Last Updated : 09 Apr, 2019 04:50 PM

 

Published : 09 Apr 2019 04:50 PM
Last Updated : 09 Apr 2019 04:50 PM

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்; மக்கள்தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்: வேல்முருகன் பேட்டி

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார். இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வட மாவட்டங்களில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் வேல்முருகன். தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கள நிலவரம் குறித்து அவரிடம் தி இந்து தமிழ் திசை சார்பில் விசாரித்தோம்.

அவருடனான பேட்டியில் இருந்து..

தமிழகத்தில் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? மோடி அலை என்ன நிலையில் இருக்கிறது?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எனது ஆதரவை தெரிவித்து 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறேன். பிரச்சாரம் செல்லும் ஒவ்வொரு பாயின்ட்டிலும் மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது. எனது ஒவ்வொரு கூட்டத்துக்கும் குறைந்தது 5000 முதல் 10000 மக்கள் வரை திரள்கின்றனர். காசு கொடுத்து சேர்த்த கூட்டம் அல்ல அது. எடப்பாடி ஆட்சி மீது மோடி ஆட்சி மீது உள்ள வெறுப்பால் சேரும் கூட்டம். கூட்டம் அத்தனையும் வாக்குகளாக மாறுமா என்றால் இந்தக் கூட்டம் நிச்சயம் வாக்குகளாக மாறும். அப்புறம் மோடி அலை என்ற ஒன்று இல்லவே இல்லை. மோடி எதிர்ப்பு அலை மட்டுமே இருக்கிறது.

நான் ஒரு சிறிய கட்சியின் தலைவர். ஆனால், நான் செல்லும் இடங்களில் இளைஞர்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் என்னால் ட்ரெண்டாக்கப்பட்ட GoBackModi பிரச்சாரம். முதல் தலைமுறை வாக்காளர்கள், தலித்துகள், சிறுபான்மையின மக்கள், ஓட்டுக்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கே.

வடமாவட்டங்களில் வன்னியர்கள் வாக்கு வங்கி பாமகவுக்கு இருக்கிறதே?

பாமகவுக்கு இருக்கிறது அல்ல.. இருந்தது என்று சொல்லுங்கள். எப்போது அவர்கள் பாஜக, அதிமுகவுடன் இனைந்தார்களோ அப்போதே வன்னியர் சங்கத் தலைவர்கள் முதல் சாதி சங்கம் வரை எல்லோரும் ராமதாஸின் 'மகன் நலன்' கொள்கையைப் புரிந்து கொண்டனர்.

என்னால் இந்த ஓட்டுக்களை திமுகவுக்கு மடை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை பிரச்சாரத்திற்கு வரும் மக்கள் அளித்துள்ளனர்.

நீங்கள் பாமகவில் இருந்து பிரிந்துவந்தவர்.. இப்போது பாமக இணைந்திருக்கும் கூட்டணி குறித்து..

இது எந்த மாதிரி கூட்டணி என்பது எல்லோருக்குமே தெரியுமே. பாமகவும், தேமுதிகவும் நடத்திய பேரம் ஊர் அறிந்த விஷயம். சந்தர்ப்பவாத கூட்டணி மட்டுமல்ல சுயநலக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் எந்த கொள்கையும் கருத்தியலும் இல்லை. தத்தம் சுயநலனைக் கருத்தில் கொண்டு ஒன்றாக திரண்ட கூட்டம்.

காடுவெட்டி குரு குடும்பத்தினரிடம்தான் இவர்களைப் பற்றி கேட்க வேண்டும்.

ஆனால் ராமதாஸ் இதனை மக்கள் நலக் கூட்டணி என்றாரே..

மகன் நலன் கூட்டணி என்பதை மாற்றிச் சொல்லியிருப்பார். 7 தொகுதியிலும் தோற்போம் என்று தெரியும். மகனுக்கு மட்டும் ஒரு எம்.பி. சீட் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் அவருக்கு.

மோடி ஏன் வேண்டாம்.. மூன்று காரணங்கள் சொல்லுங்கள்?

1.ஜனநாயக நாட்டில் ஒரு சர்வாதிகாரி. தேர்தல் ஆணையம், சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை எல்லாம் அவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஏன் இந்திய வரலாற்றிலேயே இந்த மோடி ஆட்சியில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்த நிகழ்வு நடந்தது. இங்குதான் பலாத்காரம் செய்தவர்களை மாலை மரியாதையுடன் அரவணைக்கும் போக்கு இருக்கிறது.

2.ஒற்றைப் பண்பாடு. ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒரே சித்தாந்தம்.. இந்து, இந்தி, இந்தியா இந்தப் போக்கை திணிக்கும் முயற்சி.

3.கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என எதுவுமே இல்லாத சூழல். இவைதான் மோடி வேண்டாம் என்பதற்கான அடிப்படை.

ஆனால், தேசிய ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் மீண்டும் மோடிதான் என்கின்றனவே?

தேசிய ஊடகங்கள் எல்லாம் நடுநிலை தவறும்படி நிர்பந்தப்படுத்தப் படுகின்றன. இங்கே கருத்துச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் இல்லை என்று சொல்லிவிட்டேனே. அப்புறம் கருத்துக் கணிப்பு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.

கடைசியாக ஒரு கேள்வி. ரஜினியின் பேட்டி பார்த்தீர்களா?

பார்த்தேன். ரஜினி அவரது அரசியல் நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறார். நதிநீர் இணைப்பு திட்டத்தை பாஜக வாஜ்பாய் காலத்திலிருந்துதான் முன்மொழிகிறது. இதில் இவர் என்ன புதுமையைக் கண்டுவிட்டார்? காவிரிக்காக இவர் குரல் ஒலிக்காது, நீட்டுக்காக இவர் குரல் ஒலிக்காது ஆனால் சினிமாப் பாடலில் என்ன வாழ வைத்தது தமிழ்ப்பாலே என்று ஒலிக்கும். அவரது நேர்மை நேரத்துக்கு ஏற்ப மாறும்.

அவர் எடுத்த எடுப்பிலேயே ஆன்மிக அரசியல் என்றார். அந்த அரசியல் பாதையில் தெளிவாக இருக்கிறார். ஆன்மிகத்தை வைத்துதான் பாஜகவும் அரசியல் செய்கிறது. அவர்கள் இந்து என்ற மதத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டனர். இவர் ஆன்மிகம் என்று சூசகமாக சொல்கிறார்.

தமிழகத்தில் எத்தனை எத்தனை நடிகர்கள் வீடு இருந்தாலும் மோடி ரஜினி வீட்டுக்குத்தானே சென்றார். இலங்கையில் விழாவுக்கு செல்லும் போது பிரச்சினை வந்தால்.. என்னை ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விக்க விடுங்கள் என்று கடிதம் எழுதுவார். இப்போது எதற்கு கருத்து சொல்கிறார். அதில், "இது தேர்தல் டைம்" என்ற பொறுப்பு துறப்பு வேறு.

மீண்டும் சொல்கிறேன். ரஜினி அவரது அரசியல் நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறார். தமிழக மக்கள் அதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. இதை இனியும், ரஜினியின் அரசியல் என்றெல்லாம் விவாதப் பொருள் ஆக்காமல் இருந்தால் நலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x