

வேலாயுதத்துக்கு மரியாதை!
காலை நிகழ்ச்சிக்கு முதலாவதாக வந்த சிறப்பு விருந்தினர் ‘விஜயா பதிப்பக’ நிறுவனர் மு.வேலாயுதம். ‘‘ஞானி விருதுபெறும் மாலை நிகழ்ச்சியில்தான் கலந்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். விழாவுக்குக் குத்துவிளக்கேற்ற என்னை அழைத்தது நெகிழவைத்துவிட்டது” என்றார். கோவையில் வாசிப்புச் சூழலை வளர்த்தெடுத்தவர்களில் முதன்மையானவர் வேலாயுதம். “ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆட்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருப்பதுடன் எல்லோருக்கும் உரிய மரியாதையையும் செய்திருக்கிறீர்கள்!” என்று ஆசிரியர் குழுவைச் சந்தித்துச் சொன்னார் வாசகர் பாலாஜி.
--------------
‘நிகர்’ பறையிசைக் குழுவினர்
நடத்திய பறையிசையுடன்தான் விழா
அமர்க்களமாகத் தொடங்கியது. இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள்,
கல்லூரி வளாகத்திலிருந்தே தொடங்கி பறையை அடித்துக்கொண்டே அரங்கத்துக்குள் நுழைந்தபோது மொத்த வளாகமும் அதிர்ந்தது. ‘சாதி சார்ந்து, இனம் சார்ந்து, மொழி சார்ந்து, நிறம் சார்ந்து, பாலினம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து ஒடுக்கப்படுவர் எவராகினும் அவர்களின் குரலாய் ஒலிக்கட்டும், அவர்களின் போர்ப்படை முழக்கம்!’ என்று அந்த இளம் கலைஞர்கள் எழுப்பிய முழக்கம் அனைவரையும் கவர்ந்தது!
-------------
ஆளுயர டைரியில் கொள்கை முழக்கம்!
நிகழ்ச்சி நடந்த ‘இந்துஸ்தான் கல்லூரி’ வளாகத்தின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட பல வண்ணத் தோரணங்கள், ‘யாதும் தமிழே 2019’ எழுதப்பட்ட பேனர்கள், தமிழர்களின் பழம் பெருமையைப் பறைசாற்றும் மாட்டுவண்டிச் சக்கரம் போன்ற வடிவங்கள் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதன் முன்பு வாசகர்கள் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். ஆளுயர டைரியில் தமிழ் குறித்த தங்கள் கருத்துகளை ஆர்வத்துடன் பதிவிட்டு, கையெழுத்திட்டு மகிழ்ந்தனர்!
--------