Last Updated : 23 Feb, 2019 01:42 PM

 

Published : 23 Feb 2019 01:42 PM
Last Updated : 23 Feb 2019 01:42 PM

சாதனை முகங்கள்: விவசாயிகளின் நலனே தேசத்தின் நலன்! - எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன் உறுதி

விவசாயிகள் மீது  எஸ்கேஎம்.மயிலானந்தன் கொண்டிருந்த அக்கறையும்,  அவர் மீது விவசாயிகள் வைத்திருந்த  நம்பிக்கையும் ‘எஸ்கேஎம்’ என்கிற தொழில் சாம்ராஜ்ஜியத்தை  உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. விவசாயிகளின் நலனே தேசத்தின் நலன் என்று உறுதியாய் இருக்கிறார், பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்த

எஸ்கேஎம்.மயிலானந்தன். அவர் தொழிலில் காட்டிய நேர்மைக்குப் பரிசாக, தட்டாமலேயே திறந்தன வெற்றியின் கதவுகள்.

“மொடக்குறிச்சிக்குப் பக்கத்துல சாமிநாதபுரம்னு சின்ன கிராமத்துல பிறந்தேன். எங்க ஊரே காங்கிரஸ் தியாகிகள் இருந்த ஊர். நம்ம நாட்டோட முதல் ராணுவ வீரர்கள், சுதந்திரத்துக்குப் போராடின தியாகிகள்தான். நாட்டுப்பற்றுமிக்க தியாகிகளை, பக்கத்துல பார்த்து வளர்ந்ததால, உண்மையாவும், நேர்மையாவும் வாழணும்னு சின்ன வயசுலேயே லட்சியம் வந்தாச்சு. நான் சின்ன விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரே பையன். 

என்னை எப்படியாவது படிக்க வெச்சு, கவர்மென்ட் உத்யோகம் வாங்கிக் கொடுத்துடலாம்னு கனவு கண்டார் எங்கப்பா.  எனக்கோ, படிப்புன்னா வேப்பங்காயா கசக்கும். ஒரு பாடத்தில்  ஃபெயிலானா பரவாயில்ல. நான் எல்லா பாடத்திலேயும் ஃபெயிலானா வாத்தியார் என்னதான் பண்ணுவார்?  எட்டாம் வகுப்பு வந்ததும், ஆசிரியரே எங்கப்பாவை வரவழைச்சு, ‘இவனுக்குப் படிப்பு வராது. வேற ஏதாவது வேலை கத்துக்கொடுங்கனு சொல்லிட்டாரு.

இனிமே தினம் பள்ளிக்கூடம் போக வேணாம்னு எனக்கு ஏக சந்தோஷம். விவசாய வேலைக்குப்போக ஆரம்பிச்சேன். 15 வயசுல ஏர் புடிச்சிப் பழகினேன். உழைப்போட அருமையும், விவாசாயத்தோட நிலைமையும் அப்போதான் புரிஞ்சது. நிலத்துல விழறது விவசாயியோட வியர்வை இல்லை. ரத்தம்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சிக்கிட்டேன்.

ரூ.500-ம், அவமானமும்!

பயிர், நிலம், உரம், மாடுனு ராத்திரி பகலா மூணு வருஷம் ஓடுச்சு. ஒவ்வொரு வருஷமும் தாங்க முடியாத நஷ்டம். வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்காக நான் உழைக்கவே இல்லை. மானம் மரியாதையா வாழறதுக்குதான் உழைச்சேன். அதுவே பகல் கனவா போச்சு.  உறவினர் ஒருத்தர்கிட்ட 500 ரூபா கடன் கேட்டுப் போனேன். அவர், ‘இல்லே’னு சொல்லி அனுப்பியிருக்கலாம். ஆனா, மரியாதைக் குறைவா பேசி அனுப்பிட்டாரு.  நிலமே கதினு கிடந்த எனக்கு, பெரிய அவமானமாப் போச்சு. 

