Last Updated : 05 Feb, 2019 12:03 PM

 

Published : 05 Feb 2019 12:03 PM
Last Updated : 05 Feb 2019 12:03 PM

நாமளும் போடுவோம் பட்ஜெட்!

நேரமின்றி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்.. ஆண்டு பட்ஜெட் என்று அரசு தரப்பில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நேரம் இது. நம் குடும்பத்துக்குத் தேவையான பட்ஜெட் போடுவது அவசியம்தான்.

பட்ஜெட் பத்மாவாகிய நானும் (நான் என்றால் நான் இல்லீங்க. என்னைப்போல ஏராளமான பட்ஜெட் பத்மாக்கள்) இந்த வருடம் முதல் அநாவசியமான செலவுகளையும், ஆடம்பரமான பொருட்களையும்  அழகைக் கூட்டுவதாக காண்பிக்கும் அலங்கார விலைமிக்க பொருட் களையும் உபயோகப்படுத்தமாட்டேன். மாறாக குடும்பத்தின் ஆரோக்யத்தைக் காக்கும் பொருட்டு ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து சத்தான பொருட்களை மட்டுமே சமைப்பேன். குடும்பத்துடன் வாரத்துக்கு ஒருமுறை  நேரத்தைக் குதூகலமாக செலவிடுவதோடு வரவு செலவு குறித்த விஷயங்களைக்   கலந்து அவர்களது ஆலோசனையும் சேர்த்து பற்றாக்குறையில்லா பட்ஜெட் போடுவேன்.  இதுதான் இந்த வருட எனது புத்தாண்டு சபதம் என்று சொல்லும்போதே மனதிலிருந்து ஒரு கேள்வி.

இப்படித்தானே போன வருஷமும் சபதம் எடுத்தே.. ஆனா சபதமா ஜெயிச்சுச்சு...  பார்க்கிற பொருளெல்லாம் வாங்குவாங்குன்னு  சொன்ன சபலம்தானே ஜெயிச்சுச்சுன்னு உள்ளே ஒரு மூஞ்சி, பழிப்பு காட்டுது. ஆனா நான் முடிவு பண்ணிட்டேன்... இந்த வருஷம் கண்டிப்பா  ஆடம்பர விஷயங்களுக்கு சபலப்படாம.... சபதத்தைக் காப்பத்தியே தீருவதுன்னு!

மன உறுதில உறுதியா இருக்கணும்:

இங்கதாங்க மனசு தடுமாறுது. முதல்  வருடம் ...முதல் தேதி... முதல் சபதம்னு நாம சொல்றதே இந்த வருஷம் கடனை அடைச்சுட்டு  புதுசா வீடு வாங்கிடணும்... இல்ல வாங்கின வீட்டுக்கு தவணைத் தொகையோட ரொக்கம் கொஞ்சமும் சேர்த்து அடைக்கணும்னெல்லாம்தானே நினைக்கிறோம். ஆனா ஒரு தவணை கட்டவே பல தவணை கட்ற மாதிரி கடனை வாங்கிடுற சூழ்நிலை வந்துடுது.

சபதத்துக்கு வந்த சத்தியசோதனை மாதிரி அதுக்கு ஆயுசு குறைவு போல… முதல் வருடம்.. முதல் தேதியில முடிவு பண்ண சபதம் முதல் மாதம் முடியறதுக்குள்ள காத்துல கலந்த மூச்சு மாதிரி காணாமப் போய்டுது. சபதம் எடுக்கிறதுக்கு முன்னாடி உறுதியா இருக்கணுங்கிற சத்திய பிரமாணமும் சேர்ந்து எடுக்கணும் போல. அதனால மன உறுதி ரொம்பவே முக்கியம்.

ஆசை ஓகே... பேராசை?

