Last Updated : 07 Sep, 2014 10:47 AM

 

Published : 07 Sep 2014 10:47 AM
Last Updated : 07 Sep 2014 10:47 AM

அறுவைச் சிகிச்சைக்கு புதிய கருவி: அரசு மருத்துவர் வடிவமைப்பு

கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக ஒரு கருவியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் வடிவமைத்துள்ளார்.

மருத்துவமனையில் ஆர்த்தோ அறுவை சிகிச்சையின்போது பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் கால் பகுதியை தாங்கிப் பிடிக்கும் பணியில் ஈடுபடும் உதவியாளர்களின் சிரமத்தை குறைக்க, தான் வடிமைத்துள்ள பெரிஸ் லிம்ப் ஹோல்டர் எனும் கருவி உதவும் என்கிறார் புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை அறுவைச் சிசிச்சை நிபுணர் எம்.பெரியசாமி.

‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

விபத்து அல்லது ஏதோ ஒரு வகையில் கை மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்காக மயக்க நிலைக்கு மாற்றப்படுவது வழக்கம்.

அவ்வாறு மாற்றப்படும்போது கை அல்லது காலின் எடை 10-15 மடங்கு உயர்ந்துவிடும். சுத்தம் செய்யும்வரை பாதிக்கப்பட்ட பகுதியை படுக்கையில் படாமல் இருக்க தனியாக ஒருவர் சுமார் 1 மணி நேரம் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் அசைவில்லாமல் சுமார் 10 கிலோ எடையைத் தாங்கிப் பிடிப்பது என்பது மிகவும் கடினம். இதனால் ஆர்த்தோ அறுவை சிகிச்சை என்றாலே உதவியாளருக்கு பயம் வந்துவிடும். பலர் மறுப்பர். அதிலும் கால் பகுதி என்றால் சொல்ல வேண்டியதில்லை. சில நேரங்களில் உதவியாளர்கள் தடுமாறிவிடும் நிலையும் ஏற்பட்டது.

இதனால் மருத்துவருக்கும், நோயாளிக்கும் ஏற்படும் பிரச்சினையை நிரந்தரமாக போக்க வேண்டுமென்பதற்காக தனியாக ஒரு கருவியை வடிவமைக்க கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தேன். அதன்படி மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக சுமார் 1.2 மீட்டர் உயரத்தில் ஆங்கில எழுத்தான ‘F’ வடிவில் நிக்கல் பூசப்பட்ட இரும்பு கம்பியைக்கொண்டு கருவி வடிவமைக்கப்பட்டது.

அரங்கில் உள்ள படுக்கையின் பக்கவாட்டில் உள்ள திருகில் இந்தக் கருவியைப் பொருத்தி தேவையான அளவு உயரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பின்னர் கால், கை பகுதியை கட்டுவதற்கு சங்கிலி பயன்படுத்தினால் காயம் ஏற்பட்டுவிடும் என்பதால் எளிதில் கட்டி அவிழ்ப் பதற்கும் அனைத்து வயதினருக்கும் பயன்படும் வகையில் வசதியாக பிளாஸ்டிக் பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பொருத்த வளையம், கொக்கியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தி சோதித்ததில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை பயன்படுத்திய பிற மருத்துவர்களும் ஆதரித்துள்ளனர். இக்கருவி ரூ.1000 செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

நடப்பாண்டில் தமிழக அரசால் பாராட்டப்பட்ட மருத்துவர் எம்.பெரியசாமி, அறுவைச் சிகிச்சை அரங்கில் பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே 3 விதமான கருவிகளை கண்டுபிடித்து அவைகள் தற்போது மருத்துவமனை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரம் பெற விரும்புவோர் மருத்துவர் எம்.பெரியசாமியை 97509 69955 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x