படிப்பும் ஏறலை. தொழிலும் உருப்படலை. வீட்ல தலைநிமிர்ந்து யாரையும் பார்க்க முடியலை. சேமிப்பா இருந்த காசையெல்லாம் விவசாயம் பார்க்கிறேனு தொலைச்சிட்டேன். ‘இப்படி கஷ்டப்படறதுக்கு ஒழுங்கா படிச்சிருக்லாமே மயிலு’னு எங்கம்மா சொன்னதும் சுளீர்னு உறைச்சது. விவசாயம் பண்றதைவிட படிக்கிறது ஆயிரம் மடங்கு சுலபமான வேலைனு அந்த கணமே உணர்ந்துட்டேன்.

மீண்டும் பள்ளிக்கு…

திரும்பவும் நான் படிக்கப் போறேனு சொன்னதும் ஊரும் உறவும் அதிர்ச்சியானாங்க.  மூணு வருஷம் படிப்பை நிறுத்தின பிறகு,  அதே எட்டாம் வகுப்புல போய் சேர்ந்தேன்.  படிப்பே வராது கூட்டிட்டுப் போயிடுங்கனு சொன்ன பையன், திரும்ப படிக்க வந்ததும்  வாத்தியாருங்களுக்கே  நம்பிக்கை இல்லை.  வளர்ந்த பையனா இருந்தும், டவுசர் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் போனேன். எல்லார்கிட்டேயும் ஒரு ஏளன சிரிப்பு இருக்கும். அதை மாத்திறதுக்கே எனக்கு மூணு மாசம் தேவைப்பட்டுச்சு.

விவசாயத்துக்கு உழைச்சதுல 10 சதவீதம்தான் படிப்புக்குப் போட்டேன். காலாண்டுத் தேர்வில் நான்தான் வகுப்பில் முதல் மாணவன். யாராலும் நம்ப முடியலை. என்னோட மாற்றத்தை எல்லாரும் மனம் திறந்துப் பாராட்டினாங்க. வெற்றியின் ருசி என்னானு முதல்முறை அனுபவிச்சேன். அப்புறம், அந்தப்  பள்ளிக்கே நான் செல்லப்பிள்ளை.

வகுப்புத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த வருஷம் பள்ளிக்கே மாணவர் தலைவனா தேர்ந்தெடுக்கப்பட்டேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நாடகம்னு  எதையும் விட்டுவைக்காம கலந்துக்குவேன். படிப்பே வராதுனு திருப்பி அனுப்பப்பட்ட நான், ஒன்றுபட்ட கோவை ஜில்லாவில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தேன். அதிக மதிப்பெண் எடுத்து, பள்ளியின் முதல் மாணவனா  வந்தேன்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

மாணவர்கள்கிட்ட, இந்தி எதிர்ப்பு போராட்டப் பாதிப்பு அதிகமா இருந்த காலம் அது. எனக்கு தமிழ்ப் பற்று அதிகம்.  காங்கிரஸ் பாரம்பரியம் உள்ள ஊரில், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவதெல்லாம் சாத்தியமில்லை. ஆனா,   அண்ணாவின் பேச்சை கேட்டா, இந்தியை எதிர்க்காம இருக்கவே முடியாது. ஆசிரியர்களின் கட்டுப்பாட்டையும் மீறி மாணவர்களை வீதிக்கு திரட்டிக்கொண்டுவந்தேன்.

‘இந்தி அரக்கி ஒழிக’னு உருவபொம்மை எரிக்கும் போராட்டத்தை நடத்தினேன்.அப்ப, தீவிரமான இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல போலீஸ் துப்பாக்கியால சுட்டு, பல இளைஞர்கள் இறந்து போயிருந்தாங்க. போராட்டத்துல என்னை போலீஸ் ஜீப்புல ஏத்திட்டாங்க. இதைப் பார்த்த என் அப்பாவின் நண்பர், ‘இப்படியே உன் பையன் இருந்தா, உயிரோட இருக்கமாட்டான்’னு சொல்லிட்டாரு.  ’வீட்டுக்கு ஒரே வாரிசு. ஏதாச்சு தப்பாயிட்டா வம்பா போயிடும்’னு, படிப்பை விட்டுற சொல்லிட்டார் அப்பா.  கல்லூரிக்குப் போய் படிக்கணும்ங்கிற என் ஆசை நிறைவேற வாய்ப்பில்லாமப் போச்சு.

