பார்வையில் பட்ட செய்தி: ஆண் உடையில் வாழும் ஆப்கன் பெண்கள்

பார்வையில் பட்ட செய்தி: ஆண் உடையில் வாழும் ஆப்கன் பெண்கள்

Published on

திருநங்கைகள் போலத் திருநம்பிகளும் நம்மிடையே வாழ்கின்றனர். அவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. அதே சமயம், பெண்ணாகப் பிறந்து, சூழல் காரணமாக ஆண் உடை தரித்து வாழும் நிலை ஆப்கன் பெண்கள் சிலருக்கு இருக்கிறது.

ஆப்கனில் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. தலிபான் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை களும் தண்டனைகளும் பயங்கரமானவை. பெண்கள் வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான சூழலைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் என்று ஐநா குறிப்பிட்டுள்ளது. ஆப்கன் பெண்களின் சராசரி வயது 44தான்.

இந்தச் சூழலில், தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளை அணிவித்து, ஆண்களைப் போலப் பேசக் கற்றுக்கொடுத்து, ஆண்களின் உலகத்திலேயே உலவவிடுகின்றனர். “இது மிகப் பழமையான நடைமுறை. ஆப்கன் பகுதியில் இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்பிருந்தே இது நடை முறையில் இருக்கிறது” என்கிறார் ஜென்னி நோர்ட்பெர்க். இவ்வாறு ஆணாக வளர்க்கப்படும் சிறுமிகள், ‘பச்சா போஷ்’ (பாரசீக மொழியில், ‘பையனைப் போல உடையணிவது’) என்று அழைக்கப்படுகின்றனர்.

ஆப்கனில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பச்சா போஷ் குழந்தையையாவது பார்க்க முடியும் என்று ஆசிரியைகள் குறிப்பிடுகின்றனர். இப்படியான பெண்கள், பெரும்பாலும் ஆண்களுடன் பழகுவதால், அவர்களுக்குப் பெண்களின் பழக்கவழக்கங்கள்பற்றி சரியான புரிதல் இருப்பதில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பெண்கள், பிற்பாடு திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களைப் போலக் குடும்ப வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாக அந்தப் பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். “இத்தனை ஆண்டுகள் ஆணாக வாழ்ந்துவிட்டு, திடீரென்று பெண்ணாக வாழ்வதா?” என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்களும் உண்டு. நிரந்தரமாக ஆணாகவே வாழ்வது என்று இறுதி முடிவு எடுத்து, தனது மாற்று அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் பெண்களும் உண்டு.

அமெரிக்க எழுத்தாளரும் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளருமான ஜென்னி நோர்ட்பெர்க், தனது ‘தி அண்டர்கிரவுண்டு கேர்ள்ஸ் ஆஃப் காபுல்’ (The Underground Girls of Kabul) என்ற புத்தகத்தில் இந்தச் சங்கடத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

நன்றி: தி கார்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in