மூலக்கொத்தளத்தில் குடியிருப்புகள் கட்டும் விஷயத்தில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக வைகோ வேலை செய்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மூலக்கொத்தளத்தில் குடியிருப்புகள் கட்டும் விஷயத்தில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக வைகோ வேலை செய்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை

மூலக்கொத்தளத்தில் குடியிருப்புகள் கட்டித் தரும் விஷயத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செயல்படுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு தையல் இயந்திரம், சேலை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் எதிரில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 29-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மூலக்கொத்தளம் சுடுகாடு ராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள ராம்தாஸ் நகர் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் அந்த இடத்திலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனவேதான், அங்கு குடியிருப்புகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 36 ஏக்கர் உள்ள சுடுகாட்டில், 11 ஏக்கர் சுடுகாடு கிடையாது.

ஒரு பிணம் கூட அந்த 11 ஏக்கரில் புதைக்கப்படவில்லை. அங்கு எந்த நினைவு சின்னமும் இல்லை. நினைவுச் சின்னத்தை அழித்துவிடுவார்கள் என்று அரசியல் ஆதாயத்துக்காக கூறுகின்றனர். அதில் உண்மை இல்லை. தலைவர்களின் நினைவுச் சின்னங்கள் குடியிருப்புகள் கட்டப்படவுள்ள இடத்தில் இருந்து 300 மீ தொலைவில் உள்ளது.

1,000 ஆதிதிராவிட குடும்பங்கள் மழையால் பாதிக்கப்படுகின்றனர். அந்த மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தருவது தவறா. இதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புரிந்துகொள்ள வேண்டும். வீடுகள் கட்டித் தரும் திட்டத்துக்கு கெடுதல் நினைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வைகோ ஏன் ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வேலை செய்கிறார் என தெரியவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்துக்காக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத டிடிவி தினகரன், வெறும் விளம்பர்துக்காக தஞ்சாவூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாகத்துக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அந்த மக்களின் நியாயத்தை உணர்ந்து அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in