Published : 23 Feb 2019 01:47 PM
Last Updated : 23 Feb 2019 01:47 PM

மூலிகை நீராவிக் குளியல் தொடு வர்ம சிகிச்சை...அசத்தும் பவானி சித்த மருத்துவர்!

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து, வலது பக்கம் திரும்பினால், மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது சித்த மருத்துவப் பிரிவு. சின்னவயசுக்காரர்களில் இருந்து, பெண்கள், முதியோர் என பலதரப்பட்ட நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சித்த மருத்துவத்தின் அடையாளமாக, காற்றில் கலந்திருக்கும் மூலிகைகளின் மணமும், அங்கே பயன்படுத்தும் மூலிகைத் தைலங்களின் வாசமும் ஈர்க்கிறது. நோயாளிகளின் பதிவை வரவேற்பறையில் உறுதிப்படுத்திக் கொண்டு, நோயாளிகள் மருத்துவரின் பலவித பரிசோதனைகளின் முடிவில், அவரது நோய்க்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும், எத்தனை நாட்கள் சிகிச்சை பெற வேண்டும், பத்தியங்கள், உள்ளிருப்பு நோயாளியாக அனுமதிக்க வேண்டுமா என்பன குறித்து முடிவு செய்யப்படுகிறது.

மருத்துவம் தொடர்பாக திருக்குறள்களின் தொகுப்பு, தினம் ஒரு மூலிகைச் செடி மற்றும் அதன் சிறப்பு குறித்த விளக்கப் பலகை, நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் மருத்துவம் தொடர்பான செய்திகளைத் தாங்கிய அறிவிப்புப்பலகை, நிலவேம்பு குடிநீர், கபசுரக்குடிநீர், அவ்வப்போது வழங்கப்படும் கிரீன் டீ என நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள்.

அரசு மருத்துவமனையில் இத்தனை சிகிச்சை முறைகளா என்று அதிசயிக்கும் அளவுக்கு,  பல்வேறு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. அத்தனை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி. பவானி சித்த மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் அதன் பயன்களையும் விளக்கினார் அவர்.

எத்தனை வகையான சிகிச்சைகள்!

இங்கு அளிக்கப்படும் மூலிகை நீராவிக்குளியல் சிகிச்சையின் மூலம், உடலில் உள்ள கழிவுகள் வியர்வையின் மூலமாக வெளியேற்றப்பட்டு, உடல் புத்துணர்வு பெறுவதுடன், தோல் நோய்கள் குணமாகின்றன. உடல் எடை குறைதல், உடலில் ரத்த ஓட்டம் சீரடைதல், மூட்டுவலி, உடல் வலி குணமாகிறது.

எண்ணெய் தேக்கம் சிகிச்சை உடலின் முதுகுத்தண்டுவடப் பகுதி மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம், இறுக்கம், வலி, நடப்பதில் சிரமம், காலில் எரிச்சல், உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை போன்றவைகளுக்கு நல்ல பலனைத் தருகிறது. தொக்கணம் சிகிச்சையால் உடல் வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, பக்கவாதம், முகவாதத்துக்கு நிவாரணம் கிடைக்கிறது.

தொடு வர்ம சிகிச்சையால் கழுத்து வலி, இடுப்புவலி, இடுப்பு எலும்புகளில் அழுத்தம், எலும்பு விலகல், தலைவலி, முழங்கால் வலி, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் முடிகிறது. சிரசு எண்ணெய் சிகிச்சை ஒற்றைத் தலைவலி, பக்கவாதம், கண்பார்வை மங்கல், மூளை தொடர்பான நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. இத்துடன் வாரத்தில் இரு நாட்கள் தியானம் மற்றும் யோகா கற்றுத் தரப்படுகிறது.

இந்த சிகிச்சைகளுக்குத் தேவையான மூலிகைகளுக்காக, 5,000 சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளைக் கொண்ட தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எளிதில் கிடைக்காத அரியவகை மூலிகைகளான மணிப்பிரண்டை, முப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, கொடிவேலி, சிறுகுறுஞ்சான், நீல நொச்சி, நன்னாரி, கோபுரந்தாங்கி, ரணக்கள்ளி, கருங்குறிஞ்சி, மகாவில்வம், மஞ்சல் கரிசாலை, தழுதாலை, இன்சுலின் செடி, பூனை மீசை (பூ பூக்கும்போது பூனையின் மீசை போன்று இருக்கும் - சிறுநீரக செயல் இழப்புக்கு சிகிச்சைக்கானது) அவுரி (இயற்கை முடிச்சாயம்), கனக இலை, திருவோடு, சதையொட்டி, அக்ரஹாரம் (பல்வலி சிகிச்சைக்கானது) போன்றவை மூலிகைத் தோட்டத்தில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன.

