Last Updated : 08 Sep, 2014 12:10 PM

 

Published : 08 Sep 2014 12:10 PM
Last Updated : 08 Sep 2014 12:10 PM

மூலப்பொருள்கள் விலை உயர்வால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

கருந்திரி, அலுமினிய பவுடர் போன்ற மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதை யொட்டி சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள 780-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் 22-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி, இம்மாத இறுதிக்குள் பட்டாசு உற்பத்தியை முடித்தால் மட்டுமே, அவைகளை விற்பனைக்காக வடமாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க முடியும் என்பதாலும், ஆர்டர்களை உரிய தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்பதாலும் அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப்படும். ஆனால், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான கருந்திரி, அலுமினிய பவுடர் போன்றவை, இந்த ஆண்டு இருமுறை விலையேற்றப்பட்டுள்ளதால் 25 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. இதனால், பட்டாசு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் விநாயகமூர்த்தி கூறும் போது, ‘பட்டாசு தயாரிக்க கருந்திரி மிக முக்கியமானது. அதை தயாரிக்க மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம்பெற்ற பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி கிடையாது.

இதுவரை சட்டவிரோதமாக கருந்திரி தயாரிப்பவர்களிடம் இருந்து கருந்திரி வாங்கி பயன்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன், ஒண்டிப்புலி நாயக்கனூரில் கருந்திரி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் இறந்ததையடுத்து, சட்டவிரோத கருந்திரி தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் எங்களுக்கு கருந்திரி கிடைக்கவில்லை.

ஒண்டிப்புலிநாயக்கனூர் தீ விபத்துக்கு முன் 4 நூல் திரி மற்றும் குரோஸ் ரூ. 22 ஆக இருந்தது. தற்போது ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது. 6 நூல் திரி ரூ. 26-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ. 36-க்கு விற்கப்படுகிறது. ஏற்கெனவே, அலுமினிய பவுடர் 1 கிலோ ரூ.12 என அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிஉப்பு கிலோவுக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது. செலபன் ரீம் விலை ரூ.200 உயர்த் தப்பட்டுள்ளது.

மேலும், லட்சுமி வெடி தயாரிக்க பயன்படும் பழைய காகிதம் விலை கிலோ ரூ. 18-லிருந்து ரூ. 20 ஆக உயர்ந்துள்ளது. சோல்சா வெடி தயாரிக்கப் பயன்படும் புத்தக காகிதம் கிலோ ரூ.26 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் 10 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் நெருக்கடி, பட்டாசு மூலப்பொருள்களின் விலை உயர்வு, கருந்திரிகள் விலை உயர்வு போன்றவற்றால் பட்டாசு உற்பத்தியை முழுமையாக மேற்கொள்ள முடிய வில்லை. இதனால், இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x