால், நம்மை மட்டும் தடுக்கிறார்கள் என்று எச்.ராஜா போன்றோர் குற்றம் சாட்டுகிறார்களே?

எச்.ராஜா அப்படித்தான் பேசுவார். திமுகவைச் சேர்ந்த சிலரது பிள்ளைகள் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கலாம். முதலில் தமிழ்நாட்டில் ஏன் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டுபோனவர்கள் யார்? இப்போதும் அதை மாநிலப்பட்டியலுக்குத் தராமல் தடுப்பவர்கள் யார் என்பதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும். தமிழகத்தில் ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற முறையைத் தடுக்க சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்த்தவர்கள் இப்போது ஏழைப்பிள்ளைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருவோம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அதை நடைமுறைப்படுத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனாலும், நாங்கள் விடப்போவதில்லை.

இந்தி அந்நிய மொழி, நம்மை ஆதிக்கம் செலுத்துவோரின் மொழி என்றால், ஆங்கிலம் மட்டும் என்னவாம் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

எது என்னுடையது இல்லையோ அது எல்லாமே அந்நியம் தான். அந்த வகையில் ஆங்கிலமும், இந்தியும் ஒரே நேர்க்கோட்டில் வந்துவிடுகின்றன. இன்னொரு விஷயம், இந்தி நமக்கு மட்டுமே அந்நியம், ஆங்கிலம் எல்லோருக்கும் அந்நியம். ஆனால், இந்தி ஒரு பிரிவினருக்குத் தாய்மொழி. அது எப்படி பொதுவாக முடியும்? நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய வீட்டில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதைத் திறந்துவிட்டு எனது பிள்ளைகளும் தெரு பிள்ளைகளும் அதில் விளையாட அனுமதிக்கிறேன். அவர்கள் ஒன்றாக விளையாடினாலும், என் வீட்டுப்பிள்ளைகளுக்கு இருக்கிற உரிமை தெரு பிள்ளைகளுக்கு இருக்குமா? ஆனால், அதே தெருவில் ஒரு மாநகராட்சிப் பூங்கா இருந்தால், அதில் என் பிள்ளைகளும், தெருவில் இருக்கிற எல்லாப்பிள்ளைகளும் யாருடைய ஆதிக்கமும் இல்லாமல், சம உரிமையோடு விளையாடலாம் அல்லவா? இங்கே மாநகராட்சிப் பூங்கா என்பது ஆங்கிலம். என் வீட்டுத்தோட்டம் என்பது இந்தி.

இந்தியை திணிக்க மாட்டோம் என்று பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியையே திமுகவினர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேருவையே மதிக்காதவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் நேரு கொடுத்த வாக்குதியை மட்டும் எப்படி மதிப்பார்கள் என்று தமிழ் தேசியர்கள் கேட்கிறார்களே?

இந்தியா குடியரசு நாடானதும், இன்னும் 15 ஆண்டுகளில் ஆங்கிலம் மெல்ல அகன்று இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என்று அரசியல் சட்டம் எழுதப்பட்டது. அதன்படி 1965-ல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாகும் சூழல் ஏற்பட்டன. அப்போதுதான் தமிழகத்தில் மாணவர் புரட்சி ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடு உயிர்ப்பலி எல்லாம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வகையில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடரும் என்ற வாக்குறுதியை நேரு அளித்தார். அந்த வாக்குறுதியை ஏன் மசோதாவில் சேர்க்கவில்லை என்று 25.8.1963-ல் அண்ணா மாநிலங்களவையில் கேள்வியெழுப்பினார். அதன்படி 1963-ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்தும் திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. அதனால், இந்தி ஆட்சி மொழி எனும் சட்டம் தமிழகத்துக்கு மட்டும் பொருந்தாது என்ற விதி சட்டத்தில் (1976) சேர்க்கப்பட்டுவிட்டது. அரசியமைப்புச் சட்டத்தின் 343-வது பிரிவில் இருந்து 351 வரையிலான பிரிவுகளில் இதைப் பார்க்கலாம். இன்று வரையில் பாராளுமன்றத்தில் எந்த சட்டம் நிறைவேறினாலும், அது பிற மாநிலங்களுக்கு இந்தியில் மொழி பெயர்த்து அனுப்பிவைக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஆங்கிலம் மூலம்தான் அனுப்பப்படுகிறது. இதெல்லாம் திமுகவுக்குக் கிடைத்த வெற்றிதான்.

1986-ல் அஞ்சல் அலுவலகங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை கண்டித்து, திமுகவினர் அரசியல் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதும், அதன் காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பதவியை அதிமுக அரசு பறித்ததும் வரலாறு. 1993-ல் தொலைக்காட்சி வழியாக இந்தித் திணிக்கப்பட்டதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இன்றுவரையில் தமிழகத்தில் இந்தி மொழி ஆட்சி மொழியாகாமல் இருப்பதற்கு திமுகதான் காரணம் என்பதை அடித்துச் சொல்வேன்.

தமிழ்வழிக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் இணைக்கத் தவறியதால்தானே இத்தகைய விமர்சனத்துக்கு திமுக உள்ளாகிறது?

உலகமே சிறு கிராமமாக இன்று சுருங்கிவிட்டது. ஆங்கிலம் படித்ததால், தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகம் முழுவதும் பரவி உயர் பொறுப்புகளில் நல்ல சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தி மாநிலத்தவர்களோ இந்தியைத் தவிர எதையுமே படிக்காமல் இருக்கிறார்கள். தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை என்ற தீர்மானத்தை கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போய் சிலர் தடுத்து நிறுத்திவிட்டார்கள். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் சட்டமன்ற தீர்மானத்தையும் பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மத்திய அரசு பணியாளர்களைத் தேர்வு செய்கிற எஸ்எஸ்சி தேர்வுகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தப்படுவதால்தான் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோர் அதிகமாகத் தேர்வாகிறார்கள். எனவே, சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போலவே எஸ்எஸ்சி தேர்வுகளையும் அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று நான் மாநிலங்களவையில் வலியுறுத்தினேன். ஆனால், அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்காக நாங்கள் ஓய்ந்து போய்விடவில்லை. தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து என்ன செய்யப் போகிறது திமுக?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததன் மூலம், தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அளவில் நிறைய கடமை திமுகவுக்கு இருப்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கம், மராட்டியம், கேரளம், கர்நாடகாம், ஆந்திரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் பணியை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்வார். இந்தி ஆதிக்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டிருப்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக, முரசொலிமாறன் கடந்த 1983-ல் ஒரு சட்ட மசோதாவைக் கொண்டுவந்தார். அதாவது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றார் அவர். இந்தியும் ஆட்சி மொழியாக இருக்கட்டும். கூடவே, எங்களது மொழிகளையும் தேசிய மொழியாக்கிவிடுங்கள் என்று அதே மசோதாவை 2012-ல் நானும் முன்மொழிந்தேன். ஆனால், சட்டமாக நிறைவேறவில்லை. கூட்டாட்சி தத்துவமுள்ள இந்தியாவில் தமிழகமும் ஒரு அங்கம் என்பதை நிலைநிறுத்த இந்தியா விரும்புமானால், தமிழையும் இந்தியாவின் ஆட்சி மொழியில் ஒன்றாக்க வேண்டும். அதை நிலை நிறுத்துகிற இலக்கை நோக்கித்தான் எங்களது பயணம் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x