Published : 01 Apr 2019 06:52 PM
Last Updated : 01 Apr 2019 06:52 PM

"ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு!": அறைகூவல் விடுக்கும் இயக்குநர்கள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் மும்முரமாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் குறித்து இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு குறித்து, கடந்த 29-ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 125 இயக்குநர்கள் 'நாட்டு மக்களுக்கு கோரிக்கை' என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், தமிழகத்தின் முக்கிய இயக்குநர்களான வெற்றிமாறன், பா.ரஞ்சித், கோபி நயினார், லெனின் பாரதி, லீனா மணிமேகலை உள்ளிட்ட இயக்குநர்களும், திவ்யபாரதி, ஆர்.பி.அமுதன், மாலினி ஜீவரத்தினம் உள்ளிட்ட ஆவணப்பட இயக்குநர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

அப்படி அந்த அறிக்கையில் என்ன கூறியுள்ளனர்?

நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை

"நம் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் சோதனைக்குரிய காலகட்டத்தில் உள்ளது. கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் வேறுபட்டவர்களாக இருந்தாலும், ஓர் தேசமாக நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம். இந்த அற்புதமான நாட்டின் குடிமக்களாக இருப்பதென்பது சிறந்ததொரு உணர்வு. ஆனால், அவையெல்லாம் இப்போது பெரும் ஆபத்தில் இருக்கின்றன.

வரும் மக்களவைத் தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாக முடிவெடுக்காவிட்டால், கொடுங்கோன்மை அதன் அனைத்து வலிமையையும் கொண்டு நம்மை கடுமையாகத் தாக்கும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டு நிலைமை மோசமாக மாறிவிட்டதை நாம் அனைவரும் அறிவோம். மதரீதியாகப் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நாடு, நாம் அறிந்த இந்தியா அல்ல. தவிர, பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தில் கடுமையாக தோற்றுள்ளன.

இப்போது அவர்கள் இந்த நாட்டை பிளவுபடுத்த குழு வன்முறையையும், 'பசு பாதுகாப்பை'யும் கையில் எடுத்துள்ளனர். தலித்துகளும் முஸ்லிம்களும் அவர்களின் விளையாட்டுப் பொருட்களாக்கப்பட்டு விட்டனர். அவர்கள், தங்களின் வெறுப்பு பிரச்சாரங்களை இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர். தேசபக்தி அவர்களின் துருப்புச் சீட்டு. தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ சிறிய அளவில் எதிர் கருத்துகளை எழுப்பினால், அவர்கள் 'தேச விரோதி' என முத்திரை குத்தப்படுகின்றனர். 'தேசபக்தி' என்ற ஒன்றைச் சொல்லி அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கின்றனர். மாற்று கருத்துகளை முன்வைக்க துணிந்ததன் விளைவாக சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரை இழந்ததை நாம் மறந்து விட வேண்டாம்.

ராணுவப் படைகளை சிலாகிக்கச் செய்து அதனைச் சுரண்டுதல் அவர்களின் யுக்திகளில் ஒன்று. ஒரு தேவையற்ற போரில் தேசத்தை ஈடுபடுத்தும் அபாயத்திலும் துணிகின்றனர். நாட்டில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சர்வதேச அறிவியல் கருத்தரங்குகளில் கூட விஞ்ஞானப்பூர்வமற்ற, அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கைகளை முன்வைக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாத, அனுபவமற்ற நபர்களை துறைத் தலைவர்களாக நியமித்து, ஒட்டுமொத்த உலகின் கேலிப்பொருளாக்கி நம் மக்களின் கூட்டு நுண்ணறிவைப் பகடி செய்கின்றனர்.

அதிக வல்லமை வாய்ந்த புத்தகங்களையும், திரைப்படங்களையும் தடை செய்வது, மக்களை உண்மையிலிருந்து தொலைவில் வைக்க அவர்கள் கையாளும் வழியாகும்.

விவசாயிகள் முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டனர். உண்மையில், பாஜக, இந்தியாவை தொழிலதிபர்களுக்கு வசதியாக வழங்கியுள்ளது. மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் கடுமையான பேரழிவுகள் ஏற்பட்டன. அவை முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டு, வெற்றியடைந்தவை போன்று கட்டமைக்கப்பட்டன. இவையனைத்தும் பொய் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் துணையுடன் நிறைவேறின. இவை அவர்கள் பொய்யான நம்பிக்கையை உருவாக்க உதவிகரமாக அமைந்தது.

புள்ளியியல் மற்றும் வரலாற்றைத் திரித்துக் கூறுதல் அவர்களுக்கு விருப்பமான திட்டங்களுள் ஒன்று. இன்னொரு முறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால் அது மிகப்பெரும் பிழையாகிவிடும். அவ்வாறு வாய்ப்பு வழங்குவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும்.