பரிமளா மாதிரி பட்டுப்புடவை வாங்கணும்னு ஆசைப்படலாம். வனிதா மாதிரி வைர நெக்லஸ் வாங்கியே தீரணும்னு அடம்பிடிக்கலாமா?  வரவுக்கேத்த செலவு பண்றதுல பெண்களை மிஞ்ச ஆளே இல்லங்கிறது உண்மைதான். ஆனா ஒரு சிலருக்கு பார்க்கிற பொருளெல்லாம் வாங்கியே தீரணும்னு ஒரு அசட்டுபிடிவாதம். நமக்குதான் குடுப்பின இல்ல.. நம்ம குழந்தைங்களாவது அனுபவிக்கட்டுமேன்னு பால்காரனுக்கு கொடுக்க வேண்டிய காசை பரதநாட்டிய க்ளாஸ்க்கு கட்டிட்டு அவஸ்தைப்பட வேண்டியது. அப்புறம் இந்தக் கடன் அடைக்க… இன்னொரு கடன்.. அதை அடைக்க.. இன்னொரு கடன்.. நடுவுல நகைக்கு வட்டிகட்ட மறந்துட்டு மொத்தமா வரும்போது இதைக் குறைச்சுக்கலாமா அதை குறைச்சுக்கலமானு சத்தம் போட்டுக் கூட சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே மருக வேண்டியது.

 ஆண்கள் மட்டும் ஆசைப்படறதில்லியான்னு கேட்கலாம். தலைவலியே வேணாம்டா சாமி.. குடும்பத்தைக் காப்பத்தற குலசாமியே நீதான்னு நம்மகிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டு சாமர்த்தியமா கைச்செலவுக்குன்னு வாங்கி அவங்க நிம்மதியா இருக்காங்க. அப்படியும் சில தம்பதி பொறுப்பா வீட்டுக் கடன், கார் லோன். டூ வீலர் லோன், இன்ஷ்யூரன்ஸ்,குழந்தைங்க படிப்பு செலவுன்னு ஒதுக்கிட்டுதான் அப்புறம் மத்த விஷயங்களுக்கு வருவாங்க…

எப்படி பட்ஜெட் போடுவது?

போன வருஷம் வருமானம், சேமிப்பு, நகைச்சீட்டு, எல்.ஐ.சி, கல்விக் கட்டணம், பர்சனல் லோன், டூ வீலர், கார் லோன், வீட்டு லோன், வரி, மருத்துவச் செலவு, வீட்டுச் செலவு, டூர், சுபவிசேஷம்னு ஒண்ணுவிடாம கணக்கு போடுங்க. வருமானத்துக்கு ஏத்த செலவோடு கொஞ்சம் சேமிப்புக்கும் ஒரு தொகை ஒதுக்கியிருந்தா நீங்கதான் சிறந்த குடும்பத் தலைவி. அதேநேரம் வருமானமும் செலவும் சமமா இருந்து சேமிப்பு ஒண்ணுமில்லன்னு கைவிரிச்சா கொஞ்சம் கூடுதலா  கூர்மையா பட்ஜெட் போடணும்.

இந்த வருடம் ஒவ்வொரு மாதமும் கடைசி நாள்ல குடும்பத்தில குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஒண்ணா உட்கார்ந்து இடைக்கால பட்ஜெட் போடுங்க. விர்ருன்னு விலைவாசி ஏறிக்கிட்டே போறதால எல்லோராட ஒத்துழைப்பும் இருந்தாதான் பட்ஜெட் பற்றாக்குறையா இருக்காது. குழந்தை பிறந்த உடனேயே பாலிஸியும் கையோட போட்டுடுங்க. ஆரோக்யத்துக்கு வாங்கும் பொருள்களையும், மருந்துகளையும் தவிர்க்கமுடியாது. ஆனா வேற எந்தப் பொருளை வாங்கினாலும் அவசியமான்னு பத்து முறை யோசிச்சு வாங்குங்க. குழந்தைங் களுக்கும் இந்தப் பழக்கம் தானாகவே வரணும்.

ஏன்னா, குழந்தைங்கதானே எதிர்காலத்துல, நம்ம வீட்டுக்கு நிதியமைச்சர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x