Published : 22 Feb 2019 12:21 PM
Last Updated : 22 Feb 2019 12:21 PM

சிவப்பு தங்கத்தால் ஜொலிக்காத தொழிலாளர்கள் வாழ்க்கை!

தூக்கமின்மை, சமூகப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் கேரட் அறுவடை நேரத்தை மாற்ற வேண்டுமன வலியுறுத்தி வருகின்றனர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத்  தொழிலாளர்கள்.

நீலகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் தேயிலை விவசாயம்தான் பிரதானம். இந்த மாவட்டத்தில்   7 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.  கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் கேரட், மேட்டுப்பாளையம், சென்னை போன்ற மொத்த சந்தைகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உதகை அருகே நஞ்சநாடு, கேத்தி, பாலாடா  பகுதிகளிலேயே அதிக அளவு கேரட் பயிரிடப்படுகிறது.

ஆனாலும், `சிவப்பு தங்கம்` என்றழைக்கப்படும் கேரட் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை ஜொலிக்கவில்லை. கேரட் அறுவடையில் கேத்தி, பாலாடா, கோலானிமட்டம், மணியபுரம், காட்டேரி கிராமங்களில் வசிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.  உதகையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு முன்னரே, சென்னை மார்க்கெட்டுக்கு கேரட் கொண்டு செல்லப்படுகிறது.

மேட்டுப்பாளையம் சந்தையில் காலை 10.30 மணிக்குள் கேரட் ஏலம் விடப்படுகிறது. இதற்காக, அதிகாலை 2 மணியளவில் தொழிலாளர்களை கேரட் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று, அறுவடை செய்கின்றனர். பின்னர், விடிவதற்குள் லாரிகளில் ஏற்றி கேரட் கழுவும் இயந்திரங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். அங்கு, கேரட்டை முழுமையாக கழுவிய பின் தரம் பிரித்து, மூட்டைகளில் நிரப்பி, காலை 8 மணிக்கு முன்னதாக  லாரிகளில் ஏற்றி உதகையிலிருந்து அனுப்பி, காலை 10 மணிக்குள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுசெல்கின்றனர்.

அங்கு வியாபாரிகள் இவற்றை வாங்கி ஏலம் விடுகின்றனர். காலை 10.30 மணிக்குள் மேட்டுப்பாளையத்தில் ஏலம் நடக்கும் காரணத்தாலேயே, கேரட் அறுவடை நள்ளிரவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, தொழிலாளர்களை சிலர் நள்ளிரவில் அழைத்துச் செல்கின்றனர். இதனால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவில் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அறுவடைப் பணிக்கு செல்வதால், குழந்தைகள் பாதுகாப்பின்றி வீடுகளில் இருக்கின்றனர். மேலும், தொழிலாளர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டு, இருளிலேயே பணி செய்கின்றனர். பணி முடிந்து மாலை வீடு திரும்புவோர்,  அசதியால் தூங்கிவிடுகின்றனர். இதனால், பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடையே பரிவு, பாசம் இல்லாமல் போய்விடுகிறது.

நள்ளிரவு பணிக்குச் செல்ல வேண்டும் என்பதால், இரவே தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை அணிவித்து, தலை சீவிவிட்டு படுக்கவைத்து விடுகின்றனர். நள்ளிரவில் இவர்கள் பணிக்கு சென்று விடும் நிலையில்,  காலையில் எழும் குழந்தைகள், தாங்களாகவே தயாராகி, சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்குப்  புறப்பட்டுச் சென்று, மீண்டும் மாலையில் வீடு திரும்புகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், பிஞ்சுக் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

இது ஒருபுறம் இருக்க, தூக்கமின்மை காரணமாக விபத்துகளும் நேரிடுகின்றன.  கேரட் ஏற்றிச்  செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, அதில் பயணிக்கும் தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கொல்லிமலை பகுதியில் கேரட் ஏற்றிச் சென்ற  லாரி கவிழ்ந்து, அதில் பயணம் செய்த தாம்பட்டி அண்ணா நகர் ராஜேஷ்(40), மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்தார்.

லாரிகள் மற்றும் கூட்ஸ் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தபோதிலும், இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள், குறிப்பாக கேரட் அறுவடை செய்யப்பட்ட பின்னர், அவற்றை கழுவ கொண்டுசெல்லப்படும் வாகனங்களில், மூட்டைகள் மேல் அமர்ந்து தொழிலாளர்கள் செல்வது தொடர்கிறது. மேலும், கேரட் அறுவடை பணியில் அதிக அளவில் இளைஞர்களும் ஈடுபடுகின்றனர். உதகையில் நிலவும் குளிர் காரணமாக, பணிக்குச் செல்வோர் குளிரைப் போக்கவும், உடல் வலியைப் போக்கவும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். 

இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை, உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் நிலையில், ஊதியத்தில் பாதியை  மதுவுக்கே செலவிடுகின்றனர்.

இத்தகைய காரணங்களால், கேரட் அறுவடை செய்யும் தொழிலாளர்களிடையே சமூகப்  பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  எனவே, கேரட் அறுவடை நேரத்தை மாற்ற வேண்டும் என தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இவர்களது கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம்,  கேரட் வியாபாரிகளிடம் காலை 6 மணிக்குப் பின் கேரட் அறுவடையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. எனினும், மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, ஒரு சில நாட்கள் மட்டுமே வியாபாரிகள் கேரட் அறுவடையை காலை 6 மணிக்குப் பின் மேற்கொண்டனர்.  ஆனால், மீண்டும் நள்ளிரவில் அறுவடைப்  பணிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தொழிலாளர்கள் வேதனைப்படுகின்றனர்.

carrot-3jpgசதீஷ்குமார்

வியாபாரிகள் நிர்ப்பந்தத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள்!

விவசாயத் தொழிலாளி சதீஷ்குமார் கூறும்போது, “மாவட்ட நிர்வாகம் காலை 6 மணிக்கு மேல்தான் கேரட் அறுவடைப்  பணியை மேற்கொள்ள  வேண்டுமென உத்தரவிட்ட பின்னரும், தொழிலாளர்கள் அறுவடைப் பணிக்கு மீண்டும்  நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் வியாபாரிகள்தான். 

அதிகாலைக்குள் கேரட் அறுவடையை முடித்து,  மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுசெல்ல வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இதை, வருவாய், காவல் துறையினரும் கண்டுகொள்வதில்லை. இதனால், மீண்டும் கேரட் தொழிலாளர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.  இதை தடுத்து, தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் கேரட் அறுவடையை காலை 6 மணிக்குப் பின்னரே  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x