Published : 06 Jun 2019 01:46 PM
Last Updated : 06 Jun 2019 01:46 PM

மாயவலையிலிருந்து தப்புமா மான்கள் ?

வண்ணக் கனவுகளோடும், இளமையின் குறும்புகளோடும் துள்ளித்திரிவது ‘டீன் ஏஜ்’ பருவம். உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் அளிக்கும் சந்தேகங்களுடனும், தன் மீது உருவாகும் திடீர் கட்டுப்பாடுகளும், குழந்தையாகவே பார்த்துவந்த சமூகத்தின் பார்வைக்கோணத்தில் உருவாகும் மாற்றமும் பெண் குழந்தைகளுக்கு குழப்பத்தை உண்டாக்கி விடும் காலம்.

இந்தக் குழப்பங்களை சாதகமாக்கிக் கொண்டு, அவர்களை தங்கள் இச்சைக்கு இரையாக்கிவிட, வெறிகொண்ட பல கழுகுகள் வீட்டிலும்,  நாட்டிலும் சுற்றி வருகின்றன. ஸ்மார்ட் போன்களும், சோஷியல் மீடியாக்களும், ஆபாச இணையதளங்களும், நுகர்வுக் கலாச்சாரமும், சமூகப் பொறுப்பற்ற திரைப்படங்களும் இந்தக் கழுகுகளுக்கு சாதகமான வலையைப் பின்னிக்கொடுக்கின்றன.

தனித் தனி தீவுகளாகிப்போன நியூக்ளியர் குடும்ப அமைப்பில், குழந்தையின் வளமான வாழ்க்கை ஒன்றையே குறிவைத்து, தாயும்,  தந்தையும் தங்களை உழைப்பில் கரைத்துக்கொள்கிறார்கள். தங்கள் சொந்த விருப்புகளை கருப்பு வெள்ளையாக்கிவிட்டு,  குழந்தைகளின் கனவுகளுக்கு வர்ணம் தீட்ட முயல்கிறார்கள். பிள்ளைகளே குடும்பத்தின் மொத்தக் கனவாகவும், பெருமிதமாகவும்  இருக்கின்றார்கள். அவர்களது எதிர்காலத்தைச் சுற்றியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

இத்தனை அன்போடும், அக்கறையோடும் பேணிப் பாதுகாத்து வளர்க்கப்படும் பெண் குழந்தைகள், ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, அந்தப் பெண்ணின் மனமும், உடலும், எதிர்காலமும் சிதைக்கப்படுகிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல்,  தனக்குள்ளேயே புழுங்கி, ஒரு சிக்கலில் இருந்து,  பல சிக்கல்களுக்குள் மாட்டித் தவிக்கிறார்கள் பல பெண்கள்.

பிரச்சினை வெளிப்படும் நாளில், மொத்த குடும்பமும் நொறுங்கிப்போய்விடுகிறது. துயரத்தாலும், அவமானத்தாலும் உறவுகள் கூனிக்குறுகிப் போய்விடுகின்றனர். அந்தப் பெண்ணின் சக தோழிகளுக்கும் கடுமையான அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. பெண் பிள்ளைகளைக் குறிவைத்துக் குதறும் செய்திகள், நாளுக்கு நாள் ஊடகங்களில் விதம்விதமாக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

maayavalai-2jpgright

பெண் பிள்ளைகளும், அவர்களைப் பெற்றவர்களும் பதைபதைத்துக் கொண்டிருக்கும் மிக நெருக்கடியான காலகட்டத்தில் நாம்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அண்மையில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற,  நெஞ்சைப் பதறவைக்கும் பாலியம் சம்பவம், மீண்டும் நடைபெறக் கூடாதென்றால், இத்தகைய அவலத்தை ஒழிக்க அனைவரும் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இளம்பெண்களிடமும், பெற்றோரிடமும் தைரியமும், தன்னம்பிக்கையும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிச்சலும் தேவை.

எது நேரிடினும் கலங்காமல், கயவர்களைக் காவல் துறையிடம் ஒப்படைக்கும் மனோதைரியம் அவசியம்.  சவால்களை சந்திக்கும் பெண்களே, முன்னுதாரணமாய்த் திகழ்வார்கள். அதேசமயம், கயவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகளும் கடுமையாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், இதற்கான சிறிய முன்முயற்சியை முன்னெடுக்கிறது. பருவ வயதினர் மீது படையெடுக்கும் கழுகுகளின்  கோரப்பிடியில்  சிக்காமல் இருப்பது எப்படி... சிக்கிக்கொண்டால், சிக்கலில்லாமல் விடுபடுவது எப்படி என்பதை விளக்க ‘வலை’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவன் பள்ளி வளாகத்தில் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில், வழக்கறிஞர் சுமதி, உளவியல் நிபுணர் மற்றும் சமூக ஆர்வலர் கிருத்திகா, காவல்துறை துணை ஆணையாளர்  பாலாஜி சரவணன் மற்றும்  துறைசார் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

டீன் ஏஜ் வயதில் உள்ள பெண் பிள்ளைகளும்,  அவர்களது பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.  மேலும், தங்களது பெயர், விவரங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல், வழிகாட்டுதல்களைப் பெற விரும்புவோருக்கு அரங்கில் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.

“யாரை நம்பலாம்? எவ்வளவு நம்பலாம்? புதிய உறவுகளை உருவாக்கிக்கொள்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? நமக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் எல்லைகள் எவை? இணைய உலகில் பாதுகாப்பாக இயங்குவது எப்படி? மிரட்டும் நபர்களை கையாளுவது எப்படி? தற்காத்துக் கொள்வது எப்படி? தக்க பதிலடி கொடுப்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோரை அழைக்கிறோம். வாருங்கள்  உரையாடலாம்” என்கின்றனர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x