நான் படித்த பள்ளிக்கு வெகு அருகில் கடை நடத்தின என் உறவுக்காரர், அந்த கடையை விற்பனை செய்ய முன்வந்தார்.  மூவாயிரம் ரூபாய் முதலீடு.  நிலத்தை விற்று பணம் கொடுத்தார் அப்பா. மொடக்குறிச்சியில் மளிகை சாமான்கள், பள்ளிக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்களை வெச்சு, வியாபாரத்தை ஆரம்பிச்சேன். பள்ளியில் பிரபலமானவனா இருந்த காரணத்தால, எல்லாரும் என் கடையைத் தேடிவந்தாங்க.

ஒத்துவராத அரசியல்

வியாபாரத்தை ஒரு பக்கம் பார்த்துக்கிட்டே, அரசியலில் தீவிரம் காட்ட ஆரம்பிச்சேன். அரைக்கால் டவுசரோடு, பழைய சைக்கிளில் இளைஞர் காங்கிரஸுக்காக வேலை பார்த்த காலத்தில், காமராஜர் பக்தனாவே இருந்தேன். பொதுவாழ்வில் சுயநலமில்லாமல் மக்களுக்காகவே வாழ்ந்த அவரையே கட்சியிலிருந்து நீக்கினப்ப, அரசியல் நமக்கு சரிப்படாது முடிவு செய்தேன். 

வீட்ல பார்த்த பெண்ணைத் திருமணமும் செஞ்சிக்கிட்டேன். அப்புறம் 24 மணி நேரமும் தொழில் பற்றிய சிந்தனைதான். அப்ப, விவசாயிகள்  சிலர் என் கடைக்கு வந்து  உரம் இருக்கானு கேட்டுட்டு, திரும்பிப் போனாங்க. மூணு வருஷம் விவசாயம் பார்த்த அனுபவத்துல, உரங்கள் பற்றி நல்லா தெரிஞ்சி வெச்சிருந்தேன். மளிகை சாமான், நோட்டுப்  புத்தகங்களோடு உரங்களையும் விற்பனை செஞ்சேன்.

வெற்றிக்கான `உரம்’

1971-ல் யூரியா உரத் தட்டுப்பாடு வந்துச்சு. கள்ள மார்கெட்டில் உரத்தைப் பதுக்கி,  பத்து மடங்கு விலை ஏத்தி வியாபாரிகள் விற்பனை செஞ்சாங்க. நியாயமான விலையில் உரம் கிடைச்சாலே விவசாயத்தில் போட்ட காசு எடுக்கிறது கஷ்டம்.  இதில், பத்து மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கினா,  கடனை அடைக்கவே ஆயுசு முடிஞ்சுடும். ஏமாத்தி பொழைக்கிற காசு ஒட்டாதுனு முடிவு செய்து,  ‘இங்கு அரசு நிர்ணயம் செய்த விலையில் உரம் விற்பனை செய்யப்படும்னு எழுதிப் போட்டேன். அந்த ஒரு அறிவிப்புக்கு,  என் கடை இருந்த தெரு முடிகிறவரை விவசாயிகள் வரிசை கட்டி நின்னாங்க.

கொள்ளை லாபம் கிடைக்கல. ஆனா, நல்ல லாபம் கிடைச்சது.  அரசு அதிகாரிகளை வைத்து உரம் விற்பனை செய்கிற அளவு ‘கள்ள மார்க்கெட்’ இருந்த காலத்தில், நான் நேர்மையா தொழில் செய்தேன். ஈரோட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த கலெக்டர்,  என்னுடைய கடையைப் பற்றிக் கேள்விப்பட்டு,  கூப்பிட்டுப் பாராட்டினார். உரத் தட்டுப்பாடு முடிஞ்ச அப்புறமும், விவசாயிகள் திரும்ப என் கடைக்கே வந்தாங்க.

உரத் தயாரிப்பில் சென்னையில் உள்ள ‘பேரி அண்டு கம்பெனி’ பெரிய மார்க்கெட் வெச்சிருந்தாங்க. சென்னையில் உயர் நீதிமன்றம் இருக்கிற பகுதிக்கு ‘பாரிஸ்’னு  பேர் வர இந்த நிறுவனம்தான் காரணம். அவ்வளவு பெரிய நிறுவனம்.  சின்ன கடையில் உரம் வாங்கி விற்பனை செய்த என்னைக் கூப்பிட்டு ‘ஏஜென்சி’ கொடுத்தாங்க. அந்தப் பகுதியிலேயே பெரிய அளவுல வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன். இது எல்லாமே நேர்மையா இருந்ததுக்கான பரிசுதான். 