எனவே, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து இந்த அபாயகரமான ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு வரமால் செய்யுமாறு உங்கள் 
அனைவரையும் வலியுறுத்துகின்றோம். இந்திய அரசமைப்பை மதிக்கும், பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கும், அனைத்து 
விதமான தணிக்கைகளையும் தவிர்க்கும் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது உங்களின் தேர்வு கட்டளையாக இருக்கட்டும்.

ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு!"

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், கையெழுத்திட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சில இயக்குநர்களிடம் பேசினோம். ஏன் அவர்கள் இத்தகைய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது குறித்துக் கேட்டோம்.

நாட்டைக் காப்பாற்றவே!- ஆர்.பி.அமுதன், ஆவணப்பட இயக்குநர்:

"பாஜக சனாதனத்தை முன்வைத்து, சமாதானம் கூடாது என்ற கருத்தியலை ஏற்றிருக்கும் கட்சி. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைள் வழி நடப்பது பாஜக. இதுவரை ஜனநாயகத்தைக் குலைக்கும் வேலைகளில் தான் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. அவர்களின் திட்டங்கள் இந்தியாவுக்கு நன்மை பயப்பதாக இல்லை. அதனால் தான் இந்த அரசு ஆபத்து கொண்டதாக உள்ளது. இது கட்சி அரசியல் அல்ல. நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றவே இந்த முடிவை எடுத்துள்ளோம். பெருமுதலாளிகளைத் தவிர மற்ற எல்லோருக்கும் இந்த ஆட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும்"

கல்புர்கி, கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதே காரணம்!

- அஜயன் பாலா, இயக்குநர்:

"படைப்பு சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளதும் படைப்பாளிகள் கொல்லப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான். பாஜகவுக்கு ஆதரவான திரைப்படங்கள் தேர்தல் நேரங்களில் வெளியாகின்றன. கவுரி லங்கேஷ், கல்புர்கி போன்ற படைப்பாளிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இப்பட்டியலில் கையெழுத்திட்டுள்ளேன். இதை எதிர்த்துக் குரல் கொடுப்பது படைப்பாளியாக எனது கடமையாக நினைக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டு தான் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. எந்தவொரு கட்சிக்கும் ஆதரவானது அல்ல".

ஒற்றைக் கலாச்சாரத்தை ஏற்க இயலாது! - அம்ஷன் குமார், இயக்குநர்:

"இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. பன்முகத்தன்மை இல்லாமல் ஒற்றை நோக்கோடு கலைஞர்களால் செயலாற்ற முடியாது. என்னை எதிர்ப்பவர்களுக்கும் நான் இடம் கொடுக்க வேண்டும். அது தான் படைப்பாளியின் தர்மம். அதைவிடுத்து, தனியொருவரின் எல்லா விஷயங்களிலும் அரசு தலையிடுவதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? திரைப்படங்கள் தணிக்கை, தனிமனிதர்களின் நடவடிக்கைகளில் குறுக்கீடு, தேசியம் என்ற கருத்தை அவர்களுக்கேற்றாற் போல் திரித்துக் கொள்ளுதல் என இவையெல்லாம் ஆபத்தானதாக உள்ளன. இந்தத் தேர்தல் நமக்குள்ள ஒரு வாய்ப்பு".

சிறுபான்மை மக்களுக்கு எதிரானது! - அருண், தமிழ் ஸ்டுடியோ

"சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இந்த அரசு. குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், அவர்களின் உணவு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதாரம் இந்த ஆட்சியில் நன்றாக இருக்கிறது என வலதுசாரி பொருளாதார அறிஞர்கள் சொன்னாலும், பொருளாதாரமே இந்த ஆட்சியில் சீர்குலைந்திருக்கிறது கண்கூடாகத் தெரிகிறது".

ஜனநாயகம் ஆட்டம் கண்டுள்ளது! -லீனா மணிமேகலை, இயக்குநர்:

"நெருக்கடி காலகட்டத்திற்குப் பிறகு இந்திய ஜனநாயகம் ஆட்டம் கண்டிருப்பது தான் முக்கியக் காரணம். இது உண்மையிலேயே கடைசி வாய்ப்பு தான். நம் கவனக்குறைவால் இன்னொரு ஐந்து வருடத்தை அவர்கள் கையில் தருவதென்பது நம் தலையில் நாமே கொள்ளி வைப்பதற்குச் சமம். நம் கையிலிருக்கும் ஓட்டுரிமையைக் கொண்டு வெறுப்பாளர்களை கவனமாக களைய வேண்டும் என்பதற்கான முறையீட்டை நாட்டு மக்கள் ஒவ்வொருவர் முன்னிலும் வைக்கிறோம்".

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x