

வனத்தின் ஆதார உயிரினமான யானைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜயாத்திரை நடைபெற்றது. இதையொட்டி, கிராமிய நடனத்துடன் கூடிய வீதி நாடகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அண்மைக்காலமாக மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில், யானை-மனித மோதல்கள் அதிகரித்தபடி உள்ளன. இதனால், மனிதர்கள், யானைகள் என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன.வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் யானைகள் நடமாட்டம் காரணமாக இப்பகுதி மக்களுக்கு யானைகள் மீது கடும் வெறுப்புணர்வும் நிலவுகிறது. இதனால், யானைகளைப் பார்த்தவுடன், வனத் துறையினர் வரும் முன்பே கிராம மக்கள் தாக்கத் தொடங்கி விடுகின்றனர்.
மேலும், சிலர் யானைகளைக் கொல்லும் வகையில், சட்டவிரோதமாக உயர் அழுத்த மின்சார வேலிகளையும் அமைத்து வருவது, பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையைத் தவிர்க்கும் வகையில், வனத் துறையின் உதவியுடன் ‘வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆப் இந்தியா’, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வன உயிரின அறக்கட்டளை சார்பில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கஜயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தின் மலைப் பிரதேசப் பகுதிகளில் யானைகள் இயற்கையின் முக்கிய அங்கம் என்பதை விளக்கும் வகையில், யானைகளின் உருவ பொம்மைகளுடன் இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், யானை-மனித மோதல்கள் அதிகமுள்ள பகுதிகளில், கிராமிய நடனங்களுடன் கூடிய வீதி நாடகங்களும் நடத்தப்படுகின்றன.
இதையொட்டி, மேட்டுப்பாளையம் வந்திருந்த கலைக் குழுவினர், மக்கள் அதிகம் கூடும் பகுதியான பேருந்து நிலையம் எதிரே விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சியை நடத்தினர். இதில், கிராமப்புற நடனங்களுடன், பாடல்களும் பாடப்பட்டு, இயற்கை சங்கிலியில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. `யானைகள் நமது இடத்துக்கு வரவில்லை; நாமே அதன் இடத்தை ஆக்கிரமித்துள்ளோம் ‘ என்றும், ‘ஆறு இல்லையெனில் சோறு இல்லை, காடுகள் இல்லையெனில் ஆறு இல்லை, யானைகள் இல்லையெனில் காடுகள் இல்லை’ என்றும் பிரச்சாரம் செய்து, ஆடல்-பாடலுடன் கூடிய வீதிநாடகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வனம், காவல், மருத்துவம், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.