திருப்புமுனையான `வரவேற்பு’!

ஈரோட்டில் ’பேரி’ நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த, வெங்கட்ராமனிடம் ஒரு  நல்ல பழக்கம் இருந்தது. யாரு அவரைச் சந்திக்கப் போனாலும், எழுந்து நின்று வரவேற்று, குடும்ப நலன் விசாரிப்பார். அப்புறம்தான் வணிகம் பற்றி பேசுவார். நான் ஈரோடு போகும்போதெல்லாம் அவரைப்போய் பார்த்துட்டு வருவேன்.

வயதில் மிக இளையவனாகவும், மிகச் சிறிய கடையின் உரிமையாளராகவும் இருந்த என்னை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பெரிய அதிகாரி எழுந்து நின்று வரவேற்பார். கைக்கூப்பி  ‘வாங்க, வாங்க... நல்லா இருக்கீங்களா. வீட்ல எல்லாரும் சௌக்கியமா’னு  முகம் மலர விசாரிப்பார். பெரிய மனுஷன் என்னை எழுந்து நின்னு கைகூப்பி வரவேற்கிறாரேனு பெருமையா இருக்கும்.  ‘நாமளும் இதே மாதிரி நம்ம வாடிக்கையாளர்களை வரவேற்கணும்’னு முடிவு செய்தேன். அதுதான் என் தொழில் வாழ்வில் அடுத்த திருப்புமுனை.

என் கடையில் பத்து ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறவராக இருந்தால்கூட,  எழுந்து நின்று வணக்கம் சொல்லி வரவேற்க ஆரம்பிச்சேன். கிராமத்தில் விவசாயிகளுக்கு அப்படி யாரும் வணக்கம் சொல்லி வரவேற்க மாட்டாங்க. என் புதிய முயற்சிக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு. உரமூட்டையை வண்டியில் ஏற்றும்போது, நானும் உதவி செய்து ஏற்றிவிடுவேன். எவ்விதமான செயற்கைத்தனமும் இல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இதை  செஞ்சேன். எனக்கும் விவசாயிகளுக்கும் இடையில்  ஒரு பாசப் பிணைப்பு வளர்ந்துகிட்டே போச்சு. வேறு கடைக்கு போகிறவர்களையும் சிபாரிசு செய்து, ‘நம்ம கடைக்கு வாப்பா’னு  கூட்டிட்டு வந்தாங்க.

நம்பிக்கையும்…நாணயமும்…

கிராமத்து மனிதர்களுக்கு நம்பிக்கையும் நாணயமும் உயிருக்குச் சமம்.  என் மீது விவசாயிகள் வைத்த நம்பிக்கை எந்தக் காலத்திலும் மாறவே இல்லை.  அறுவடை முடிந்த பிறகு பயிர்களை விற்று வருகிற பணத்தை, அடுத்த ஆண்டுக்கான முதலீடாக சேமித்து வைப்பது வழக்கம். ஏராளமான விவசாயிகளும், அவர்கள் உழைத்து சேர்த்த பணத்தை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தாங்க.

உழைப்பைக் கொட்டி சிறுகசிறுக சேர்த்த கசங்கிய ரூபாய் நோட்டுகளை என் கையில் திணித்துவிட்டு, ‘வேணுங்கிறப்ப வாங்கிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ‘பத்திரம் எழுதிடலாம்’  என்று நான் சொன்னால், ‘பெத்த புள்ள மாதிரி நம்பிக்கொடுக்கிறேன்.  நம்பிக்கையவிட அந்தப் பத்திரம் பெருசா’னு வெள்ளந்தியா சொல்லிட்டு போவாங்க. இதுதான் எனக்குப் பெரியசொத்து.

1972-ம் ஆண்டு ’பேரி கம்பனி’  மாட்டுத் தீவனம், கோழித் தீவனம் விற்பனையைத் தொடங்கினாங்க. விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பும், கோழி வளர்ப்பும் உப தொழில்கள்.  ‘பேரி’ நிறுவனம் என்னை அழைத்து ‘ஏஜென்ஸி’  வழங்கினாங்க. நானும் விவசாயிகளைத் தேடிப்போய் ’மார்க்கெட்டிங்’ செய்தேன்.

