Last Updated : 22 Feb, 2019 12:21 PM

 

Published : 22 Feb 2019 12:21 PM
Last Updated : 22 Feb 2019 12:21 PM

ஜெர்மனியில் அசத்திய நாமக்கல் மாணவிகள்!

கிராமப்புற பெண்களாலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதை  நிரூபிக்கும் வகையில், ஜெர்மனி சென்று, பயிற்சி ஆட்டத்தில் அந்நாட்டு வீராங்கனைகளை வீழ்த்தியுள்ளனர் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியின்  கால்பந்து அணி மாணவிகள்.பெரிய நகரங்களில், அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடலில் பயிற்சி பெரும் வீரர், வீராங்கனைகள் சாதிப்பதில் பெரிய அதிசயமில்லை.

ஆனால், நாமக்கல்போன்ற சிறிய நகரங்களில், குறிப்பாக, கிராமத்திலிருந்து வந்து, விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவிகள் சாதித்துள்ளது பாராட்டுக்குரியது. இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நாமக்கல் விளையாட்டு விடுதி  கால்பந்து அணி பயிற்சியாளர் எஸ்.கோகிலா கூறியதாவது:

கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த `கோத்தே இன்ஸ்டியூட்’ சார்பில் தமிழகத்தில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என நான்கு மண்டலங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன.

கேத்தே இன்ஸ்டியூட்

திருச்சி மண்டலத்தில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியைச் சேர்ந்த எங்களது கால்பந்து அணியும் விளையாடி வெற்றி பெற்றது.  மண்டல அளவிலான வெற்றியைத் தொடர்ந்து, அதே மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சென்னை அணியை, நாமக்கல் அணி வீழ்த்தியது.

அப்போது, எங்களது மாணவிகளின் திறமையைப் பார்த்து வியந்த ஜெர்மனி `கோத்தே இன்ஸ்டியூட்` இயக்குநர் ஹெல்முட் சிச்சிப்பிரிட், நாமக்கல் மாணவிகள் ஜெர்மனியில் ஒரு வாரம் தங்கி, பயிற்சி பெற ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இதற்கான செலவு முழுவதையும் அந்தப் பயிலகமே ஏற்றது.

“மற்ற விளையாட்டுகள் இருக்கும்போது,  கால்பந்து அணியை மட்டும் தேர்வு செய்வது ஏன்?” என அவரிடம் கேட்டபோது, `இந்தியாவின் தேசிய விளையாட்டான  ஹாக்கியைப்போல, ஜெர்மனியின் தேசிய விளையாட்டு கால்பந்து. எனவே, உங்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறோம்` என்றார். பின்னர்,  முறையான அனுமதியுடன் பெர்லின் சென்றோம்.

ஒரு வாரத்துக்கு அங்கேயே தங்கினோம். பயிற்சியாளரான என்னுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் சென்றோம். எங்களது அணிக்கு,  அந்த நாட்டின் அணியினர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது, அந்நாட்டு பெண்கள் அணியுடன், எங்கள் அணி மோதியது.

namakkal-2jpgஎஸ்.கோகிலாright

இதில், நாமக்கல் அணி 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உள்ளூர் மற்றும் மாநில, தேசிய அளவில் விளையாடிய எங்கள் அணி வீராங்கனைகள், முதன்முறையாக அந்நிய மண்ணில், அந்நாட்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஜெர்மனி குளிர் பிரதேசம் என்பதால், அங்கு உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அளவில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற ஒரே அணி நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவியர்கள். அனைத்து மாணவிகளும் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் படிக்கின்றனர். இந்த ஆண்டு `கோவா நேஷனல்` அமைப்பு  சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், தமிழக மகளிர் கால்பந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதில் 8 மாணவிகள் நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள்தான்.

இதுபோல, ஜெர்மனிக்கு  பயிற்சிக்குச் சென்று திரும்பிய 14 மாணவிகளில், மாரியம்மாள், கவுசல்யா ஆகியோர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கால்பந்து அணியில், நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் 7 பேர் இடம்பெற்றிருந்தனர். `கோலோ  இந்தியா` போட்டியில் 18 வயதுக்கு  உட்பட்டோர் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளில் 6 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள்” என்றார் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x