மேலும்,  ஆடா தொடை, பொன்னாவாரை, திருநீற்றுப் பச்சிலை, துளசி, தூதுவளை, நிலவேம்பு, மலைவேம்பு, ஓரிதழ் தாமரை, விஷ்ணு கிரந்தி, கரு உமத்தை, சங்கு புஷ்பம், நாவல், நஞ்சறுப்பான், வெட்டிவேர், மந்தாரை, முறிவொட்டி, கோவை, துத்தி, சீண்டில், கற்றாலை, சீமை அகத்தி, எலுமிச்சம்புல், செம்பருத்தி, நெல்லி, ஈட்டி என நூற்றுக்கணக்கான மூலிகைகள் தோட்டத்தை அலங்கரிக்கின்றன.

மூலிகைத் தோட்டம்

அரசுப் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, அந்தந்த நிறுவன வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்க, இலவசமாக மூலிகைச் செடிகளும் இம்மருத்துவமனை மூலமாக வழங்கப்படுகிறது.

“எங்க அப்பா, அம்மா காசநோயால் பாதிக்கப்பட்டு, நான் சிறுவனாக இருக்கும்போதே இறந்து விட்டனர். எனது அண்ணன் முனிராஜ்தான் என்னை வளர்த்து, படிக்க வைத்தார். மருத்துவராக வேண்டும், மக்களின் நோயை குணப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் 1998-ல் இளங்கலை சித்தமருத்துவம் படித்து முடித்தேன். கொளாநல்லி, பெரிய புலியூருக்கு பின், பவானி அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்” என்றார் கண்ணுசாமி.

தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது (2012), தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையத்தின் சிறந்த மருத்துவர் விருது, ஈரோடு மாவட்ட ஆட்சியரால் கவுரவிக்கப்பட்ட சேவையாளர் விருது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ள கண்ணுசாமி, ‘வரும்முன் காப்போம் - சித்த மருத்துவம்’ என்ற நூலையும் எழுதியுள்ளார். மாவட்டம் முழுவதும் இவர் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில், இந்த நூல் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும்  300-க்கும் மேற்பட்ட இலவச சித்த மருத்துவ முகாம்கள் மற்றும் உணவு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருவது, மருத்துவரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

“உணவு, பயிற்சி, மருத்துவரின் நம்பிக்கை தரும் வார்த்தைகளே, நமக்கு வரும் 90 சதவீத நோய்களைத் தீர்த்துவிடும்.

அதற்கென தனியாக மருந்து எடுத்துக் கொள்ள தேவையில்லை. எந்த மருத்துவமானாலும், நோயாளிகளை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது. சிகிச்சைக்குப் பலன் இல்லையென்றால், யாரும் தேடி வர மாட்டர்கள். சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகரித்துள்ளது. எங்களது உயர்

அதிகாரிகள் கொடுக்கும் ஊக்கத்தால், நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க முடிகிறது.

நோய் பாதிப்பு அனுபவங்களின் அடிப்படையில், சித்தர்கள் எல்லா நோய்க்கும் மருந்துகளை அடையாளம் காட்டிச்  சென்றுள்ளனர். அவற்றின் மகத்துவத்தை முழுமையாக உணர்ந்தால், மருத்துவத் துறையில் நமது வலிமை உலகுக்குத் தெரியவரும்” என்றார் நம்பிக்கையுடன்.

சமையலறையே சர்வரோக நிவாரணி!

“வெள்ளரிக்காய், கேரட்டுன்னு எத்தனையோ பச்சடி இருக்கு... ஆனால், பிரியாணிக்கு, வெங்காய பச்சடி ஏன் கொடுக்கிறாங்க தெரியுமா?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ‘பிரியாணி கொழுப்பு சத்துள்ள உணவு. வெங்காயம் கொழுப்பைக் குறைக்கும். இப்படித்தான், நமக்கு தெரியாமலே நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில், மருத்துவத்தைப் புகுத்தியிருக்கிறார்கள் முன்னோர்கள். நம்ம சமையலறை என்பது ஒரு சர்வரோக நிவாரணி.

அங்கு இருக்கும் வெந்தயம், பூண்டு, மிளகு, சீரகம், மல்லி, இஞ்சி என எல்லாமே நோய் தீர்க்கக்கூடிய மருந்துகள்தான். அதை தனித்தனியே சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டார்கள் என்பதால்தான், சாம்பார், ரசம் என வெவ்வேறு பெயர்களில் தயார் செய்து சாப்பிட வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். பாரம்பரியமாக நாம் உணவில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவக் குணம் வாய்ந்தவைதான்” என்றார் மருத்துவர் கண்ணுசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x