நான் அவர்களை உபசரித்ததைவிட, பல மடங்கு அதிகமாக என்னை உபசரித்து, ‘இதுக்குப்போய் கடையை விட்டுட்டு நேர்ல வரணுமா?’ என்று ’ஆர்டர்’ கொடுத்தாங்க. நாம் பிறருக்கு என்ன தருகிறோமோ, அது நமக்குப் பல மடங்காக திரும்பக் கிடைக்கும் என்ற உண்மை புரிஞ்சது. இன்னும் சில பன்னாட்டு நிறுவனங்கள் தீவனங்களை விற்பனைக்குக் கொண்டு வந்து விலை குறைத்து விற்பனை செய்தபோதும், என்னிடமே வாங்கினர்.

நம்பிக்கையின் பலனை நானே அறுவடை செய்யக்கூடாதுனு கருதி,  விவசாயிகளுக்கு நன்மையான விலைத் தரக்கூடிய மற்ற நிறுவனங்களின் ஏஜென்ஸியையும் எடுத்தேன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஏஜென்ஸி எடுத்தவர்கள், மாற்று நிறுவனத்தின் பொருட்களை விற்கக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது வழக்கம்.

விவசாயிகளுக்கு விருப்பமான, லாபம் தரக்கூடிய எல்லாப் பொருட்களையும் விற்பனை செய்வேன்னு உறுதியாக சொன்னேன். என் நிபந்தனைக்கு எல்லா நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன. ஒரேவிதமான பொருளை விற்பனை செய்கிற, 4-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களின் ஏஜென்ஸியை ஒரே நேரத்தில் வைத்திருக்கும் நபராக என் செல்வாக்கு இருந்தது.

வாடிக்கையாளர் நலனில் கவனம்!

நாமக்கல் பகுதியில் கோழி வளர்ப்பு பெரிய தொழிலாக வளரத் தொடங்கியது. மொடக்குறிச்சியில் தொழிலைத் தொடங்கிய நான், ஈரோடு, நாமக்கல் என தொழிலை விரிவாக்கினேன்.  கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு நல்ல உப தொழிலாக மாறியது.

அதன் நுணுக்கங்களை அறிந்துகொண்டு நன்றாக தொழில் செய்ய, விவசாயிகளைத் திரட்டி கூட்டங்களை நடத்தினேன். என்னிடமிருந்து அழைப்பு போனால், வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டத்துக்கு வந்தாங்க. அவர்களுடைய நேரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பயனளிக்கும் ஆலோசனைகளை வழங்க,  அறிஞர்களை அழைத்து விவசாயிகளுக்குப் புரியும்படி கூட்டங்களை நடத்தினேன்.

முதலீடாக சிறு கடன்களை பெற, வங்கிகளுடன் பேசி ஒப்பந்தம் போட்டேன்.  வாடிக்கையாளர்களின் நலனைக் குறித்து அதிகம் சிந்தித்து செயல்பட்டால், தொழில் வளர்ச்சி தானாகவே அமையும். இதுவே என்னுடைய 40 ஆண்டுகால தொழில் அனுபவம்.

பெரிய நிறுவனங்களின் மாட்டுத்தீவனம், கோழித்தீவனம் ஏஜென்ஸி எடுத்து, நானே நேரில் சென்று கேட்டதால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிய விவசாயிகளுக்கு,  நெருக்கடி ஏற்பட்டது. வியாபாரப் போட்டியில் விலையைக் குறைத்துகொடுக்க முன்வந்தவர்கள், பொருளின் தரத்தையும் குறைத்துக் கொள்ளத் தொடங்கினர்.

இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவானது. என்னுடைய வார்த்தையை நம்பி கோழி வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். நிறுவனங்களிடம் சிக்கலை சொன்னால், முறையான பதில் கிடைக்கவில்லை. பாதியில் தொழிலைக் கைவிட்டாலும் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இப்படியே போனால், ’தாயாக பிள்ளையாக’ பழகிய உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சமாக இருந்தது...

- இடைவேளை... நாளை வரை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x